சொத்து மதிப்பில் 9 பில்லியன் அதிகரிப்பு: எலான் மஸ்க் சாதனை மேல் சாதனை!
எலான் மஸ்க் 9 பில்லியன் டாலர்கள் சேர்த்துள்ளதாக தகவல்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2017ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் அவரை பின்னுக்குத் தள்ளினார்.
பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமரிக்க டாலர்கள். சமீபத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையடுத்து, பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கிடையே, சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க் 9 பில்லியன் டாலர்கள் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி,
டெஸ்லாவின் பங்கு உயர்ந்ததை அடுத்து மஸ்கின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் உயர்ந்து 167.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. டெஸ்லா பங்குகள் இந்த ஆண்டு 731% உயர்ந்து, வெள்ளிக்கிழமை 695 டாலராக முடிவடைந்தது. அமேசான் நிறுவனர் ஜெஃப்பின் சொத்து மதிப்பு 187.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்த டெஸ்லா நிறுவனம், இப்போது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபத்தை ஈட்டி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை சிறப்பாகவே இருந்து வந்தது. இதனால் தான் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. 2020ஆம் ஆண்டில் குறைந்தது 15 மின்சார வாகன வகைகளை டெஸ்லா நிறுவனம் அறிவித்து வெளியிட்டு வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்கள்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் எலான் மஸ்க் உள்ளார். புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்காவின் முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500 பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. தங்களது போட்டியாளர்களான டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களைவிடக் குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது. கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
தகவல் உதவி: ப்ளூம்பர்க் | தொகுப்பு: மலையரசு