ட்விட்டரால் நெருக்கடிக்கு ஆளான எலான் மஸ்க் - மீண்டும் $3.6 பில்லியன் மதிப்பு டெஸ்லா பங்குகள் விற்பனை!
ட்விட்டர் நிறுவனத்தை பில்லியன்களைக் கொட்டிக்கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், இரண்டாவது முறையாக டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை பில்லியன்களை கொட்டிக்கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், இரண்டாவது முறையாக டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்:
முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஏப்ரல் 4 அன்று ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியதன் மூலமாக அதன் பெரும் பங்குதாரராக மாறினார். இதனையடுத்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ட்விட்டரின் குழுவில் சேர ஒப்புக்கொண்டார்.
ஒரு பங்குக்கு $54.20 க்கு நிறுவனத்தை வாங்க முன்வந்தார் எனினும், டிவிட்டர் தரப்பில் பொய் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மஸ்க்- டிவிட்டர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்ற விவகாரமாகவும் மாறியது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் கெடுவும் விதித்தது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி ட்விட்டரை அதிகாரப்பூர்வமாக எலான் மஸ்க் கைப்பற்றினார்.
ட்விட்டரை வாங்கத் தேவையான $44 பில்லிய டாலர்களில் தனிப்பட்ட முறையில் $21 பில்லியனைத் திரட்டிய எலான் மஸ்க், மீதியைத் திரட்ட டெஸ்லா பங்குகளை விற்றார். ட்விட்டரை வாங்க டெஸ்லா பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், அப்போது மீதி பங்குகளை விற்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், டெஸ்லா பங்குதாரர்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
வீழ்ச்சியில் டெஸ்லா:
மறுபுறம், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து, டெஸ்லா பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்று நிதி திரட்டும் நோக்கில் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்கப்போவதாக சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்திருந்தனர். இதனால், பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.
இதன் காரணமாக கடந்த ஏப்ரலில் டெஸ்லாவின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 126 பில்லியன் டாலர்கள் வரை குறைந்தது தலைப்புச் செய்தியாக மாறியது. மேலும், டெஸ்லாவின் 17 சதவீத பங்குகளின் வைத்துள்ள எலான் மஸ்கிற்கு, அதன் மதிப்பு சரிந்ததால் 40 பில்லியன் டாலர்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
$3.95 பில்லியன் பங்குகள் விற்பனை:
ட்விட்டரை வாங்கியப்பிறகு பணிநீக்கம், ப்ளூ டிக் பெற 8 டாலர்கள் கட்டணம் போன்ற சர்ச்சையான அறிவிப்புகளும் பங்குச்சந்தையில் எலான் மஸ்கின் பங்குகளை பதம் பார்த்தன. தற்போது இரண்டாவது முறையாக டெஸ்லா நிறுவன பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் தாக்கல் செய்த தகவலின்படி,
டிசம்பர் 12 மற்றும் 15 வரையிலான மூன்று நாட்களில் டெஸ்லாவின் பங்குகள் மீண்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விற்பனைக்கான காரணங்களை எலான் மஸ்க் வெளியிடவில்லை.
நவம்பர் 2021 முதல், மஸ்க் சுமார் $40 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தில், ஓராண்டுக்கு முன், 17 சதவீதமாக இருந்த மஸ்க்கின் பங்கு, தற்போது, 13.4 சதவீதமாக சரிந்துள்ளது.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $40 பில்லியன்களை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டரை கையக்கபடுத்துவது தொடர்பாக எலான் மஸ்க் போட்ட திட்டங்கள் அனைத்தும் சொதப்பியதால் உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் பங்குகள், இந்த ஆண்டு முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே மிக மோசமாகச் செயல்படும் பங்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ட்விட்டரின் விளம்பர வருவாய் குறைந்ததை அடுத்து பணியாளர்களை வேலையை விட்டு தூக்கிய எலான் மஸ்க், செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உலகம் முழுவதும் இருந்த ட்விட்டர் நிறுவனங்களை அலுவலகங்களை மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, வாடகை செலவை குறைப்பதற்காக, உலக கோடீஸ்வரர் இப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுப்பு - கனிமொழி
இன்று முதல் மீண்டும் ‘ப்ளூ டிக்’ - ஐபோன் பயனர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஷாக்!