ட்விட்டரை வாங்குகிறாரா? அல்லது ’Super App' உருவாக்கப் போகிறாரா எலான் மஸ்க்?
எலான் மஸ்க் மீண்டும் ட்விட்டரை வாங்குவது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், அவர் தனது ‘எவரிதிங் ஆப்’ என்ற செயலியை உருவாக்க முயற்சிப்பதற்கான காரணம் குறித்து அறியலாம்...
எலான் மஸ்க் மீண்டும் ட்விட்டரை வாங்குவது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், அவர் தனது ‘எவரிதிங் ஆப்’ என்ற செயலியை உருவாக்க முயற்சிப்பதற்கான காரணம் குறித்து அறியலாம்...
ட்விட்டர் Vs எலான் மஸ்க்:
உலகின் நம்பர் பணக்காரரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய புகழ் பெற்ற நிறுவனங்களின் நிறுவனராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க தீர்மானித்தார். ஒட்டுமொத்தமாக ட்விட்டரின் அனைத்து பங்குகளை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக மஸ்க் அறிவித்தார்.
இதுசம்பந்தமான பேரங்கள் அனைத்தும் முடிந்து ட்விட்டரின் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க் அமர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலிக் கணக்குகள் ட்விட்டர் தளத்தில் அதிகமாக உள்ளதாகவும் அது தொடர்பான தரவுகள் ட்விட்டர் தளத்திலும் சரியாக இல்லை என்றும் குற்றச்சாட்டினார்.
அதோடு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்தும் எலான் மஸ்க் திடீரென பின்வாங்கியது, அந்நிறுவனத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மீண்டும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,
"ட்விட்டரை வாங்குவது அனைத்தையும் உள்ளடக்கி இருக்கும் எக்ஸ் செயலியை உருவாக்கும் செயலை வேகப்படுத்தும்," என பதிவிட்டுள்ளார். அனைத்தையும் உள்ளடக்கிய சூப்பர் ஆப் ஒன்றை தயாரிப்பது தொடர்பாக எலான் மஸ்க் அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
சூப்பர் ஆப் என்றால் என்ன?
ஒரு சுவிஸ் ராணுவ கத்தியில் எப்படி திருப்புளி, சிறிய பிளேடு, நக வெட்டி, தகரவெட்டி சிறிய ரம்பம், கத்திரிக்கோல் போன்ற அனைத்தும் இருக்குமோ? அதேபோல் எலான் மஸ்க் குறிப்பிடும் ‘Everything' என்ற சூப்பர் ஆப்பில் மெசேஜ், சோசியல் மீடியாக்கள், இ-காமர்ஸ் சேவை, பணம் அனுப்பும் வசதி ஆகிய அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.
ஆசியாவில் இதுபோன்ற சூப்பர் ஆப்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்குக் காரணம் இங்குள்ள மக்கள் ஸ்மார்ட் போன் வழியாக மட்டுமே இன்டர்நெட் பயன்பாடுகளை பயன்படுத்துவதாகவும் நியூயார்க் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியரும், தொழில்நுட்ப போட்காஸ்ட் "பிவோட்" இன் இணை தொகுப்பாளருமான ஸ்காட் காலோவே தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஆப்-க்கான உதாரணம்:
சீனாவைச் சேர்ந்த சூப்பர் செயலியான WeChat -இல் பயனர்களுக்கு அன்றாடம் தேவையான அனைத்து சேவைகளும் கிடைக்கிறது. WeChat மூலமாக கார் அல்லது டாக்ஸி புக் செய்யலாம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பலாம், ஷாப்பிங்கிற்கான பணம் செலுத்தலாம், யோகா வகுப்பிற்கு புக் செய்வது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளும் இதில் உள்ளது.
ஃபேஸ்புக், (FB), ட்விட்டர் (TWITTER), ஸ்னாப் சாட் (SNAP) மற்றும் பேபால் (PYPL) போன்ற அனைத்து ஆப்களின் பயன்பாடும் வி-சேட் மூலமாக ஒரே இடத்தில் கிடைக்கிறது.
ஆசியாவின் பிற இடங்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள Grab (GRAB) அல்லது ஜப்பானில் உள்ள லைன் போன்ற சூப்பர் ஆப்களை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மஸ்க் சூப்பர் ஆப் உருவாக்க விரும்புவது ஏன்?
ஜூன் மாதம் ட்விட்டர் ஊழியர்களுடனான கேள்வி-பதில் அமர்வின் போது, ஆசியாவிற்கு வெளியே WeChat போன்ற சூப்பர் செயலிக்கு நிகரான பயன்பாடு எதுவும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
"ட்விட்டரின் முக்கிய குறிக்கோள், முடிந்தவரை, உலகின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அடிப்படையில் சீனா உருவாக்கி WeChat-யை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில், இது மிகவும் பயன்படுத்தக்கூடியது மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக உள்ளது. மேலும், நாம் அதை அடைய முடிந்தால் அல்லது ட்விட்டரில் அதை நெருங்கினால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."
ட்விட்டரில் கூடுதல் கருவிகள் மற்றும் சேவைகளைச் சேர்ப்பது மஸ்க் நிறுவனத்தின் உயரிய வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும். என எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ட்விட்டரில் தற்போதுள்ள 237 மில்லியன் பயனர்களின் எண்ணிக்கை குறைந்தது ஒரு பில்லியன் அளவிற்காகவது உயர வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு - கனிமொழி