'பேப்பரால் கட்டப்பட்ட வீடு' - தீப்பிடிக்காத, நீர்ப்புகா இயற்கை வீடுகள் உருவாக்கும் ஆர்கிடெக்ட் ஜோடி!
மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால், தீப்பிடிக்காத, ஒலிப்புகா மற்றும் நீர்ப்புகா தன்மை கொண்ட வலுவான, இலகுரக கட்டுமானப் பேனல்களை உருவாக்கி, நீடித்த மற்றும் இகோ ப்ரெண்ட்லி வீடுகளைக் கட்டி, அசத்துகின்றனர் இந்த ஜெய்பூர் ஆர்கிடெக்ட் ஜோடி.
அபிமன்யு சிங் மற்றும் ஷில்பி துவா ஆர்கிடெக்ட் தம்பதியினர், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்தி, தீப்பிடிக்காத, ஒலிப்புகா மற்றும் நீர்ப்புகா தன்மை கொண்ட வலுவான, இலகுரக கட்டுமானப் பேனல்களை உருவாக்கி, நீடித்த மற்றும் இகோ ப்ரெண்ட்லி வீடுகளைக் கட்டி, அவர்களது கேம் சேஞ்சர் யோசனையுடன், நிலையான வீட்டுவசதிதான் எதிர்காலம் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களான அபிமன்யு சிங் மற்றும் ஷில்பி துவா ஆகியோர் 'ஹெக்ஸ்பிரஷன்ஸ்' (Hexpressions) எனும் அவர்களது புதுமையான முயற்சியின் மூலம் வழக்கத்திற்கு மாறான யோசனையை யதார்த்தமாக மாற்றியுள்ளனர்.
அவர்களின் புதுமையான அணுகுமுறை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்திலிருந்து வீடு கட்டுவதற்கான தேன்கூடு அமைப்பிலான சாண்ட்விச் பேனல்களை தயாரித்து சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத கட்டுமானப் பொருளை உருவாக்குகின்றனர். அதிலும், அவற்றைக் கொண்டு இரண்டு வாரங்களுக்குள் நிலையான வீடுகளை உருவாக்குகின்றன. இந்த வீடுகளும் வியக்கத்தக்க வகையில் மலிவு விலையில் உள்ளன. ஆம், இதன் விலை வெறும் ரூ.6 முதல் 10 லட்சத்தில் கிடைக்கிறது.
மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருந்து தனித்துவமான உறுதியான பேனல்கள் தயாரிக்கப்பட்டு, பின் அவை அறுகோண வடிவங்களில் மடிக்கப்பட்டு, செல்கள் போல அமைக்கப்படுகின்றன. இவை ப்ளைவுட் அல்லது சிமென்ட் ஃபைபர் பலகைகளால் செய்யப்பட்ட இரண்டு பேனல்களுக்கு இடையில் இணைக்கப்படுகின்றன.
பேனல்களின் விளிம்புகளில் கால்வனேற்றப்பட்ட இரும்பு (கால்வனேற்றப்பட்ட இரும்பு என்பது, இரும்பின் மீது துத்தநாகப் பூச்சு பூசப்பட்ட இரும்பு ஆகும். இது, இரும்பை துருப்பிடிக்காமல் பாதுகாக்கும்) அவற்றின் வடிவத்தை பராமரிக்கவும், அதே நேரத்தில் இரும்பு வெற்று குழாய்கள் கூடுதல் கட்டமைப்பு ஆதரவை வழங்குவதற்காக இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் தீப்பிடிக்காத, ஒலிப்புகா மற்றும் நீர்ப்புகா தன்மை கொண்ட வலுவான, இலகுரக கட்டுமானப் பொருளை உருவாக்குகின்றனர்.
"முக்கோணம் அதன் வடிவத்தைத் தக்கவைத்துக் கொள்வதால் கட்டுமானத்தில் மிகவும் வலிமையான வடிவமாகும். ஒரு அறுகோணமானது ஆறு முக்கோணங்களால் ஆனது. அதனால், இது நம்பமுடியாத அளவிற்கு உறுதியானது. இந்த நுட்பமானது வணிக விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. அங்கு அலுமினியத் தாள்கள் அவற்றின் லேசான ஆனால் நீடித்த கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன," என்று ஷில்பி பெட்டர் இந்தியாவிடம் கூறினார்.
ஹெக்ஸ்பிரஷன்ஸ் வீடுகளைக் கட்டப் பயன்படுத்தப்படும் இகோ ஃப்ரெண்ட்லி பேனல்கள் உள்ளூரிலே தயாரிக்கப்படுகின்றன. அதனால், அவற்றை விரைவாக இணைக்க முடியும். கட்டமைப்புகள் அதிர்ச்சியை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைப் பாதுகாப்பானதாக்குகிறது. இக்கட்டுமானப் பொருள் இலகுவானது என்பதால், பாரம்பரிய வீடுகளை விட மிக வேகமாகக் கட்ட முடியும். ஹெக்ஸ்பிரஷன்ஸின் வீடுகள் 190 சதுர அடி முதல் 400 சதுர அடி வரை வெவ்வேறு அளவுகளில் கட்டப்படுகின்றன. "ஒரு சதுர அடியில் 100 கிலோ எடை வரை தாங்க முடியும்," என்கிறார் ஷில்பி.
இந்த வீடுகள் நீடித்து உழைக்கக்கூடியவை அல்ல என்று சிலர் முன்வைக்கும் கருத்துகளை மறுத்து விளக்கமளிக்கும் ஷில்பி கூறுகையில்,
"செல்களுக்கு இடையில் ஆக்ஸிஜன் இல்லை, இது காகிதம் தீப்பிடிப்பதைத் தடுக்கிறது, மேலும், பேனல்கள் தாவர அடிப்படையிலான, நீர்-எதிர்ப்பு பிசினில் நனைக்கப்பட்டு, அவற்றின் அறுகோண செல்கள் ஈ சாம்பலால் நிரப்பப்பட்டு தீத்தடுப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வீடுகளின் இலகுரக தன்மையால், அவற்றை வெவ்வேறு இடங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் எளிதாக கொண்டு செல்லமுடியும். மேலும், பயிற்சி பெற்ற நிபுணர்கள் கட்டமைப்புகளை தளத்தில் இணைக்க அனுப்பப்படுகிறார்கள். வழக்கமான கட்டிடங்களுடன் ஒப்பிடும்போது 80% குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்துடன், இந்த வீடுகள் மலிவு விலையில் மட்டுமல்ல, கணிசமாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளன."
மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் உட்பட 50 கட்டமைப்புகளை நிறுவனம் ஏற்கனவே கட்டியுள்ளது. இப்போது, இந்த ஜோடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 500 பசுமை வீடுகளை கட்ட இலக்கு வைத்துள்ளது.
அபிமன்யுவும் ஷில்பியும் அவர்களது கேம் சேஞ்சர் யோசனையுடன், நிலையான வீட்டுவசதிதான் எதிர்காலம் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: பெட்டர் இந்தியா
கட்டுமானக் கழிவுகளைக் கொண்டு 'பசுமை வீடுகள்' கட்டும் பெங்களூரு நிறுவனம்!