டீலா? நோ டீலா? ‘ஆதாரம் கொடுக்கும் வரை ட்விட்டரை வாங்க மாட்டேன்’ - பின்வாங்கும் எலான் மஸ்க்!
முறையான ஆதாரங்கள் சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்க மாட்டேன் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மஸ்க் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் டுவிட்டரில் 5% மட்டுமே இருக்கிறது என அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது. இங்கு தான் விவகாரம் பூதாகரமானது.
ஆதாரம் கேட்ட எலான் மஸ்க்
டுவிட்டரில் 20 முதல் 25 சதவீதம் வரை ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருப்பதாக மஸ்க் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். மேலும், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்று ட்விட்டர் சார்பில் சொல்லப்படுவதற்கான ஆதாரங்களை இதுவரை நான் பார்க்கவில்லை என மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார்.
பணி நீக்க நடவடிக்கையில் சிஇஓ
அதேபோல், டுவிட்டரின் சிஇஓ பராக் அக்ரவால், டுவிட்டரில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றி வரும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து வருகிறார். இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு பராக் அக்ரவால் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
”கடந்த சில வாரங்களில் நிறைய நடந்திருக்கிறது. இதற்கு தற்போது பகிரங்கமாக விளக்கமளிக்கிறேன். டுவிட்டர் கையகப்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவேன், அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். டுவிட்டருக்கு எது சரியோ அதை செய்வதில் தான் என் எண்ணம் இருக்கிறது.”
டுவிட்டருக்கு நான் தான் பொறுப்பு: சிஇஓ
டுவிட்டருக்கு தற்போதும் நான் தான் பொறுப்பாளி, நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்காக எந்த முடிவை எடுக்கவும் தான் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பராக் அக்ரவால் இதுகுறித்து தெரிவிக்கையில்,
“ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளை தனிப்பட்ட விவரங்களை கண்டறிந்து வெளிப்படியாக உருவாக்க முடியாது. எந்த கணக்குகள் mDAUs என்பது கண்டறிவது மிகவும் கடினம்,” என பதிலளித்துள்ளார்.
பூப் இமோஜி அனுப்பிய மஸ்க்
பராக் அக்ரவால் பதிவிட்ட இந்த பதிவுக்கு,
மஸ்க், ஒரு பூப் இமோஜியை ரிப்ளையாக அனுப்பி இருக்கிறார். மேலும், கணக்குகளின் விவரங்கள் முறையாக அளிக்கப்படாத பட்சத்தில், டுவிட்டரில் விளம்பரதாரர்கள் அளிக்கும் பணத்துக்கு கிடைக்கும் ஆதாயத்தை எப்படி தெரிவிக்க முடியும் என மஸ்க் கேள்வி எழுப்பியதோடு நிதி நிலை ஆரோக்கியம் என்பது மிக அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாட்கள் மற்றும் ஆட்டோமேட்டட் கணக்குகள் குறித்து அறிய மென்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தி இருக்கிறார்.
டுவிட்டர் ஒப்பந்தம் நிறைவேறுமா?
மஸ்க் டுவிட்டரை வாங்குவது என்பது இதன்மூலம் தடைபடுமா என்ற கேள்வி வரலாம். டுவிட்டரை வாங்குவது என்று நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் வசம் வைத்திருந்தார். இந்த நிலையில்,
”ட்விட்டர் பிளாட்ஃபார்மில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பது நிரூபிக்கும் வரை டுவிட்டர் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல மாட்டேன்,” என எலான் மஸ்க் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்த விலையில் ஒரு ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என மஸ்க் குறிப்பிட்டார். மஸ்க் டுவிட்டரை முடிந்த வரை குறைவான விலையில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மஸ்க் "ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு அதே விலையை நீங்கள் செலுத்தி வாங்க முடியாது," என சமீபத்தில் தெரிவித்தார்.