பிரேக்கில் உள்ள 'தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு' வேலைவாய்ப்பை வழங்கும் சங்கரி சுதர்!
சென்னையை தளமாகக் கொண்ட "Overqualified Housewives" என்ற ஸ்டார்ட்அப்பின் நிறுவனரான சங்கரி சுதர், தகுதிவாய்ந்த இல்லதரசிகளின் நேர மற்றும் சூழல் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் நிறுவனங்களுடன், அவர்களை இணைப்பதன் மூலம் அவர்களை மீண்டும் பணியில் சேர உதவி வருகிறார்.
சென்னையை தளமாகக் கொண்ட "Overqualified Housewives" என்ற ஸ்டார்ட்அப்பின் நிறுவனரான சங்கரி சுதர், தகுதிவாய்ந்த இல்லதரசிகளின் நேர மற்றும் சூழல் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் நிறுவனங்களுடன், அவர்களை இணைப்பதன் மூலம் அவர்களை மீண்டும் பணியில் சேர உதவி வருகிறார்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு தகுதிவாய்ந்த மென்பொருள் பொறியாளரான, சங்கரியின் கரியர் சீராய் சென்றுக் கொண்டிருந்தது பிரசவம் எனும் திருப்பத்தை சந்திக்கும் வரை...
கொரோனா தொற்றுக்காலத்தின் போது குழந்தையை பெற்றெடுத்த அவருக்கு அவரது நிறுவனம் போதுமான ஆதரவினை அளித்தாலும், லாக்டவுன், அலுவலக பணி, தாய்மை கடமையென அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை சோர்வாக்கியது.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றடுத்தவர், உடல்நிலை மீண்டும் இயல்பான நிலைக்கு வருவதிலும், பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வைக் கையாள்வதிலும், சோர்வடைந்தார். முடிவாக, 8 வருட தொழில்நுட்பக் கலைஞராகப் பணியினைவிட்டார். இருப்பினும், விஷயங்கள் சரியாகவில்லை.
"வேலையை விட முடிவு எடுத்தபோது எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், எதையும் செய்யாமல் வீட்டுக்குள் முடங்கி எனது திறன்களை வீணடிக்கிறேன் என்ற உணர்வு ஒவ்வொரு நாளும் உருவாகி மேலும் சோர்வடைய செய்தது. அந்த சமயத்தில் ஒரு வித்தியாசமான வெறுமையை உணர்ந்தேன்," என்று கூறினார் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற சங்கரி.
அவருக்கு ஏற்றவாறான பணியினைத் தேடத் தொடங்கினார். ஆனால், பல நிறுவனங்களும் அவரை பணியில் அமர்த்த தயாராக இல்லை. ஃப்ரீலான்சிங் இணையதளங்கள் மூலமாகவும் பணியாற்ற முயற்சித்தார். ஆனால் அங்கும் பெரும் போட்டி நிலவியது.
"திறமைகளை வீணடிக்கிறோம் என்ற உணர்வினால், எப்பொழுதும் கோபமாகவே இருந்தேன். ஒரு நாள், நாளிதழில் ஒன்றில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக தகுதிபெற்ற இல்லத்தரசிகள் இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன். அப்போது தான், இங்கு நான் மட்டும் இந்நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். பட்டம் படித்து குடும்பச் சூழலால் பணிக்கு செல்வதை தவிர்த்த இல்லதரசிகளுக்கு அவர்களது நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் வெகு குறைவாகவே கிடைக்கின்றன," என்று கூறினார்.
தன் சகாக்களுடன் இதைப் பற்றி அவர் விவாதித்த போது, பல பெண்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருப்பதையும், அவர்களின் தகுதிகள் பயனற்று போகின்றன என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார்.
பணியாட்களின் பொறுப்புணர்வு, அழுத்தம் காரணமாக பணியாளர்களின் திறன்கள் தோய்வடைவது மற்றும் பணியில் ஈடுபாடு இல்லாதத்தன்மை பற்றி அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு சிறுசிறு நெகிழ்வுத்தன்மையுடன் பணியில் சிறிது தளர்வினை மட்டுமே எதிர்பார்க்கும் வேலைக்குத் தகுதியான மற்றும் கடினமாக உழைக்க தயாராக இருக்கும் பல இல்லதரசிகள் உள்ளனர். அவர்களை பணிக்கு அமர்த்த பெரும்பாலான நிறுவனங்கள் மறுக்கின்றன. அவர்களது பிரச்னை கண்ணுக்கு புலப்படுவதே இல்லை.
”நிறுவனங்கள் நேரம் மற்றும் பணியிடத்தில் நெகிழ்வுத்தன்மையை வழங்கத் தயாராக இருந்தால், வாய்ப்பைப் பெறத் தயாராக இருக்கும் திறமையான பெண்களுடன் அவர்களை இணைக்க முடியும் என்று தோன்றியது. அவர்களுக்கான பாலமாக செயல்பட எண்ணி 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' எனும் நிறுவனத்தை தொங்கினேன்," என்றார் சங்கரி.
2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட, 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' நிறுவனமானது, பெண்களுக்கு நேரம் மற்றும் பணியிடத்தில் நெகிழ்வுத்தன்மையை வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கும், பணிபுரிய விரும்பும் அதிக தகுதி பெற்ற இல்லதரசிகளுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது.
இதுவரை 26,000க்கும் மேற்பட்ட பெண்கள் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறுநிறுவனங்கள் உட்பட 600 நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இன்றுவரை 600க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2,500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மீண்டும் பணியிடத்தில் சேருவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பிரசவத்தினால் விழும் பணிப்பிரேக்கினை எதிர்த்து போராடுதல்!
'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' நிறுவனத்தை தொடங்கிய சங்கரி, தொடக்கத்தில் LinkedIn ஐப் பயன்படுத்தி சில வேலை வாய்ப்புகளைப் பெற்றார். இருப்பினும், அனைத்து நிறுவனங்களும் பெண்கள் மீது ஒரே மாதிரியான ஈடுபாட்டைக் காட்டவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே சங்கரி ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். அதாவது, பெண்களுக்கு தகுதியான மற்றும் அவர்களுக்கு உகந்த சம்பளத்தை வழங்கும் பணிகளை பெற்றுதர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
அதனால், தரவு செயலாக்கம், மறுவிற்பனை அல்லது காப்பீடு விற்பனையாளர் போன்ற வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுடனும், அதேபோல், மிகக் குறைவான சம்பளத்தை தரும் நிறுவனங்களுடனும் அவர் கைகோர்ப்பதில்லை. ஆரம்பத்தில் உள்ளடக்கம் எழுதுதல், கிராஃபிக் டிசைனிங், சமூக ஊடக மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை பாத்திரங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் போன்ற வேலை வாய்ப்புகளை நல்கிய 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' இணையதளம் இன்று வணிக மேம்பாடு, டெஸ்டிங், திட்ட மேலாண்மை மற்றும் பிற வேலைகளையும் வழங்குகிறது.
"இது பெண்களுக்கு மட்டுமேயான தளம் என்பதாலும், பெண்கள் வேலை தேடுவதாலும், மிகக் குறைந்த ஊதியம் வழங்கலாம் என்று சிலர் நினைத்தனர். அப்படிதான் என்னை அணுகிய ஒருவர், உள்ளடக்க எழுத்தாளரைத் தேடுவதாகவும், மாதம் ரூ.5,000 சம்பளம் தருவதாகவும் கூறினார். மறுவிற்பனையாளர்கள் அல்லது காப்பீட்டு விற்பனையாளர்களைத் தேடுபவர்கள் இருந்தனர்," என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
முழுநேர பணி அல்லது ஃப்ரீலான்சிங் பணி என பெண்கள் அவர்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷனை வழங்குகிறது தளம். அவர்களால் 8-9 மணிநேரம் பணி செய்ய முடியும் என்றால், அவர்களுடைய விண்ணப்பம் வேறு வழியில் செயலாக்கப்படுகிறது.
Linkedin தவிர, அதிக தகுதி பெற்ற இல்லத்தரசிகள், வேலை தேடும் பெண்களை உள்வாங்குவதற்காக, தளமானது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றது.
"ஆர்வமுள்ள பெண்கள் எங்களது இணையதளத்தில் அவர்களது ரெசியூமுடன் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் அனுபவங்கள் மற்றும் பிற விவரங்கள் மற்றும் தொழில் முறிவுக்கான காரணங்களை பட்டியலிட வேண்டும். இணையதளத்தின் தரவின் அடிப்படையில், அவர்களது தேவை மற்றும் திறன்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களை நிறுவனங்களுடன் இணைக்க அழைப்புவிடுக்கிறோம்.
ஒருமுறை பிஹெச்டி படித்த பெண் ஒருவர் வேலைத் தேடி பதிவு செய்திருந்தது வருத்தத்தை அளித்தது. அவர்கள் குறிப்பிட்ட கல்வி மையத்தையோ அல்லது கல்வியையோ தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் விண்ணப்பித்தால், அவர்கள் வேண்டும் நேர நெகிழ்வு கிடைப்பதில்லை. அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. படிப்பதற்காக வெளியூர்களுக்கு பெண்களை அனுமதிக்கும் குடும்பத்தார், அவர்களை பணிபுரிவதற்காக வெளி ஊர்களுக்கு அனுப்ப மறுக்கிறார்கள்" என்று பகிர்ந்தார்.
பணிப்பிரேக்கிற்கு பின்னான திறன் மேம்பாடு...
சங்கரியின் கூற்றுப்படி, பெண்கள் அவர்களது குழந்தைகளை பராமரிப்பதை அவர்களின் முதன்மைக் கடமையாக கொண்டிருப்பதாலும், "வளர்ப்பவர், பராமரிப்பவர்" என்ற மனநிலையில் இருப்பதாலும், "அதிக தகுதி" பெற்றிருந்தாலும் பெண்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றார். நிறுவனங்கள் மகப்பேறு சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பெண்கள் குழந்தைகளைப் பெற்றவுடன் வேலை செய்வதில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக சில நிறுவனங்கள் நம்புகின்றன. சில நிறுவனங்கள் பெண்களுக்கு குழந்தை இருந்தாலே அவர்களது ரெசியூமை நிராகரிக்கின்றன. சில உத்யோகங்களை தேடுவதற்கு நேரம் எடுக்கும் என்று சங்கரி ஒப்புக்கொள்கிறார்.
சில சமயங்களில் பெண்கள் தங்கள் தேவைகளுக்கு பொருந்தும் பணியைக் கண்டுபிடிப்பதற்கு சில மாதங்கள் எடுக்கும். இந்த சூழலில் தான் 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' அவர்களுக்கு உதவுகிறது. அதிக தகுதியுள்ள இல்லத்தரசிகள், பிரசவ ஓய்வு உட்பட பணிப்பிரேக்கினால் துறையில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களது திறன் இடைவெளியை குறைக்க துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த அறிவையையும், திறனையும் பெறுவதற்காக, இவர்கள் அதன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களால் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
பெண்கள் பணிபுரிவதால் அடையும் நிதி சுதந்திரம்...
'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' போன்ற தளங்கள் பெண்களுக்கு வேலை தேட உதவுவது மட்டுமல்லாமல், பணியிடத்தில் இருந்து நீண்ட இடைவெளியில் எடுப்பதால் அவர்கள் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவுகின்றன.
பொறியியல் பட்டம் பெற்ற இல்லத்தரசியான பாக்கியஸ்ரீ, கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள அவரது குடும்பம் அழுத்தம் கொடுத்ததால், பணியிலிருந்து விலக நேர்ந்துள்ளது. ஏழு ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு, அவர் தனது சுய மதிப்பைக் கண்டுபிடிக்க முயன்றார். கற்பிப்பாளராக பணியில் இணைந்த அவருக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படாததால், பணிபுரிய வேண்டுமென்ற அவருடைய உற்சாகத்தை குறைத்தது. அந்த சமயத்தில் தான் 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' பற்றி கேள்விப்பட்டுள்ளார்.
"ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ் பற்றி அறிந்து இணையத்தில் பதிவு செய்தேன். நான் எதைத் தேடுகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை, ஆனால், எனது தகுதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு வேலையைக் கண்டறிய ஒவ்வொரு அடியிலும் குழு என்னைக் கைப்பிடித்து சென்று உதவியது. அவர்கள் ஒரு நிறுவனத்துடனான நேர்காணலை ஏற்பாடு செய்தனர். எனது வாழ்க்கையை புதிதாக தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தனர்," என்றார் தளத்தின் பயனாளரான பாக்கியஸ்ரீ.
சென்னையைச் சேர்ந்த மார்கெட்டிங் டெக்னாலஜி நிறுவனமான 7 ஈகிள்ஸின் நிறுவனர் அஷ்கர் கோம்ஸ், இத்தளத்தில் இருந்து 3 பெண்களை பயிற்சியாளர்களாக பணியில் நியமித்துள்ளார். இன்டெர்ன் காலத்திற்குப் பிறகு, அவர்கள் முழுநேர ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
"பெண்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஒரு மாத காலம் அவர்களுக்கு வழிகாட்டும் குழு தலைவர்களுடன் பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மீண்டும் பணியில் சேர ஆர்வமுள்ள பெண்களை நாங்கள் வரவேற்கிறோம். சமூக ஊடகங்களில் அவர்களின் திறமைகள், நோக்கங்கள் மற்றும் திறன்களைப் பற்றி ஏற்கனவே பேசி வருகிறோம். ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ் தளத்தில் இருந்து அதிகமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார் அஷ்கர் கோம்ஸ்.
எதிர்காலத்தில் தளத்தில் அதிகப்படியான இல்லதரசிகளையும், அவர்களுக்கு பணி வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கத்தில் பணியாற்றி வருகிறார் சங்கரி. மேலும், பணிப்பிரேக்கினால் ஏற்படும் திறன் இடைவெளியை குறைப்பதற்காக மறுதிறன் திட்டங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். பெண்களை பணியாளர்களாக ஆக்குகுவதுடன், அவர்களை தொழில்முனைவர்களாக மாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
"ஒரு பெண் தொழில் முனைவராக மாறுகையில், அவர் மற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவார். இது ஒரு தன்னிறைவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும்," என்று கூறி முடித்தார்.
தமிழில்: ஜெயஸ்ரீ | தமிழில்: ரேகா பாலகிருஷ்ணன்
2-ம் இன்னிங்ஸிலும் உயரலாம்! - ‘கரியர் பிரேக்’ எடுத்த பின் சாதித்த இரு பெண்கள்!