மகளின் இட்லி ஆசையால் 24மணி நேரம் இட்லி தயாரிக்கும் ரோபோ இயந்திரம் உருவாக்கிய தொழில்முனைவர்!
உடல்நலம் சரியில்லாத போது, தன் குழந்தை கேட்ட இட்லியை வாங்கித் தர இயலவில்லையே என்ற தேடல், பொறியாளர் சரணை இன்று தொழில்முனைவோராக மாற்றியுள்ளது.
சிறிய குழந்தைகளுக்கும், உடல்நலம் இல்லாதவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதல் திட உணவுகளில் ஒன்று இட்லி. ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி விரைவாக ஜீரணமாகி விடுவதோடு, சத்துக்களையும் உள்ளடக்கியது. இதனால்தான் பெரும்பாலான வீடுகளில் காலை நேர உணவாக இட்லி கட்டாயம் இருக்கும்.
வீட்டில் சரி, ஹோட்டலில் இட்லி எப்போதும் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். அதற்கு டிமான்ட் அதிகம் என்பதால் சீக்கிரம் விற்றுத் தீர்ந்துவிடும். 24 மணி நேரமும் இட்லி கிடைத்தால் எப்படி இருக்கும் என பெங்களூருவைச் சேர்ந்த சரண், கடந்த 2016ம் ஆண்டு நள்ளிரவில் இப்படித்தான் இட்லியைத் தேடி அலைந்து திரிந்தார்.
உடல்நலமில்லாத அவரது ஐந்து வயது மகள், நள்ளிரவில் திடீரென இட்லி சாப்பிட ஆசையாக இருக்கிறது எனக் கேட்க, மகளின் ஆசையைத் தீர்த்து வைக்க தெருத் தெருவாக இட்லியைத் தேடி அலைந்திருக்கிறார் சரண். குளிர்காலமான அப்போது ஒரு இடத்தில்கூட அவருக்கு கிடைக்கவில்லை என்பது அவருக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு, உடல்நலமில்லாதவர்களுக்கு மருத்துவர்களே பரிந்துரைக்கும் உணவு. ஆனால், அவசரத்திற்குக் கிடைக்கவில்லை. ஏன் இந்த நிலை என யோசித்த சரணுக்கு உதித்த யோசனைதான், ‘24 மணி நேரமும் இட்லி’ என்ற திட்டம்.
நிஜத்தில் இது அவ்வளவு எளிதல்ல என்பது பொறியாளரான சரணுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இது பற்றிய ஆராய்ச்சியில் அவர் ஈடுபடத் தொடங்கினார். ஒரே ஒரு இடத்தில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்து இட்லியை விற்பனை செய்தால், அதன் பலன் எல்லோருக்கும் போய்ச் சேராது. எனவே, தொழில்நுட்பத்தின் உதவியோடு தனது திட்டத்தை விரிவாக செயல்படுத்த முடிவு செய்தார்.
இட்லி தயாரிக்கும் ரோபோ
ரோபோக்களின் உதவியோடு இட்லி தயாரிப்பது பற்றி செயல்திட்டம் தீட்டத் தொடங்கினார். இட்லி தயாரிக்கும் ரோபாக்களை எப்படிச் செய்வது என ஆலோசனையில் அவருக்கு அறிமுகமானவர்தான் சுரேஷ் சந்திரசேகர். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள், ஒரு கட்டத்தில் இருவரும் பார்ட்னர்களாக மாறினர்.
“நிச்சயம் எதிர்காலத்தில் உணவுத் துறை ஆட்டோமேட்டாக மாறி விடும். தற்போதைய தலைமுறைக்கு விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதனை அவர்களே சமைத்துச் சாப்பிடுவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. போதிய நேரமில்லை, சரியான வழிகாட்டுதல் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உணவகங்களில் சாப்பிடுவதை அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். எனவே, சமையல்துறைக்கு என பிரத்யேகமாக ரோபோக்களை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம்,” என்கிறார் சுரேஷ்.
மும்பை ஐஐடியில் படித்தவரான சுரேஷ், சரணின் விருப்பத்திற்கேற்ப இட்லி தயாரிக்கும் ரோபோட்டை உருவாக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டு கால உழைப்பில், இந்த நண்பர்கள் தாங்கள் உருவாக்கிய இட்லி தயாரிக்கும் ரோபோட் கம்பெனிக்கு ’ஃபிரெஷ்ஹாட் ரோபோட்டிக்ஸ்’ ‘Freshot Robotics' எனப் பெயரிட்டுள்ளனர்.
தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை முயற்சியாக இந்த ரோபோட்டை பயன்படுத்தி வரும் இவர்கள், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
“எங்கள் ஃப்ரெஷ்ஹாட் ரோபோட்டிக்ஸின் சிறப்பம்சம் இது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக்காக செயல்படுவதுதான். இதன் மூலம் தூய்மையான அதே சமயத்தில் ஆரோக்கியமான இட்லிகளை எந்த நேரத்திலும் சுடச்சுட பெற முடியும். சரண் இந்த ஐடியாவை முதலில் என்னிடம் கூறியபோது, பெரும்பாலான வேலைகளை தானே செய்து விடும்படியான ரோபோட்டை வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் சுரேஷ்.
இந்த ரோபோட் மாதிரியை உருவாக்க இதுவரை சுமார் ரூ.2 கோடி வரை செலவு செய்துள்ளனர் சரணும், சுரேஷும். தற்போது மூன்று ரோபோட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு பெங்களூருவில் இந்த மூன்று ரோபோட்களைக் கொண்டு முதலில் தங்களது ப்ரெஷ்ஹாட் அவுட்லெட்களை அவர்கள் திறக்க உள்ளனர்.
“எங்களது ஃப்ரெஷ்ஹாட்டிற்கு ஹோட்டல் போன்று அதிக இடம் தேவையில்லை. ஏடிஎம் போன்ற சிறிய இடத்தில் எங்களது ரோபோட்டை செட் செய்து விடுவோம். கடையின் உள்ளே தரப்பட்டிருக்கும் பார்கோட்-ஐ ஸ்கேன் செய்தால், விலைப்பட்டியல் உங்களது மொபைல் போனிற்கு வந்து விடும். அதில் தேவையானவற்றை ஆர்டர் செய்து, அதற்கான பணத்தை ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை அங்கிருக்கும் கேமரா போன்ற கருவியிடம் காட்ட வேண்டும். பிறகு நீங்கள் செலுத்திய பணத்திற்கான இட்லியை சுடச்சுட சாம்பார், சட்னி மற்றும் வடையுடன் பார்சலாக பெற்றுக் கொள்ளலாம்.”
நீங்களே நேரடியாக பணத்தை செல்போன் மூலம் செலுத்துவதால், இடையில் வேறு யாருடைய குறுக்கீடும் இருக்காது. இதன்மூலம் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. முழுக்க முழுக்க இயந்திரங்களுடன் மட்டுமே பரிவர்த்தனை என்பதால், நோய்க்கிருமி பரவல் பயமும் இல்லை, என்கிறார் சுரேஷ்.
ஒரே சமயத்தில் 72 இட்லிகளை வேகவைக்கும்படியாக இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் இந்த ரோபோட்டை நிறுவினாலும், அவற்றின் மொத்த கண்ட்ரோலையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்கும்படியான அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் ரோபோட்டில் மாவு, சாம்பார் அல்லது சட்னி என எது காலியானாலும், அது இவர்களது கண்ட்ரோல் அறைக்கு தகவல் தெரிவித்து விடும். உடனடியாக தங்களது ஊழியர்களை அங்கு அனுப்பி காலியானதை மீண்டும் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஆரம்பத்தில் வெறும் இட்லியை மட்டும் தயாரிப்பதாகத்தான் ஐடியா செய்தோம். ஆனால், வடையும் சேர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் விரும்புவதை ஆர் அண்ட் டியில் தெரிந்து கொண்டோம். எனவே அதையும் சேர்த்து விட்டோம். அதோடு சாக்லேட், பெரிபெரி, நட்ஸ் என பலவிதமான சுவைகளில் டாப்பிங் செய்யப்பட்ட இட்லிக்களையும் தருகிறோம்.
“இப்போதைக்கு வடை, சாம்பார், சட்னி போன்றவற்றை தனியாக நாங்களே தயார் செய்து அதனை எங்கள் ரோபோட்டின் உள்ளே வைத்து விடுகிறோம். அந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாத அளவிற்கு, சரியான தட்பவெப்பநிலை உள்ளே இருக்கும். இனி வரும் காலங்களில் இவற்றையும் ரோபோவே தயார் செய்வதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்,” என்கிறார் சுரேஷ்.
மருத்துவமனைகள், பெரிய அப்பார்ட்மென்ட்கள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களில் ஃப்ரெஷ்ஹாட் இட்லி அவுட்லெட்களை நிறுவத் திட்டமிட்டுள்ளனர். சுலபமாக விளங்கும்படி கூறுவதென்றால், ஏடிஎம் மாதிரி தான் இவர்களது கடையும். ஏடிஎம்மில் காசு வருகிற மாதிரி இங்கு சுடச்சுட இட்லி கிடைக்கும். நான்கு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பார் என ஒரு பார்சலுக்கு ரூ. 60 என விலை நிர்ணயித்துள்ளனர்.
இந்த புதுமையான முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு, இப்போதே பல்வேறு நகரங்களில் இருந்து Freshot கிளைகளைத் திறக்க பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம். எனவே எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் விரிவு படுத்தும் திட்டத்துடன் இருக்கிறார்கள் சரணும், சுரேஷும்.