பட்டுப்புடவைகளை ஆன்லைனில் விற்பனை: நெசவாளார்களின் வாழ்வை மேம்படுத்தும் பிரியங்கா!
பிரியங்கா குலே கட்கர் தொடங்கியுள்ள MySilkLove ஸ்டார்ட் அப் நெசவாளர்களிடம் நேரடியாக வாங்கி தரமான புடவைகளை ஆன்லைன் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதுடன் நெசவாளர்களின் வாழ்க்கை மேம்படவும் உதவுகிறது.
2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் MySilkLove என்கிற கைத்தறி பட்டுப்புடவைகளுக்கான ஆன்லைன் போர்டல் தொடங்கினார் பிரியங்கா குலே கட்கர். நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்பதே இவரது நோக்கம்.
“நாங்கள் நேரடியாக நெசவாளர்களிடமிருந்து வாங்குகிறோம். இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த விலையில் எங்களால் விற்பனை செய்யமுடிகிறது. வீடியோக்கள் மூலமாகவும் லைவ் அழைப்புகள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளின் தரத்தையும் நிறத்தையும் சரிபார்த்துக்கொள்ள உதவுகிறோம்,” என்கிறார் 27 வயதான பிரியங்கா.
இந்த போர்டலின் முக்கிய சிறப்பம்சம் பற்றி அவர் குறிப்பிடும்போது,
”வாடிக்கையாளர்கள் புடவைகளை மாற்றிக்கொள்ள நினைத்தாலோ திருப்பியளிக்க நினைத்தாலோ அதை செய்துகொள்ளும் வசதியை நாங்கள் வழங்குகிறோம். குறிப்பாக எந்தவித கேள்வியும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஒரே பட்டுப்புடவை பிராண்ட் MySilkLove மட்டுமே,” என்றார்.
புனேவைச் சேர்ந்த இந்த மின்வணிக ஸ்டார்ட் அப் நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களிடமிருந்து கைத்தறி பட்டுப்புடவைகள் வாங்குகிறது. ஒரு மாதத்திற்கு 1,500 மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. 2,500 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரை உள்ள புடவைகள் இங்குக் கிடைக்கின்றன.
“சரியான நேரத்தில் டெலிவர் செய்வது, தரமான தயாரிப்புகளை வழங்குவது, பழங்கால புடவைகளுக்கு புது வடிவம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தரமான தயாரிப்புகளை கொண்டு சேர்க்க விரும்புகிறோம். ஆன்லைனில் உலக மக்களை சென்றடையவேண்டும் என்பதே MySilkLove நோக்கம்,” என்கிறார் பிரியங்கா.
வளர்ச்சிப் பயணம்
2019-ம் ஆண்டு தீபாவளி விடுமுறையின்போது பிரியங்கா தென்னிந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்யும் இடங்களைப் பார்வையிட்டார்.
“புடவையின் தரத்தைப் பார்த்து பிரமித்துப்போனேன். ஒரே ஒரு புடவையைத் தயாரிக்க நெசவாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் அ,வர்களது உழைப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். 10 நாட்கள் செலவிட்டுத் தயாரிக்கப்படும் ஒரு புடவைக்கு மிகக்குறைந்த வருமானமே அவர்கள் கைக்குக் கிட,க்கிறது,” என்று பிரியங்கா விவரித்தார்.
பிரியங்கா நெசவாளர்களிடம் ஆன்லைனில் விற்பனை செய்யும் யோசனை குறித்துப் பேசியுள்ளார். அவர்களுக்கு இதில் பல கசப்பான அனுபவங்கள் இருந்துள்ளன. இதனால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளனர்.
”இவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் விற்பனை செயல்பாடுகள், டெலிவரி, மார்க்கெட்டிங் என பிரச்சனைகளை சந்தித்துள்ளார்கள்,” என்கிறார்.
இந்திய கைவினைஞர்களை ஒருங்கிணைக்கும் தளம் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்தார்.
“நெசவாளர்கள் தரமான புடவைகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தினால் போதும். போட்டோஷூட், விளம்பர வேலைகள், புடவைகளை வாங்கிக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் டெலிவர் செய்வது என அனைத்தையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்,” என்கிறார்.
MySilkLove ஏழு பேர் கொண்ட குழுவாக செயல்படுகிறது. இவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களுக்குப் பயணித்து நெசவாளர்களை சந்திக்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் பனாரஸ், கர்நாடகாவில் பாகல்கோட், மகாராஷ்டிராவில் யோலா, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுடன் இணைந்து பட்டுப்புடவைகளை வாங்குகின்றனர்.
MySilkLove தளத்தில் இணைந்திருக்கும் நெசவாளர்களின் சராசரி மாத வருவாய் 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்.
நிறுவனரின் பின்னணி
பிரியங்கா பொறியியல் பட்டதாரி. மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார்.
”MySilkLove தொடங்குவதற்கு முன்பு XpressBees லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப்பில் பணிபுரிந்து வந்தேன். இதனால் MySilkLove தொடங்குவது எளிதாக இருந்தது. XpressBees நிறுவனத்தில் பணிபுரிந்ததால் ஒட்டுமொத்த மின்வணிக செயல்பாடுகள் குறித்த புரிதல் இருந்தது. இந்த அனுபவம் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. தளத்தை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 50 நெசவாளர்களுடன் செயல்படத் தொடங்கிவிட்டோம்,” என்கிறார்.
பிரியங்காவின் கணவர் வினாயக் கட்கர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். பிரியங்காவின் வணிக முயற்சியில் மார்க்கெட்டிங் தொடர்பான பணிகளில் இவர் உதவுகிறார்.
”சுயநிதியில் இயங்கி வரும் எங்கள் நிறுவனம் லாபகரமாகவே செயல்பட்டு வருகிறது. என்னுடைய தனிப்பட்ட சேமிப்புத் தொகையான 1 லட்ச ரூபாயை முதலீடாகக் கொண்டு MySilkLove தொடங்கினேன்,” என்கிறார் பிரியங்கா.
வாடிக்கையாளர்கள்
25 முதல் 50 வயதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு MySilkLove செயல்படுகிறது. டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவு ஆர்டர்கள் வருகின்றன, என்கிறார்.
“கைத்தறி ஆடைகளைப் பெண்கள் விரும்பினாலும் வாங்குவதற்கு சரியான தளம் இல்லாததும் நம்பகத்தன்மையும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வளித்து ஃபேஷனை மறுவரையறை செய்யும் அதேசமயம் கைவினைஞர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்கிறார்.
இந்த ஸ்டார்ட் அப் 8,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்துள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட ஆர்டர் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
வீடியோ மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி, வாட்ஸ் அப் சப்போர்ட், எந்தவித கேள்விக்கும் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லாமல் திருப்பியளிக்கவோ மாற்றிக்கொள்ளவோ ஏற்பாடு செய்யும் அம்சம் போன்றவையே MySilkLove தனித்துவமான சிறப்பம்சங்கள்.
வருங்காலத் திட்டங்கள்
“2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 3.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். இந்த நிதியாண்டில் 4.5 கோடி ரூபாய் வருவாயை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்,” என்கிறார் பிரியங்கா.
உள்ளூர் கடைகள் போலல்லாமல் இந்தத் தளம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஏராளமான சாய்ஸ் வழங்குவதாக பிரியங்கா சுட்டிக்காட்டினார்.
“வாடிக்கையாளர் ஒரு புடவை வாங்க விரும்பினால் அருகிலிருக்கும் கடைக்குச் செல்வார். அங்குள்ள 100 புடவைகளில் ஒன்றை அவர் தேர்வு செய்யவேண்டும். ஆனால் எங்களிடம் 3,000-க்கும் மேற்பட்ட புடவைகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்,” என விவரித்தார்.
வரும் நாட்களில் குர்த்தி, ஸ்டோல், இதர டிசைனர் ஆடைகள் என தயாரிப்புகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“எங்கள் வலைதளம் மூலமாக மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். மொத்த விற்பனையில் காஞ்சிபுரம் புடவைகள் 60 சதவீதமும் பனாரஸ் புடவைகள் 20 சதவீதமும் பைதானி, பட்டோலா போன்றவை 20 சதவீதமும் பங்களிக்கின்றன,” எனும் பிரியங்கா தற்போது நிதி திரட்டும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா