சிறிய அறையில் தொடங்கி ரூ.1000 கோடி ஸ்நாக்ஸ் நிறுவனம் உருவாக்கிய தொழில் முனைவர்!
உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் சீஸ் பால்ஸ் வரை தயாரிக்கும் இந்த ஸ்நாக்ஸ் நிறுவனம் தொடங்கிய முதலாண்டு 22 லட்ச ரூபாய் இருந்த வருவாய், மூன்றாமாண்டில் 7 கோடியாக உயர்ந்தது.
அமீத் குமாத் தொழில்முனைவில் ஈடுபடத் தீர்மானித்தபோது அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்நாக்ஸ் துறையில் பணியாற்றியபோதும் கெமிக்கல் தயாரிப்பில் ஈடுபட முடிவெடுத்தார்.
ஓராண்டிற்குள்ளாகவே 6 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்தார். இதனால் வணிக செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டார். அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டார்.
ஒருமுறை திடீரென்று பெப்பி சீஸ் பால்ஸ் அவரது கவனத்தை ஈர்த்தது.
இந்தூர் சந்தையில் ஸ்நாக்ஸ் பிரிவு அதிகம் செயல்படவில்லை என்பதை அமீத் உணர்ந்தார். எனவே சீஸ் பால்ஸ் போன்ற ஸ்நாக்ஸை வடக்கு மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளில் சில்லறை வர்த்தகம் செய்யலாம் என எண்ணினார். இந்தூரில் லாஜிஸ்டிக்ஸ் வசதியும் சிறப்பாகவே இருந்தது.
2002-ம் ஆண்டு அமீத்தும் அவரது சகோதரர் அபூர்வாவும் இந்தத் திட்டம் குறித்து அவர்களது நண்பரான அர்விந்த் மேத்தாவுடன் பகிர்ந்துகொண்டனர். ஸ்நாக்ஸ் நிறுவனம் தொடங்க 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.
“நிறுவன முயற்சி வெற்றியடையாமல் போனால் பணத்தைத் திருப்பித் தருவதாக நாங்கள் உறுதியளித்தோம். அவரும் சம்மதித்தார். 2003-ம் ஆண்டு இந்தூரின் நவ்லாகா பகுதியில் 100 சதுர அடி கொண்ட சிறிய அலுவலகம் ஒன்றில் நாங்கள் மூவரும் இணைந்து செயல்படத் தொடங்கினோம். அந்த சமயத்தில் `பிரகாஷ் ஸ்நாக்ஸ்’ என்கிற எங்களது பிராண்ட் பெயரில் சீஸ் பால்ஸ் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டோம்,” என்றார் அமீத்.
இந்த முயற்சி பலனளித்தது. இந்த முறை அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. சந்தையில் சீஸ் பால்ஸ் தேவை இருந்தது. சிறிய அலுவலகத்திலிருந்து செயல்பட்டபோதும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.
முதலாமாண்டு 22 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. மூன்றாமாண்டில் வருவாய் 7 கோடி ரூபாயாக உயர்ந்தது.
பிரகாஷ் ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் அறிமுகப்படுத்தியது. அத்துடன் ‘யெல்லோ டயமண்ட்’ நம்கீன் பிராண்டும் உருவானது. 2010-ம் ஆண்டு பிரதாப் ஸ்நாக்ஸ் இணைக்கப்பட்டு விரைவிலேயே அதன்கீழ் பிரகாஷ் ஸ்நாக்ஸ் வாங்கப்பட்டது.
2017-ம் ஆண்டு இந்நிறுவனம் NSE மற்றும் BSE-ல் பட்டியலிடப்பட்டது. இதன் ஐபிஓ 47 மடங்கு அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது. இன்று பிரதாப் ஸ்நாக்ஸ் பெரியளவில் ஸ்நாக்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஒன்பது தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இருப்பு வைத்திருப்போர் 240 பேருடனும் விநியோகஸ்தர்கள் 4,100 பேருடனும் விரிவான விநியோக நெட்வொர்க் கொண்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிரதாப் ஸ்நாக்ஸ் 1,079.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
பிரதாப் ஸ்நாக்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ அமீத் எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக உரைடாடலில் தனது வெற்றிப்பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: நீங்கள் சந்தித்த ஆரம்பகட்ட சவால்கள் என்ன? அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது?
அமீத்: நாங்கள் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் செயல்பட்டு வந்தன. சந்தை அளவு சிறியது என்பதால் செயல்படத் தொடங்குவது கடினமாக இருந்தது. இதுவே மிகப்பெரிய தடையாக இருந்தது.
எங்களது போட்டியாளர்கள் கவனிக்கத் தவறியவர்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அந்தப் பகுதிகளில், குறிப்பாக் லாஜிஸ்டிக்ஸ் வசதி எளிதாகக் கிடைக்கக்கூடிய் பகுதிகளில் செயல்படுவதில் கவனம் செலுத்தினோம். அதன் பிறகு படிப்படியாக மற்ற பகுதிகளிலும் விரிவடைந்தோம்.
நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பேக்கிலும் அதிக ஸ்நாக்ஸ் இருப்பதை உறுதி செய்கிறோம். அதேசமயம் சுவையிலும் தரத்திலும் சற்றும் சமரசம் செய்து கொள்வதில்லை. வணிகத்தை வலுப்படுத்தி திறம்பட செயல்பட இந்த அமசங்களே உதவியது.
இன்றளவும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது வணிக மாதிரி என்ன? உங்களது தனித்துவமான வணிக உத்திகள் என்ன?
அமீத்: வாடிக்கையாளர்கள் செலவிடும் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடனே வணிகம் தொடங்கப்பட்டது. சந்தையில் செயல்படும் முன்னணி நிறுவனத்தின் தயாரிப்புடன் ஒப்பிடுகையில் 30 முதல் 35 சதவீதம் வரை அதிக அளவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் இருக்கும் வகையில் பேக் செய்யப்பட்டு எங்கள் நிறுவனம் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. மற்ற தயாரிப்புகளுக்கும் இதையே பின்பற்றுகிறோம்.
ஆரம்பத்தில் மும்பை மற்றும் டெல்லியின் நகர்புற சந்தைகளில் எங்களது செயல்பாடுகளை நிலைப்படுத்தினோம். இவையே மேற்கு மற்றும் வட இந்தியாவின் முக்கிய விநியோக மையமாகும்.
அதன் பிறகு கௌஹாத்தியில் தொழிற்சாலை அமைத்து தென்னிந்தியாவிலும் செயல்படத் தொடங்கினோம். வெவ்வேறு பகுதிகளில் திறம்பட சேவையளிக்கும் விதத்தில் திட்டமிடப்பட்டு இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தியாவின் 27 மாநிலங்கள் முழுவதும் விநியோக நெட்வொர்க்கை அமைத்தோம்.
எஸ்எம்பிஸ்டோரி: தயாரிப்பு செயல்முறையை விளக்குங்கள்?
அமீத்: 14 தொழிற்சாலைகளுடன் பிரதாப் ஸ்நாக்ஸ் செயல்படுகிறது. இதில் இந்தூர், கௌஹாத்தி, ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து தொழிற்சாலைகள் எங்களுக்கு சொந்தமானது. கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், காசிபூர், ஹிசர், கர்ஜத் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்குகிறது.
இந்தூரில் உள்ள எங்களது தொழிற்சாலை ஒன்றில் இனிப்பு வகைகளைத் தயாரிக்கிறோம். மற்ற தொழிற்சாலைகளில் உப்பு சுவை கொண்ட மற்ற வகைகள் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்புகளை விநியோகம் செய்யும் திறனை மேம்படுத்தி சந்தையை விரிவுபடுத்த குறைந்த மூலதனத்துடன் வெளியிலிருந்து அவுட்சோர்ஸ் செய்யப்படும் மாதிரியை அதிகம் பின்பற்றி வருகிறோம்.
நாம் இலக்காகக் கொண்டுள்ள சந்தைக்கு எவ்வளவு அருகாமையில் இந்த செயல்பாடுகள் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த மாதிரி அமையும். விரைவாக இருப்பு அளவை மீண்டும் நிரப்ப இது உதவும். இதனால் சரக்கு போக்குவரத்து செலவும் குறையும். 3P மாதிரியினால் லாஜிஸ்டிக்ஸ் செலவு குறைவதுடன் மூலதன செலவும் குறையும்.
மேலும் இந்த வணிக மாதிரி சிறந்த லாபம் ஈட்ட உதவுவதுடன் மூலதனம் திறம்பட பயன்படுத்தப்பட்டு அதன் வாயிலாக ஈட்டப்படும் லாபமும் அதிகரிக்கும்.
எஸ்எம்பிஸ்டோரி: வெவ்வேறு தயாரிப்புகளை எவ்வாறு இணைத்துக் கொண்டீர்கள்?
அமீத்: பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனத்திற்கு யெல்லோ டயமண்ட் பிராண்ட் உட்பட மூன்று பிராண்டுகள் உள்ளன. ரிச் ஃபீஸ்ட் இனிப்பு ஸ்நாக்ஸ் வகைகளுக்கானது. சமீபத்தில் Avadh பிராண்ட் வாங்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமான எஸ்கேயூக்களுடன் வெவ்வேறு வகையான தயாரிப்புகளை உருவாக்கினோம்.
நாங்கள் முதலில் சீஸ் பால்ஸ் தயாரிக்கத் தொடங்கினோம். 2005-ம் ஆண்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்தோம். உருளை சிப்ஸ், அரிசி அல்லது சோளம் சார்ந்த ஸ்நாக்ஸ், Chulbule ஆகியவற்றைத் தயாரிக்கத் தொடங்கினோம்.
2012-ம் ஆண்டு இந்தூரில் ஒரு தொழிற்சாலையை அமைத்து ரிங், நம்கீன், வீல்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம். 2014-ம் ஆண்டு ஸ்கூப்ஸ் அறிமுகப்படுத்தினோம். 2017-ம் ஆண்டு பொதுப்பங்கு வெளியீட்டிற்குப் பிறகு Nachos அறிமுகப்படுத்தினோம்.
எஸ்எம்பிஸ்டோரி: விற்பனை மற்றும் மார்கெட்டிங் செயல்பாடுகளுக்கு உங்கள் நிறுவனம் டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது?
அமீத்: ஸ்நாக்ஸ் உற்பத்திப் பகுதி தற்போது சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. தனித்தேவைக்கேற்ற தயாரிப்புகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது உத்திகளை மாற்றியமைக்க இந்த மாற்றம் தூண்டுதலாக இருந்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. பல்வேறு துறைகளில் வழக்கமாக பின்பற்றப்படும் மாதிரிகளை டிஜிட்டல்மயமாக்கல் மாற்றியமைத்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எஃப்எம்சிஜி துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.
நாங்கள் இலக்காகக் கொண்டுள்ள சந்தைக்கு வெகு அருகிலேயே எங்கள் செயல்பாடுகள் அமைந்துள்ளதால் விரைவாக பொருட்களின் இருப்பு அளவை மீண்டும் நிரப்புவதற்கு உதவுகிறது. சில்லறை வர்த்தகங்களுக்கு நாங்கள் டிஜிட்டல் தளங்களை அதிகம் சார்ந்திருப்பதில்லை. 5 ரூபாய் பேக் அதிகம் வாங்கப்படுகிறது. இதன் மூலமாகவே அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. ஃபேமிலி பேக் வகைகள் வழக்கமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது எதிர்கால திட்டம் என்ன?
அமீத்: இந்திய பேக்கேஜ் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் துறை 55,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. அமைப்புசாரா செயல்பாடுகள் அதிகமுள்ளது. சந்தையில் அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் 40 சதவீதம் பங்களிப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்கைகள் வகுக்கப்படுவதாலும் தொடர்ந்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாலும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே எங்களுக்கான வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளோம். உப்பு சுவை கொண்ட ஸ்நாக்ஸ் பிரிவில் தொடர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறோம். தற்போது செயல்படும் சந்தைகளில் மேலும் விரிவடைந்தும் புதிய சந்தைகளை ஆராய்ந்தும் வளர்ச்சியடைவதை இலக்காகக் கொண்டுள்ளோம். குஜராஜ் மற்றும் அருகாமை மாவட்டங்களில் Avadh வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யவும் விரும்புகிறோம். பின்னர் யெல்லோ டயமண்ட் தயாரிப்புகளை Avadh தளத்தில் இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
எங்களது இனிப்பு ஸ்நாக்ஸ் வகைகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பிரிவிலும் வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளோம். இந்த உணவு வகைகளையும் எங்களது விநியோக நெட்வொர்க் முழுவதும் கொண்டு சென்று வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்த உள்ளோம்.
எஸ்எம்பிஸ்டோரி: தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலால் உங்கள் நிறுவனம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது? நீங்கள் எவ்வாறு நிலைமையைக் கையாள்கிறீர்கள்?
அமீத்: இந்தியாவில் உள்ள எஃப்எம்சிஜி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இந்தத் துறையும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பிரதாப் ஸ்நாக்ஸ் விற்பனையும் மோசமாகவே உள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தயாரிப்புகளை விநியோகம் செய்வதற்கான அனுமதியைப் பெற முயற்சி செய்து வருகிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா