தோற்ற இடத்தில் சாதித்த இன்ஜினியர்கள்: சொந்த முயற்சியால் உருவான சூப்பர் மார்க்கெட் சாம்ராஜ்யம்!
ஆன்லைன் யுகத்தில் பல இளைஞர்களும் கனவு காணும் பிரகாசமான ஐ.டி.வேலையை உதறித்தள்ளிவிட்டு, சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் யுகத்தில் பல இளைஞர்களின் கனவான, பிரகாசமான ஐ.டி.வேலையை உதறித்தள்ளிவிட்டு, சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.டி. துறையில் லட்சங்களில் சம்பளம், 9 டூ 5 ஜாப், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, எக்கசக்க வசதிகள், லோன், கிரெடிட் கார்டு என குவியும் சலுகைகள் என பலவற்றையும் பார்த்து, சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏற்பட்டு வந்தது.
இந்த கதை எல்லாம் கொரோனாவுக்கு முன்பு வரை நன்றாக இருந்தாலும், கொரோனாவுக்கு பிறகு வேலை இழப்பு, ஊதிய குறைப்பு, பணிச்சுமை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி. ஊழியர்கள் அச்சத்தில் மூழ்கியிருக்கின்றனர். இதில் சில நிறுவனங்கள் தப்பினாலும், பல ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை தான்.
இப்படி பிரகாசமான மென்பொருள் துறையை விட்டு வெளியேறிய இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து, தற்போது மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளனர்.
கடப்பா மாவட்டத்தைச் நீரஜ் மென்டா மற்றும் அனில் டோண்டேபு ஆகியோர் SuperK என்ற சூப்பர் மார்க்கெட் செயினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS)-ல் 2012ம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, நீரஜ் மென்டா மற்றும் அனில் டோண்டேபு ஆகிய இருவரும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றினர்.
அனில் ஆரம்பத்தில் ஹைக் மெசஞ்சர் (Hike Messenger) நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அந்த வேலையில் இருந்து வெளியேறிய அவர், தனது சொந்த நிறுவனமான Flabren தொடங்கினார். ஆனால், சில காலங்களிலேயே அதனை அவர் ’பை நியூஸ்’க்கு (By News) விற்று விட்டு, அதே நிறுவனத்தில் வேலை செய்யவும் ஆரம்பித்தார். அதன் பிறகு, அவர் போன்பே (Phonepe) மற்றும் மலேசியாவை தலைமையிடமாகக் கொண்ட Kodiam நிறுவனத்தில் பணியாற்றினார்.
இதற்கிடையில், நீரஜ் ’ஹங்கர் பாக்ஸ்’ (Hunger Box) நிறுவனத்தை நிறுவினார். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், அதனை விற்க நேர்ந்தது. இதனையடுத்து, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல வேலைகளில் பணியாற்றினார்.
தொடர்பில் இருந்த நண்பர்கள் இருவரும், தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உத்வேகத்தைப் பெற்று, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தனர்.
அனிலின் பெற்றொருக்கு சொந்தமாக அரிசி, மாவு மற்றும் காகித ஆலைகள் உள்ளது. நீரஜ் தனது மாமாக்கள் மண்டிகள் நடத்துவதை பார்த்து வளர்ந்தவர். இவை அனைத்துமே உணவு பொருட்கள் சார்ந்து இருந்ததால், உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான பிசினசில் இறங்க இருவரும் முடிவெடுத்தனர்.
"நாங்கள் எங்கள் தாய்நாட்டில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினோம், அதனால் தான் கடப்பாவைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் வியாபாரத்தின் யுக்தியாக கிராமப்புறங்களை தேர்வு செய்தோம். ஏனெனில் அப்பகுதிகளில் பெரு நிறுவனங்கள் தங்களது சூப்பர் மார்க்கெட்டுகளை அமைக்கவில்லை. எனவே கிராமப்புற மக்களுக்குத் தேவையான தரமான பொருட்களை குறைவான விலையில் வழங்கத் தீர்மானித்தோம்.”
அனில், நீரஜ் இருவரும் கடப்பா நகரில் உள்ள என்ஜிஓ காலனியில் தங்கள் முதல் கடையை நிறுவினர். இருவரும் லட்சங்களில் முதலீடு செய்து SuperK என்ற சூப்பர் மார்க்கெட்டை தொடங்கினர். தற்போது இந்த சூப்பர் மார்க்கெட் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் செயினாக மாறியுள்ளது. கடப்பாவை தொடர்ந்து ராயலசீமா முழுவதும் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. தற்போது 35க்கும் மேற்பட்ட SuperK கடைகள் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து அனில் மற்றும் நீரஜ் கூறுகையில்,
“யாராவது உங்களுக்கு உதவுவார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்களே உதவுவது நல்லது. முரண்பாடுகள் மற்றும் தடைகள் எப்போதும் இருக்கும், சிலர் உங்களை கேலி செய்யலாம் அல்லது உங்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால் நம்பிக்கையுடன் கடைசி வரை பாடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்,” என உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
தங்களது இந்த முயற்சிக்கு பலரையும் பங்குதாரர்களாக சேர்த்து வருகின்றனர். இதற்கு ஒருவர் ரூ.9 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். முறையாக பணம் செலுத்துபவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு உரிமையாளரும் மாதத்திற்கு ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை லாபம் ஈட்டுகின்றனர்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி