படித்தது 10வது, படைத்தது ரூ.2000 கோடி மதிப்புள்ள நிறுவனம்!
குழந்தைப்பருவத்து கடின சூழல்களை மீறி தனது ‘சங்கீதா மொபைல்ஸ்’ நிறுவனத்தை மாபெரும் உயரத்திற்கு இட்டுச்சென்ற ஒரு தொழில் முனைவரின் கதை இது...
பெங்களூருவை மையமாகக் கொண்ட தொழில் முனைவர் சுபாஷ் சந்திராவை நீங்கள் காணும் பொழுது, நன்கு படித்த ஒருவர், அற்புதமாக தனது எண்ணங்களை மற்றவர்களிடம் எடுத்துக்கூறும் ஒருவர் என்றே நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் அவர் படித்தது வெறும் 10ஆம் வகுப்பு மட்டுமே. அவரது படிப்பு என்பது வணிகத்தில் அவர் கற்ற பாடங்கள் தான் என்றால் நம்பக்கூட முடியாது.
20 வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளின் தேதிகள், அன்று நிகழ்ந்த ஒப்பந்தங்களின் மதிப்புகள் ஆகியவற்றை எந்தவித சிரமும் இன்றி இவரால் நினைவில் இருந்து கூற முடிகின்றது. அவ்வாறு இவரது வணிகத்திறன் வளர்ந்துள்ளது.
இவரது குழந்தைப்பருவம் அவ்வளவு எளிதாக இல்லை. இவரது 7வது வயதில் தனது அன்னையை இழந்துள்ளார். அதே சமயம் அவரது தந்தையின் தொழிலும் சிறப்பாக நடைபெறவில்லை.
10 ஆம் வகுப்போடு தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தனது தந்தையின் தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார். அந்த தொழில் தான் இன்று ‘சங்கீதா மொபைல்ஸ்’ ஆக வளர்ந்து நிற்கின்றது.
தென்னிந்தியாவில் அலைபேசிகளை கடைக்குச் சென்று வாங்க வேண்டும் எனக் கூறும் அனைவருக்கும் மனதில் நிற்கும் ஒரு பெயர் ‘சங்கீதா மொபைல்ஸ்’. நாடு முழுவதும் 650 கிளைகள், 2000 கோடி வணிகம் என வளர்ந்து நிற்கின்றது இந்நிறுவனம்.
ஆனால் அனைத்து பெரிய நிறுவனங்கள் போல இதன் துவக்கமும் மிகவும் சிறிய இடத்தில் இருந்துதான் துவங்குகிறது. பெங்களூரு ஜேசி சாலையில் இவரது தந்தை 600 சதுரடியில் வீட்டு உபயோகச் சாதனங்கள் மற்றும் வினைல் இசை ரெகார்டுகள் விற்பனை செய்யும் கடையைத் துவங்கினார்.
சிக்கலான துவக்கம் :
சுபாஷ் சந்திராவின் தந்தை நாராயண் ரெட்டி முதலில் விவசாயம் செய்தவர். பின்னர் சென்னையில் விஜய் ஹோம் அப்பளையன்சஸ் என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினார். அதன் பின்னர் அவரை அந்த நிறுவனம் பெங்களூருவிற்கு இடமாற்றம் செய்தது. ஆனால் அங்கு சென்ற மூன்றாவது மாதத்தில் சுபாஷின் அம்மா இறந்துவிட்டார்.
முதலில் 7 வயதான சுபாஷையும் அவரது 5 வயது தங்கையையும் நெல்லூரில் உள்ள தனது பெற்றோரிடம் அனுப்பிவைத்தார் நாராயண். ஆனால் தனது 8 ஆம் வயதில் தந்தையிடமே வந்துவிட்டார் சுபாஷ்.
1973 இல் எனது தந்தை சொந்தமாக ஜேசி சாலையில் வீட்டு உபயோக சாதனங்கள் விற்கும் கடை ஒன்றை திறந்தார். அதன் பெயர் ‘தி மெர்சென்ட்’. ஆனால் வணிகம் அவ்வளவாக வளரவில்லை. எனவே அதனை மூடவேண்டிய சூழல் உருவாகியது.
ஆனால் சுபாஷின் தந்தை முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. மீண்டும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்கும் கடை ஒன்றை திறந்தார். அதன் பெயர் ‘சங்கீதா’. மேலும் அந்த கடையில் இருந்த ஒரு அறையை ஒலி புகா வண்ணம் மாற்றி அமைத்தார். அங்கு வினைல் ரெக்கார்டுகள் கேட்டு வாடிக்கையாளர் வாங்கிச் செல்வதற்காக இந்த ஏற்பாடு.
"சங்கீதாவில் வீட்டு உபயோகச் சாதனங்கள் மற்றும் இசைத்தட்டுக்கள் இரண்டும் விற்பனையானது. கடையை மேலும் இருவரோடு இணைந்து எனது தந்தை துவக்கி இருந்தார். அதற்கு ரூபாய் 20,000 முதலீடும் செய்திருந்தார்," என்கிறார் சுபாஷ்.
ஆனால் மீண்டும் அவரது தந்தைக்கு தோல்வியே மிஞ்சியது. கடையில் உட்புற அலங்காரத்தில் அதிகச் செலவுகள் செய்த காரணத்தால், பொருட்கள் வாங்க முதலீடு போதவில்லை. இதனால் விற்பனை குறைந்து மீண்டும் நாராயண் சிக்கலில் தவித்தார்.
ஒரு சமயம் கடையை விற்க நினைத்தாலும், யாரும் வாங்க முன்வரவில்லை. ஒருவர் பின் ஒருவராக இருந்த இரண்டு கூட்டாளிகளும் பிரிந்து சென்றனர். எனவே கடையின் மொத்த உரிமையும் நாராயண் பெற்றார்.
பல நாட்கள் சுபாஷும் நாராயனும் கடையிலேயே தங்கி, அருகில் இருந்த உணவகங்களில் உணவருந்தி வந்துள்ளனர். ஆனால் தந்தையின் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற வெறி சுபாஷிடம் இருந்தது. சில வருடங்கள் கடையில் உதவி செய்து வந்துள்ளார். இதனிடையே 1982ல் தனது 16ஆம் வயதில் படிப்பை விடுத்து, சங்கீதாவை நடத்தத் துவங்கினார் சுபாஷ்.
அலைபேசிகளின் அறிமுகம் :
"என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என எனது தந்தை விரும்பினார். காரணம் நான் எனது வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன். ஆனாலும் நான் விடாப்பிடியாக படிப்பை விடுத்து சங்கீதாவை நடத்தத் துவங்கினேன்," என்கிறார் சுபாஷ்.
இந்த நேரத்தில் தான் தொலைக்காட்சிகள் சந்தையில் அறிமுகம் ஆயின. சங்கீதா அவற்றை விற்கத் துவங்கியது. அதன் மூலம் கடனில் மூழ்கியிலிருந்த நிறுவனத்திற்கு ஒரு உதவிக்கரம் கிட்டியது. அத்தோடு நில்லாமல் கணினி மற்றும் பேஜர்களையும் விற்கத்துவங்கினார் சுபாஷ். இதன் மூலம் பல்வேறு மின்னணு சாதனங்கள் விற்கும் நிறுவனமாக மாறியது சங்கீதா.
1997ல் முதன் முதலாக இந்தியாவில் அலைபேசிகள் அறிமுகமானது. இந்த புதிய தொழில்நுட்பத்தை தவறவிட சுபாஷ் தயாராக இல்லை.
"அவற்றை பார்த்தவுடன் நான் அவற்றை விற்க வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டேன். முதன் முதலாக நான் விற்ற அலைபேசி சோனி நிறுவனம் தயாரித்தது. அதன் விலை ரூபாய் 35,000. அன்றைய நிலையில் அது மிகவும் அதிகத் தொகையாகும்," என்கிறார் சுபாஷ்.
ஸ்பைஸ் டெலிகாம் மற்றும் ஜேடீ மொபைல்ஸ் நிறுவனங்களோடு சுபாஷ் ஒப்பந்தம் செய்து கொண்டு சிம் கார்டுகள் விற்கத்துவங்கினார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் சங்கீதா நிறுவனம் அதிக வருமானம் பெறத்துவங்கியது.
அந்த நாட்களில் ஒரு ப்ரீபெய்டு சிம் கார்ட் விலை ரூபாய் 4856. இந்த தொகையில் சங்கீதாவிற்கு ரூபாய் 3000 தரகாக கிடைத்தது.
"தரகு அதிகமாக இருந்ததன் காரணம், அந்நாட்களில் சிம்கார்ட் விலை அதிகமாக இருந்தது, எனவே புதிய வாடிக்கையாளர்கள் பெறுவது மிகவும் சிரமாக இருந்தது. ஒரு நிமிடம் பேசுவதற்கு கைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ரூ.16.80 வசூலித்தனர். எனவே வாடிக்கையாளர்கள் பெறுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது," என்றார்.
சங்கீதாவில் தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி அல்லது மற்றப் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் சுபாஷ் கைபேசிகள் பற்றியும், சிம் கார்டுகள் பற்றியும் கூறினார். அவரது முயற்சி மூலம், ஒரு மாதத்தில், 30 சிம்கார்டுகள் விற்பனையில் இருந்து சங்கீதா 1900 சிம் கார்டுகள் வரை விற்கத் துவங்கியது. இவை நிகழ்ந்தது அனைத்தும் அதே ஜேசி சாலை கடையில் தான்.
கள்ளச்சந்தையை சமாளித்தல் :
கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் இந்தியாவில் பிரபலமாகி வந்தன. அதே சமயம் கள்ளச்சந்தையும் வளர்ந்து வந்தது. இந்தியாவில் கைபேசிகளுக்கு 60% சுங்க வரி இருந்தது. இதனால் எரிக்சன், சீமன்ஸ், சோனி, பிலிப்ஸ், நோக்கியா மற்றும் மோட்டரோலா போன்ற நிறுவனங்களின் போன் விலையில் அது எதிரொலித்தது. சுங்க வரி மட்டுமன்றி விற்பனை வரி, விற்றுமுதல் வரி அனைத்தும் கைபேசி விலையில் இணைந்தன.
இதன் காரணமாக கள்ளச்சந்தையில் பாதி விலைக்கு கைபேசிகளை மக்கள் வாங்கத் துவங்கினர். காரணம் அங்கு அவற்றுக்கு வரிகள் சுமை இல்லை.
"மக்கள் பர்மா பஜார் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் கைபேசிகளை வாங்கத்துவங்கினர். அன்றைய நாட்களில் இந்தியாவில் விற்பனையான அதிக கைபேசிகள் கள்ளச்சந்தை மூலமே விற்பனையாகின," என்கிறார் அவர்.
கள்ளச்சந்தையை சமாளிக்க சுபாஷ் வாடிக்கையாளர்களிடம் தான் பெற்றிருந்த நம்பிக்கையை மூலதனமாக்க முயற்சித்தார். காற்றாடி, இஸ்திரி பெட்டி, தொலைக்காட்சி போன்றவற்றை வாங்க சங்கீதா வரும் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளில் அவர்கள் பிறந்தநாள் கடைசி சில எண்களாக வரும் வசதி உண்டு என உறுதியளித்தார். விற்பனை அதிகரித்தாலும், கள்ளச்சந்தையின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்துள்ளது.
மேலும் விற்பனையை அதிகரிக்க சில முயற்சிகளில் இறங்கினார் சுபாஷ். கைபேசிகள் விற்கும் பொழுது விற்பனை ரசீது மற்றும் உத்திரவாதச்சீட்டு, மற்றும் சிம்கார்டுகள் ஆகியவற்றை ஒரே பொருளாக விற்கத்துவங்கினார். அவர் கூற்று படி இந்தியாவிலேயே முதல் முறையாக இவ்வாறு விற்பனை செய்யத் துவங்கியது அவரது நிறுவனம் தான்.
இருந்தாலும் விற்பனை ஒரு அளவைத் தாண்டாமல் இருந்ததற்குக் காரணம் வாடிக்கையாளர்கள், எந்த நிறுவனத்திடம் இருந்தும் அதிக விலையில் கைபேசி வாங்க விரும்பவில்லை. அதற்குக் காரணம் திருட்டு பயம் என்பதை உணர்ந்தார்.
அன்றைய நாட்களில் ஒரு கைபேசியின் விலை ரூபாய் 10,000 முதல் 20,000 வரை விற்றது. அப்பொழுது அந்தத் தொகை மிகவும் அதிகம். எனவே இல்லங்களில் இருந்து கைபேசிகளை திருடிச்செல்வது அதிகமாக இருந்தது. அவற்றை கண்டுபிடிப்பதற்கும் அதிக வழிகள் இல்லை. இன்று போல அன்று எந்த தொழில்நுட்பமும் இல்லை.
இது தனது தொழிலை பாதிக்கிறது என்பதை அறிந்தவுடன், அதற்கு உடனடியாக மாற்று வழி சிந்தித்தார். அவரது கடையில் வீட்டு உபயோகச் சாதனங்கள் வாங்குவோருக்கு காப்பீட்டு வசதி கொடுத்து வந்தார். அதனை தற்பொழுது கைபேசிகளுக்கும் கொடுக்கத் துவங்கினார்.
பின்னர் போன் வாங்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியோடு இணைந்து தவணை முறை திட்டத்தை கொண்டுவந்தார். இதன் மூலம் எளிதாக மக்கள் கைபேசி வாங்கத்துவங்கினர்.
இதன் மூலம் விற்பனை உச்சத்தை தொட்டது. கள்ளச்சந்தை பற்றிய மக்கள் எண்ணம் மாறாமல் இருந்தாலும் புதியவர்கள் மற்றும் முன்னர் வாங்கியவர்கள் என மக்கள் அலையாக சங்கீதா வந்தனர்.
"இன்றும் நினைவுள்ளது. காலை 9.30 மணிக்கு ஜேசி சாலை கடையை திறப்பேன். அந்த நேரத்திலும் நீண்ட நெடிய வரிசையில் கடை திறக்க வேண்டி மக்கள் காத்து நிற்பார்கள்," என்கிறார் அவர்.
ஒவ்வொரு மாதமும் 100க்கணக்கில் அவர் கைபேசிகள் வேண்டும் என கேட்ட பொழுது சுபாஷிற்கு பொருட்கள் கொடுப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
"அவ்வளவு கைபேசிகளை அந்த விலையில் யாராலும் அத்தனை எண்ணிக்கையில் ஒரு மாதத்தில் விற்பனை செய்ய இயலாது என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் எனது விற்பனை எண்கள், அது இயலும் என காண்பித்தன. பின்னர் எனக்கு வேண்டிய படி அதிக அளவில் கைபேசிகள் வாங்கத் துவங்கினேன்," என்கிறார் சிரித்தபடி.
1997ல் இருந்து 2002 வரை பெங்களுருவில் 65-70% சந்தை சங்கீதா வசம் இருந்தது என்கிறார் சுபாஷ்.
சிடிஎம்ஏ வருகை :
2002 ஆம் ஆண்டு குவால்காம் நிறுவனம் சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இருந்தாலும் இரண்டாம் தலைமுறை தகவல் தொழில்நுட்பத்திற்கு ஜிஎஸ்எம் தான் தரநிலையாக இருந்தது.
இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தில் இயங்கி வந்தன. ஆனால் டாட்டா டெலி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒரு படி மேலே போய், சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் இயங்கத்துவங்கின.
அந்நேரத்தில் ஹட்ச் நிறுவனமும் சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் இயங்க ஆரம்பித்து, சுபாஷை அவர்களுக்கான ஒரு கடை திறக்க அணுகினர். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். அனைத்து வேலைகள் சங்கீதாவுடையதாக இருந்தாலும், அது ஹட்ச் நிறுவனத்தின் கடை தான்.
2002 ஆம் ஆண்டு சுபாஷை பொறுத்தவை மறக்க முடியாத ஆண்டு. காரணம் கைபேசிகளை சொந்தமாகத் தயாரிக்க சுபாஷ் முடிவு செய்தார். தைவானில் தயாரித்து இங்கு டாடா நிறுவனத்திற்கு சிடிஎம்ஏ தொலைபேசிகளை விற்பனை செய்தார். அவரது தயாரிப்பின் பெயர் ‘யூரோடெல்’.
ஆனால் சிடிஎம்ஏ தொழில்நுட்பம் ஜிஎஸ்எம் மிடம் தோல்வியுற்றது. காரணம் குறைந்த செலவு மற்றும் அதிக நிறுவனங்களின் எண்ணிக்கை. இதன் காரணமாக சுபாஷ் யூரோடெல் நிறுவனத்தை மூட வேண்டி வந்தது. மேலும் அதிக நஷ்டமும் ஏற்பட்டது.
இதன் காரணமாக சுபாஷ் இடிந்து போய் உட்காரவில்லை. பெங்களுருவில் இரண்டாவது கடையை இந்திராநகர் சிஎம்எச் சாலையில் திறந்தார். அதன் பின்னர் கர்நாடகாவில் மற்ற நகரங்களிலும் கிளைகள் துவங்கினார்.
இந்நேரத்தில் கைபேசிகள் சந்தையில் சங்கீதாவின் இடம் என்ன என்பதை தொலைபேசி நிறுவனங்கள் உணரத்துவங்கின. அவர்கள் சங்கீதா அவர்களின் விநியோகஸ்தராக மாற வேண்டும் என விரும்பினர். அதாவது மற்ற கடைகளுக்கு விற்பனை செய்பவராக. சங்கீதாவின் போட்டியாளர்கள் உட்பட அனைவர்க்கும்.!
"பல தொலைபேசி நிறுவனங்கள் எங்களை சில்லறை வணிகத்தில் இருந்து விநியோகம் செய்யும் படி கூறின. 2002 வரை எந்த நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட எனக்கு விருப்பம் இல்லை. கடை வணிகமே நேரம் முழுவதையும் ஆக்ரமித்து வந்தது. என்கிறார் சுபாஷ். இருந்தாலும் கடைசியில் எரிக்சன் நிறுவன விநியோகஸ்தராக மாறினார்."
ஆனால் ஒரு போட்டியாளரிடம் இருந்து பொருட்கள் வாங்க மற்றவர்கள் தயாராக இல்லை. எனவே அனு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் தனது விநியோகத்தை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் மாபெரும் விநியோகஸ்தராக இவரது நிறுவனம் இருந்தது. அதன் மூலம் 1000 கோடிகள் மதிப்புள்ள வணிகம் நிகழ்த்தியது.
இதற்கு இடையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் கிளைகள் துவங்கியது சங்கீதா. மேலும் கைபேசி நீரில் விழுதல், கீழே விழுந்து உடைதல் போன்றவற்றுக்கும் காப்பீடு கொண்டுவந்தார் சுபாஷ். லண்டன் நிறுவனமான ஈஐபீ யோடு இணைந்து முதல் தகவல் அறிக்கை இல்லாது 72 மணிநேரத்தில் கடையிலேயே காப்பீட்டுத் தொகை பெரும் வசதியை கொண்டுவந்தார்.
ஆனால் காலம் நகர நகர இந்த கைபேசி காப்பீட்டிற்காக நிறுவனம் அதிகம் செலவு செய்கிறது என்பதை உணர்ந்து அந்த காப்பீட்டை வேண்டியவர்கள் பெறலாம் என மாற்றி அமைத்தார். இதன் மூலம் செலவுகள் குறைத்துள்ளார்.
மீண்டும் ஒரு முறை தொலைபேசிகள் தயாரிக்கும் நிறுவனம் துவங்கலாம் என்று நினைத்து முயல அதிலும் சறுக்கல் மிஞ்சியது. அந்த நேரத்தில் சீன தொலைபேசி நிறுவனங்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன.
மின்னணு வியாபாரம் :
சீன நிறுவனங்கள் மட்டுமன்றி மின்னணு வணிகமும் இந்தியாவில் பெரிதாக வளரத்துவங்கியது. இந்நிலையில் சங்கீதாவின் சந்தையில் பெரும் பங்கை ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் கைப்பற்றின.
"அதிகப் பட்ச தள்ளுபடிகள் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையை உடைத்தன இந்த நிறுவனங்கள். அவர்கள் விலைக்கு எங்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. 2014 முதல் 2016 வரை எங்கள் வணிக அளவு குறைந்தது. முதல் முறையாக நாங்கள் நஷ்டத்தில் தவித்தோம்," என நினைவு கூறுகிறார் சுபாஷ்.
ஆனால் அவர் முயற்சியை கைவிடவில்லை. இதனை சமாளிக்க மற்றும் ஒரு மாற்று உத்தியை கையாண்டார்.
விலை குறைவு காப்பீட்டுத் திட்டம் :
சங்கீதாவில் இருந்து ஒரு வாடிக்கையாளர் ஒரு கைபேசியை வாங்கிய பின்பு அடுத்த 30 நாட்களுக்குள் அதே கைபேசியின் விலை மின்னணு வணிகத்தில் குறைவாக இருந்தால், அந்த வாடிக்கையாளருக்கு அந்த விலை வித்தியாசம் திரும்பி அளிக்கப்படும். இந்த திட்டம் சங்கீதாவால் அறிமுகம் செய்யப்பட்டது.
“அந்த நேரத்தில் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்த திட்டத்தை அறிமுகம் செய்தோம். அதற்கான வரவேற்பு அற்புதமாக இருந்தது. எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தினோம். இதுவரை நாங்கள் திருப்பிக் கொடுத்துள்ள அதிகப்பட்ச விலை வித்தியாசம் ரூபாய் 14,000. சோனி எக்ஸ்பீரியா கைபேசியில் நிகழ்ந்தது," என்கிறார் சுபாஷ்.
இந்தத் திட்டம் மூலம் ஆன்லைன் கொடுக்கும் சவாலை சமாளிக்க முடிந்தது சங்கீதாவால். மேலும் போன் உடைந்தால் அதற்கான காப்பீடு, உடைந்த ஸ்கிரீனுக்கான மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கும் புதிய திட்டங்களை கொண்டுவந்தார். ஒரு வருடத்திற்கான சேதாராக் காப்பீடு, நீரால் சேதாரக் காப்பீடு, விலை வீழ்ச்சி, ஸ்கிரீன் மாற்றம் என அனைத்தையும் ஒரே திட்டமாக வெறும் 499 ரூபாய்க்கு கொடுத்தார்.
மேலும் சீன கைபேசி நிறுவனங்கள் தங்கள் பொருளை ஆன்லைன் மட்டுமல்லாது கடைகளில் விற்க நினைத்த பொழுது அவர்கள் அணுகிய சில விநியோகஸ்தர்களில், சுபாஷும் ஒருவர்.
தற்பொழுது சங்கீதாவில் 4000 பணியாளர் உள்ளனர். 2250 இவர்களின் நேரடி பணியாளர்களும், மற்றவர்கள் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் பொருளை விற்பனை செய்ய நியமித்த பிரதிநிதிகளும் உள்ளனர்.
ஆப்பிள், ஒன்பிளஸ், ஷாமி, விவோ, சாம்சங், ரியல்மீ என அனைத்து நிறுவன கைபேசிகளையும் இவர்கள் விற்பனை செய்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் 7000 போன்கள் விற்பனை செய்கின்றனர். ஒரு மாதத்தில் 2 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆகின்றது. மேலும் இவர்கள் வலைத்தளத்தில் சென்றும் நீங்கள் கைபேசிகளை வாங்கலாம்.
"ஆன்லைன் வலைத்தளங்கள் எங்களை விட குறைந்த விலையில் கைபேசிகளை விற்பனை செய்கின்றன என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. விற்பனைக் காலத்தின் முடிவில் உள்ள சில மாதிரிகள் அவ்வாறு கிடைக்கலாம். ஆனால் எங்கள் திட்டங்கள், மற்றும் விலையை கணக்கில் கொண்டால், ஆன்லைனை காட்டிலும் குறைந்த விலையில் நாங்கள் தருகிறோம்," என்கிறார் சுபாஷ்.
தற்போது வரை சங்கீதா எந்த வங்கியின் முதலீட்டையும் ஏற்கவில்லை. இப்பொழுதும் அது தனியார் நிறுவனமே.
"1000 கிளைகள் திறந்த பிறகு நாங்கள் முதலீட்டாளர்களிடம் பேசலாம் என்று உள்ளோம்," என்கிறார் சுபாஷ்.
3000 கோடிகள் வணிக மதிப்பினை தொட்ட பின்னர், பங்கு விற்பனையில் ஈடுபடும் எண்ணமும் இவருக்கு உள்ளது.
"எப்பொழுதும் நான் வெற்றிகளை மட்டுமே சுவைத்து வந்தேன் எனக் கூறுவது தவறு. பல பொருட்களை முயற்சித்து பார்த்தேன். அன்று எது புதிதாக உள்ளதோ அதனை விற்பனை செய்ய முயன்றேன். தொலைபேசிகள் வந்தபொழுது நம்பிக்கை வைத்து இறங்கினேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனது குழந்தைப்பருவம் என்னை வலுவாக்கியது. எனது மொத்தத்தையும் சங்கீதா மொபைல்ஸுக்கு கொடுத்தேன்," என முடித்துக்கொண்டார் சுபாஷ்.
ஆங்கிலத்தில் : ரிஷப் மன்சூர் | தமிழில் : கெளதம் தவமணி