12ம் வகுப்பு வரை படித்துவிட்டு பல 100 கோடிகளை சம்பாதிக்கும் தொழில் முனைவர்!
வீடுகளுக்கு பேப்பர் போடுவது, வாட்ச்மேன் வேலை என கடுமையான சூழலில், 12 ஆம் வகுப்போடு படிப்பை விடுத்த இவர், 3 மாதங்கள் படித்த கணினி படிப்பால், ஐடி உலகில் இன்று கொடி கட்டி பறக்கிறார்.
1980களில் ஒரு பள்ளிக் குழந்தை பெங்களுருவில் பல வீடுகளுக்கு செய்தித்தாள்களை விநியோகம் செய்துவந்தது. அதற்கு அப்பொழுது மாதம் 120 ரூபாய் சம்பளம். அந்தக் குழந்தை கிரிஸ்டோபர் ரிச்சர்ட்.
சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார். பள்ளி ஆசிரியையான அவரின் அம்மா, மாதம் 1500 ரூபாய் சம்பாதித்தார். இதனால் தன்னால் முடிந்த சிறு வேலைகள் செய்து வீட்டிற்கு உதவியாக இருந்தார் கிரிஸ்டோபர்.
10ஆம் வகுப்பு படிக்கையில் பள்ளி செல்வதோடு, இரண்டு வேலைகளும் பார்த்துவந்தார். காலையில் செய்தித்தாள்கள் விநியோகம், மாலையில் பள்ளி விட்ட பின்பு ஐஸ்கிரீம் கடையில் விற்பனையாளர் வேலை.
"இந்த இரண்டு வேலைகளில் இயங்கியபொழுது, பலவற்றை கற்க முடிந்தது, பல தரப்பட்ட மக்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பும் கிடைத்தது," என்கிறார் கிரிஸ்டோபர். இது அவரது கதை.
10ஆம் வகுப்பு முடித்த பின்பு செய்தித்தாள்களை விடுத்து, பால் விநியோகம் செய்வதில் இறங்கினார் அவர். பெங்களுருவில் பழைய விமானநிலையத்தின் அருகில் உள்ள டைமண்ட் டிஸ்டிரிக்டில் என்ற இடத்தில் காவலாளியாகவும் பணியாற்றியுள்ளார்.
"12ஆம் வகுப்பு வரை இப்படி பல வேலைகள் பார்த்து வந்தேன். அதன் பின்பு படிப்பை நிறுத்திவிட்டேன். அப்பொழுது அனைத்தும் முடிந்து போனதாக தோன்றியது. என்ன செய்வதென்று அறியாது நின்றேன்," என்கிறார் அவர்.
பின்னர் அவர்கள் பகுதியில் 3 மாதங்களில் கணினி தொடர்பான பயிற்சி வழங்கும் ஒரு படிப்பைப் பற்றி அறிந்தார் அவர்.
"அன்றைய காலங்களில் கணினி அதிகம் இல்லை. இருந்தாலும் அந்த படிப்பில் நான் சேர்ந்தேன். வலைத்தளங்களை உருவாக்குதல், போட்டோஷாப், பிளாஷ் என பலவற்றை கற்றுக்கொண்டேன்," என நினைவுக் கூறுகிறார் கிரிஸ்டோபர்.
ஐடி உலகம் :
இளம்வயதில் இது போன்ற ஒரு கணினி படிப்பினை கற்கும் வாய்ப்பு அமைந்தது அவருக்கு நன்மையாக முடிந்தது. கணினி படிப்பை முடித்த பின்பு செட் கரீயர் அக்காடமி அவரை வேலைக்கு எடுத்துள்ளது. அக்காலகட்டத்தில் அந்நிறுவனம் நாடு முழுவதும் அவர்கள் கணினி மையங்கள் அமைக்கும் வேலைகளில் இருந்தனர்.
"அங்கு நான் இரண்டு வருடங்கள் வேலை செய்துவந்தேன். பல தொழில்நுட்பங்களை C, C++, மற்றும் பல கணினி மொழிகளை கற்றுக்கொண்டேன். அப்போது எனது உற்ற நண்பன் புத்தகங்கள் தான். பல நேரங்கள் அவற்றோடு தான் செலவிட்டுள்ளேன்," என்கிறார் அவர்.
கிரிஸ்டோபர் தகவல் தொழில் நுட்பத்தை தனக்கான துறையாகத் தேர்வு செய்தார். அதில் ஒப்பந்தப் பணியாளராக பல்வேறு இடங்களில் பணியாற்றினார். சிங்கப்பூரில் டாமினோஸ் பீஸ்சாவுக்கு வணிக நுட்பம் தொடர்பான பணியும் அதில் அடக்கம்.
அதன் பின்னர் வணிக நுட்பம் மற்றும் பகுப்பாய்வு அவருக்கு மிகவும் பரிச்சையமான துறைகள் ஆயின. மேலும் அந்த நேரத்தில் தனியாக பணியாற்றினால் சிறப்பாக பணியாற்ற இயலும் என கிரிஸ்டோபர் கருதினார். அதன் மூலம் பகுதி நேர பணியாளராக தனது பணியை தானே முடிவு செய்யும் விதத்தில் தனது வேலைகளை அமைத்துக் கொண்டார்.
"அப்பொழுது பல நிறுவனங்களுக்கு என்னை போன்ற ஒருவன் தேவைப் பட்டது. ஐபிஎம், அசென்ச்சர், விப்ரோ, இன்போசிஸ் மற்றும் பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றினேன்," என்கிறார் அவர்.
ஆலோசகராக ஒரு நாளில் 3000 ரூபாய் சம்பாதிப்பதில் இருந்து, படிப்படியாக முன்னேறி, ஒரு நாளில் 75000 ரூபாய் வரை தனது பணிக்காக கிரிஸ்டோபர் பெற்றுள்ளார்.
இவ்வாறு 12 வருடங்கள் அவர் இயங்கி வர, இதே வேலையில் ஒரு வாடிக்கையாளரோடு நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். அது மைக்ரோ சாப்ட். தனி ஒரு மனிதனாக அற்புதமாக பணியாற்றி இருந்தாலும், உங்களுக்கு ஒரு குழு இருந்தால் உங்களால் இன்னும் அதிகமாக செயல்பட முடியும் என அவர்கள் இவரிடம் கூறியுள்ளனர்.
அந்த யோசனை எனக்கு பிடித்துப்போக, 2009ல் ‘சிஆர் பி ஐ கன்சல்டன்சி’ உருவானது. முதலீடாக எனது பணம் 10 லட்சத்தை பயன்படுத்தி, ஒரு குழுவை உருவாக்கி, அதில் இருந்து வளர முயற்சித்தேன், என்கிறார் அவர்.
விரிவாக்கத்தை துவக்கம் :
18 வருடங்களாக கிரிஸ்டோபர் தனி நபராகவே பணியாற்றி வந்துள்ளார். அவர் பணியாற்றிய அனைத்து வேலைகளும், செய்தித்தாள் விநியோகம் செய்வதில் இருந்து வணிக நுட்பம் வரை அனைத்திலும் அவர் மட்டுமே பணியாற்றி வந்துள்ளார். எனவே ஒரு குழுவாக பணியாற்றுவது அவருக்கு புதிதாக இருந்தது.
"மக்களோடு பணியாற்றி நமது நோக்கத்தில் அவர்களையும் இணைப்பது மிகவும் கடினமாகவும், நல்ல பாடமாகவும் இருந்தது. அது மிகவும் புதிதாக இருந்தது எனக்கு. மற்றவர்களை உத்வேகப்படுத்துவதை அங்கு கற்றுக்கொண்டேன். அனைத்தையும் சரியாக செய்ய எனக்கு 2 ஆண்டுகள் ஆனது," என்கிறார் அவர்.
அதே சமயம் தனது அலுவலகத்தில் அதிக இடம் இருப்பதை பார்த்து, 10 இருக்கைகள் கொண்ட பிபிஓ கட்டமைப்பை ஏர்டெல் நிறுவனத்துக்காக துவக்கினார்.
இரண்டு மாதங்களுக்கு அந்நிறுவனத்திற்கு இலவசமாக சேவை செய்த பிபிஓ, பின்னர் அந்நிறுவனத்தோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.
"வெகு விரைவில் பிபிஓ 250 நபர்கள் கொண்ட நிறுவனகமாக வளர்ந்தது, மேலும் பல வாடிக்கையாளர்களும் வந்தனர்," என்கிறார் கிரிடோபர்.
ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் அவரை G7 பற்றி பரிந்துரைத்தார். அந்தக் குழுவில் நிதி, காப்பீடு, மின்னணு, ஆரோக்கியம் போன்ற துறைகளில் இயங்கிய நிறுவனங்கள் இருந்தன.
அதில் G7 டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை பெற தொழில்நுட்ப ஆலோசனைத் தேவைப்படுவதை அறிந்தார்.
"நான் அந்நிறுவனத்திற்கு ஆலோசகராகப் பணியாற்றினேன். ஆனால் இன்னமும் ஏதாவது செய்ய முடியும் எனத் தோன்றியது. சுருக்கமாக சொல்வதானால், அந்நிறுவனத்தை வாங்கி, எனது நிறுவனத்தோடு இணைத்துவிட்டேன்," என்கிறார் அவர்.
அந்த இணைப்பு மூலம் G7 ‘சிஆர் டெக்னாலஜீஸ்’ உருவாகியது. 2016 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் அதன் மேகக்கணினி துறையை துவங்கினார்.
"மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு யாராவது ஒருவர் கிளைவுட் சார்ந்த பொருட்களை விற்பது மட்டுமன்றி அதற்கு சேவையும் தரவேண்டும் என அது விரும்புவதை அறிந்தேன். அவர்களின் வாடிக்கையாளர்கள், அவர்களின் ரசீதுகள் அது மட்டுமன்றி வாடிக்கையாளர்களின் மொத்த சேவைகளையும் கவனிக்க ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. இதனால் தான் நான் மேகக்கணினி சேவையை துவக்கினேன்," என்கிறார் அவர்.
G7 சிஆர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை மேகக்கணினி சேவை விற்பனையாளராக மாற, அதன் மொத்த வளர்ச்சி அந்தத் துறையில் இருந்து வருவதை அந்நிறுவனம் அறிந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவன கூட்டாளியாக, உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் மேகக்கணினி வாடிக்கையாளர்களோடு பணியாற்றியது G7 சிஆர். "80% வணிகம் மெட்ரோ நகரங்களில் இருந்து வந்தது. மீதி 20% 2ம் மற்றும் 3ம் கட்ட நகரங்களில் இருந்து வந்தது," என்கிறார் அவர்.
எதிர்காலத் திட்டங்கள் :
டயர் 2 நகரங்களில் தனது கவனத்தை அதிகரிக்கத் திட்டம் உள்ளது. அந்நகரங்களில் 20 G7 சிஆர் மையங்களை நிறுவி நாடு முழுவதும் நிறுவனத்தின் தாக்கத்தை கொண்டு செல்ல குறிவைத்துள்ளார். இப்பொழுது 850 பணியாளர்கள் உள்ளனர். அதில் 450 பேர் முழு நேர பணியாளர்கள், மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பிபிஓ பணியாளர்கள்.
"இவ்வளவு பெரிய நிறுவனத்தை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு உதவுவதன் மூலம் எங்கள் குறிக்கோளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதன் மூலம் வளர்ந்து மற்றவர்களில் இருந்து தனித்து தெரிகிறோம். போட்டி என்பது எங்களுக்கு உள்ளே தான் இருந்தது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் சேவைகள் கொடுப்பது எப்படி என்பதை நிரந்தர நோக்கமாக கொண்டோம். ”
சென்றவருடம் G7 சிஆர் 56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இவ்வருடம் 140 கோடிகள் வருமானமாக ஈட்ட பயணித்து வருகிறோம் என்கிறார் கிறிஸ்டோபர். மேகக்கணினி சேவை ஆரம்பித்து 3 வருடங்களில் 100 கோடி வருமானத்தை கடந்துவிட்டது.
2019 ஆம் ஆண்டில் சிறந்த மைக்ரோசாப்ட் பார்ட்னர் என்ற விருதை வென்றுள்ளது G7 சிஆர். இந்நிறுவனத்தின் மற்ற வாடிக்கையாளர்களில் அலிபாபா, அமேசான், டிஜிகார்ட், சாப்ட்லேயர் போன்ற நிறுவனங்கள் அடக்கம். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பல நிறுவங்களின் டிஜிட்டல் மாற்றங்கள் நிகழ்த்த முடிகிறது. இதன் மூலம் செலவை குறைத்து மதிப்பை கூட்ட முடிகிறது.
பெரிய நிறுவனங்கள் மட்டுமன்றி, மத்திய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு மேகக்கணினி சேவைகளை பயன்படுத்த உதவவேண்டும் என்பது G7 சிஆரின் நோக்கமாக உள்ளது.
"இது எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். காரணம் நாங்களும் மத்திய மற்றும் சிறிய அளவு நிறுவனம் தான். நான் கடந்து வந்த இன்னல்களை வைத்து பார்த்தால் இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என உணர்கிறேன். இந்தியாவில் தான் அதிகமான சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில்கள் உள்ளன. அந்நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கையாள அனைத்து உதவியும் தேவை," என்கிறார் அவர்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில் : கெளதம் தவமணி