உங்கள் ஸ்டார்ட் அப் கனவுக்கு ஊக்கம் அளிக்கும் 5 வெற்றிக் கதைகள்!
தொழில்முனைவில் வெற்றி பெற பல ஆண்டு அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி தேவை. அந்த வகையில் தங்கள் கனவுகளை பின் தொடர்ந்து சென்று வெற்றி பெற்ற ஐந்து இந்திய தொழில்முனைவோர் அனுபவங்களை எஸ்.எம்.பி ஸ்டோரி பட்டியலிடுகிறது.
“வர்தத்தகத்தில் ஈடுபடுவது பிரபலமான போக்காக இருக்கிறது என்பதற்காக மட்டும் வர்த்தகத்தில் நீங்கள் ஈடுபட முடியாது” என விப்ரோ முன்னாள் தலைவர் அஸிம் பிரேம்ஜி ஒரு முறை கூறியிருந்தார்.
முன் எப்போதையும் விட இப்போது, உடனடி செல்வத்திற்கு ஆசைப்படும் புதிய தொழில் முனைவோர்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த கருத்து கச்சிதமாக பொருந்துகிறது. வர்த்தகத்தில் வெற்றி பெற உறுதியும், கடின உழைப்பும் தேவை.
தடைகளை மீறி தங்கள் கனவுகளை பின் தொடர்ந்து சென்றதோடு, வெற்றிக்காக விடாமுயற்சியுடன் உழைத்த இந்திய தொழில்முனைவோரின் ஊக்கமளிக்கும் கதைகளை எஸ்.எம்.பி ஸ்டோரி இங்கே வழங்குகிறது.
அனுஜ் முந்த்ரா, நந்தினி கிரியேஷன்
2001 முதல் 2003 வரை அனுஜ் முந்த்ரா ஜெய்பூர் ஷோரூம் ஒன்றில், ரூ1.,400 மாத சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வருமானத்தில் அதிக காலம் தாக்குபிடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். 2003ல் அவர் வேலையை விட்டு வில்க் சொந்தமாக சூட்களை விற்கத்துவங்கினார்.
அவர் சூட்களை வாங்கி மற்ற கடைக்காரர்களுக்கு விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டினார். பின்னர், தானே ஒரு பிளாக் அமைத்து ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யத்துவங்கினார். 2012 வரை இதே முறையில் செயல்பட்டு வந்தவர், டெல்லி பயணத்தின் போது இ-காமர்ஸ் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை பார்த்தார். இந்தியாவில் இ-காமர்ஸ் தான் எதிர்காலம் என்பதை புரிந்து கொண்டார்.
ஜெய்பூர் திரும்பியவர், இ-காமர்ஸ் தொடர்பான விதிமுறைகளை அறிந்து கொண்டு, நந்தினி கிரியேஷன் நிறுவனத்தை துவக்கி, அதன் பிராண்டாக Jaipurkurti.com தளத்தை அமைத்தார். முதல் ஆண்டே ரூ.59 லட்சம் விற்றுமுதல் வந்தது.
அனுஜ் சொற்ப வளத்துடன் வர்த்தகத்தை துவக்கியிருந்தார். நெருங்கிய நண்பர்களிடம் இருந்து 50 ஆயிரம் திரட்டியவர் பின்னர், வங்கிக் கடனும் பெற்றார். இந்த தொகையில் 10 தையல் இயந்திரங்கள் வாங்கி குர்தி மற்றும் சூட்கள் தயார் செய்தார்.
அவருடைய மனைவி வந்தனா குர்திகளை வடிவமைப்பார். பின்னர், அவை ஜெய்பூர் ஆலையில் தயாராகும். ஸ்னேப்டீல் மற்றும் ஜபாங் இ-காமர்ஸ் தளங்களில் பதிவு செய்து விற்கத்துவங்கினார்.
ஆரம்ப காலத்தில் போட்டி குறைவாக இருந்தாலும், இ-காமர்ஸ் நிறுவனத்தை நடத்துவது கடினமாக இருந்தது என்கிறார் அனுஜ். இன்று நிறுவனம், சூட்கள், குர்தி, பியூஷன் ஆடைகள் மற்றும் இதர ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
பீம்ஜி பட்டேல், மோனிகா என்டர்பிரைசஸ்
1981ல் 12 வயதான பீம்ஜி பட்டேல், குஜராத்தில் உள்ள மேக்பூர் கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்றார். தனது வாசிப்புத்திறன் மற்றும் கணித ஆற்றல் மூலம் மும்பையில் வாய்ப்புகளைப் பெறலாம் என நம்பினார். அவரும், சகோதரரும் மும்பையில் பல சின்ன வேலைகளை பார்த்தனர்.
சில ஆண்டுகள் சொற்ப வருமானத்தில் வாழ்ந்த நிலையில், தனது மூத்த சகோதரரிடம் இருந்து 30 ஆயிரம் கடன் வாங்கி ஜெனரல் ஸ்டோர் ஒன்றை துவக்கினார். அவருடைய வர்த்தகம் மெல்ல வளர்ந்து சூப்பர் மார்க்கெட்டானது.
“என் தந்தை தன்னை நோக்கி வந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். வெளிநாடுகளில் இருந்து வந்த பல பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானங்களுக்கு கமிஷன் ஏஜென்டாக செயல்பட்டார். அவரது தொடர்புகள் வெளிநாடுகளில் இருந்து மதுபானம் இறக்குமதி செய்ய உதவியது,” என்கிறார் அவரது மகனான குனால் பட்டேல்.
இந்த அனுபவத்தைக் கொண்டு பீம்ஜி, மோனிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தைத் துவக்கி, மொத்த அளவில் மதுபானங்களை விநியோகிக்கத் துவங்கினார்.
அதன் பிறகு, பீம்ஜி மற்றும் அவரது குடும்ப வர்த்தகம் புகழ்பெற்ற வெளிநாட்டு மதுபானங்களை தருவித்து விற்பனை செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிறுவனம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டியது.
பிரேம் கன்னா, கவுரவ் லுமினரிஸ்
தில்லியைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போல பிரேம் கன்னாவும் தலைநகருக்கு சென்று தனக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள விரும்பினார்.
சொந்த கிராமத்தை விட்டு தில்லிக்குச்சென்ற போது பெற்றோர் அவரிடம் ரூ.5,000 கொடுத்தனர். தில்லி தொழிற்சாலை ஒன்றில் அவர் வேலை பார்த்தார். சிறிய அறையில் தங்கியிருந்தவர் இரவு நேரத்தில் விளக்குகளுக்கான சோக் சாதனத்தை தயாரித்து விற்பனை செய்தார்.
பின்னர், கையில் இருந்த சேமிப்பில் 1991 கவுரவ் லூமினரிஸ் நிறுவனத்தை துவக்கினார். அவரது மகன்கள் கவுரவ் மற்றும் பங்கஜ் 2020ல் வர்த்தகத்தில் இணைந்தனர். சிறிய அளவில் துவங்கிய நிறுவனம் நான்கு உற்பத்தி ஆலைகள் கொண்டதாக வளர்ந்துள்ளது. ஓட்டோ மாடுலர் ஸ்விட்சஸ், யோதா ஸ்விட்ச்கியர், விக்டர் பேன்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.
வட இந்தியாவில் 250க்கும் அதிக விநியோகிஸ்தர்களை கொண்டுள்ள நிறுவன, ரூ.52 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
விகேஷ் ஷா, 99 பான்கேக்ஸ்
விகேஷ் ஷா, 18 வயதில் மும்பையில் சிறிய கேக் கடையில் வேலை பார்த்தார். ஆனால், இந்த அனுபவம் தன் வாழ்க்கையை மாற்றும் என நினைக்கவில்லை. கடையில் ரூ.700 சம்பளத்திற்கு இணைந்தவர் மேலாளராக பதிவு உயர்வு பெற்றார். பின்னர், வேலையை விட்டு விலகி கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டார்.
2007ல் மும்பையில் ’தி ஹாப்பினஸ் டேலி’ எனும் பேக்கரியை துவக்கினார். இடையே ஐரோப்பாவுக்கு பயணம் செய்தவர் பலவகையான பான்கேக் காலை உணவாக உட்கொள்ளப்படுவதை பார்த்தார். இந்தியாவிலும் இதற்கு வரவேற்பு இருக்கும் என நினைத்தார்.
“இந்தத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றது, இந்தியர்களின் உணவு பழக்கம் பற்றிய புரிதலை தந்துள்ளதால், பான்கேக்கை அறிமுகம் செய்வது வரவேற்பு பெறும் என நம்பினேன்,” என்கிறார் பிரேம்
இந்த ஐடியாவை பான்கேக் குவிக் சர்விஸ் ரெஸ்டாரண்டாக செயல்படுத்தினார். மும்பையில் முதலில் துவக்கிய மையத்தில் ரூ.99 விலைக்கு பான்கேக்கை விற்றதால் நிறுவன பெயரும் 99 Pancakes என அமைந்தது.
2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் குஜராத், தெலிங்கானா, கர்நாடக, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 65 விற்பனை மையங்களை துவக்கியது. ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கியிலும் டெலிவரி செய்து வருகிறது.
அங்குஷ் காக்கர் ,Treeoise Resort
13 வயதில் அங்குஷ் காக்கர் தனது தந்தையின் கம்பிளி தொழிலில் உதவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குடும்பம் நிறைய கஷ்டப்பட்டதாகவும், படித்துக்கொண்டே வர்த்தகத்திலும் உதவியதாக அங்குஷ் கூறுகிறார். பள்ளி முடிந்த பிறகு தந்தை கடைக்கு வந்து உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தவர், லூதியானா பஸ் நிலையம் அருகே தாபா உணவகம் துவக்கினார்.
“சிறிய இடம் கிடைத்து அதில் தாபா நடத்தினோம். பஸ் மற்றும் டிரக் டிரைவர்கள் வந்து சாப்பிட்டனர். இரண்டு ஆண்டுகளில் 20 ரூம் கொண்ட ஒரு ஓட்டலை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு லூதியானாவில் ஓட்டல் வாங்கினர்.
பின்னர், 2020ல் இமாச்சல பிரதேசத்தில் அங்குஷ் 33,000 சதுர அடியில் Treeoise ரிஸார்ட்டை துவக்கினார். ஒரு தாபாவை நடத்துவதில் இருந்து முன்னணி ரிஸார்ட்டை நடத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்