’தொழில் முனைவோருக்கு முடிவெடுக்கும் திறன் அவசியம்’- மனு ரஞ்சித் ரங்கநாதன்
அப்பா பிரபல தொழிலதிபர், கல்லூரியை பாதியில் விட்டவர், தன் சொந்த முயற்சியால் தென்னிந்தியா முழுதும் 88 கிளைகளுடன் Ck's bakery பிராண்டை வெற்றி வழியில் கொண்டு சென்றதை பகிர்கிறார்.
அப்பா பிரபல தொழிலதிபராக இருக்கும் போது, அவரது மகன் தொழிலில் இறங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எப்படி தொழிலுக்குள் வருகிறார் என்பதுதான் முக்கியம். தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத் தொழிலில் எதாவது ஒரு பிரிவில் பயிற்சி பெற்று படிப்படியாக தலைமை பொறுப்புக்கு வருவதுதான் வாரிசுகளின் வழக்கமான வழியாக இருக்கும். ஆனால் மனு ரஞ்சித் (அப்பா கெவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன்) வழி கொஞ்சம் வித்தியாசமானது.
வித்தியாசமானது மட்டுமல்லாமல் கொஞ்சம் ரிஸ்கானதும் கூட. ஆனால் அந்த ரிஸ்கினை எடுத்திருக்கிறார் மனு. வெளிநாட்டில் டிகிரி படித்துக் கொண்டிருந்த மனு, ஆண்டு விடுமுறைக்கு சென்னை வந்து மீண்டும் செல்லாமல் கல்லூரியை பாதியிலே விட்டவர். தற்போது தென் இந்தியா முழுவதும் 88 'சிகே'ஸ் பேக்கரி'கள் (Ck’s Bakery) செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் 500 பேக்கரிகள் என்னும் இலக்குடன் செயல்பட்டு வரும் மனு ரஞ்சித்தை சில வார ஃபாலோ-அப்களுக்கு பிறகு சந்தித்து உரையாட முடிந்தது.
முதல் கேள்வியே கொஞ்சம் கடினமாகக் கேட்க வேண்டி இருந்தது. வேறு வழியில்லை. தரமான பதில்கள் வேண்டும் என்றால் கடிமானக் கேள்விகள் கேட்டாக வேண்டுமே. வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் விசாவை கிழித்துவிட்டு கல்லூரிப் படிப்பை விட்டது கொஞ்சம் திமிராக இல்லையா? வீட்டின் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார் மனு ரஞ்சித்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்குள் இருப்பவர்களும் கூட நான் அரோகன்ட் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் எனக்குள் பொறுமையின்மை இருந்தது. வழக்கமாக படித்து, அதன் பிறகு நிறுவனத்துக்குள் இணைந்து அதனைத் தொடர்ந்து வளர்வதற்கு நீண்ட காலம் ஆகுமோ என எனக்குத் தோன்றியது. அதனால் இந்த முடிவு.
சிறிய வயதில் இருந்தே தொழிலில் இருக்கும் குடும்பம் என்பதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என நினைத்தேன். என்னுடைய உறுதியை இப்படிதான் தெரிவிக்க வேண்டி இருந்தது.
பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி படித்து முடித்து நிறுவனத்துக்குள் ஒரு பிரிவை எடுத்திருக்கலாமே என்பதுதான். இது தவறு என்று சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டியது முடிவெடுக்கும் திறன.
யாரை வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள் அவர்கள் எடுத்திருந்த முடிவுகளின் காரணமாகவே அவர்கள் அறியப்படுவார்கள். ஆனால் நான் நிறுவனத்தில் இணைந்தால் எதாவது ஒரு பிரிவில் இணைவேன். அங்கு எனக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்குமா, இருக்குமா என்பது தெரியாது. காரணம், ஏற்கெனவே பெரிய குழு அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
அதனால் தனியாக தொழில் தொடங்கினால் மட்டுமே முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என தோன்றியது. அப்பாவுடன் இணைந்து பல ஐடியாக்கள் குறித்து விவாதித்தோம்.
இந்தியர்களின் முக்கியமான உணவு அரிசி. அதேபோல மெக்ஸிகோ மக்களின் முக்கிய உணவும் அரிசி. அதனால் மெக்ஸிகோ நாட்டின் உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவகங்களை தொடங்கலாமா என்பது உள்ளிட்ட பல ஐடியாக்களை விவாதித்தோம். இறுதியாக பேக்கரி என்பதில் முடிவெடுத்தோம்.
பேக்கரி என்பதில் என்ன புதுமை இருக்க முடியும், வழக்கமாக ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது என்பது இயல்பான எண்ணம்தான். கேக் என்பது முக்கியமான விஷயம். மக்கள் கேக் வாங்கும்போது பிராண்ட் பார்த்துதான் வாங்கிறார்கள், இனியும் வாங்குவார்கள். அதனால் பேக்கரி பிரிவில் களம் இறங்கினேன்.
ஆரம்பத்தில் நாங்களே சொந்தமாக பேக்கரிகளை ஒவ்வொரு இடத்திலும் சென்னையில் தொடங்கினோம். பிறகு பிரான்ஸைசி முறையில் விரிவுப்படுத்தத் தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் தொடங்கிய கடைகளை கூட பிரான்ஸைசியாக மாற்றினோம்.
ஏன் பிரான்ஸைசி?
பேக்கரி என்பது ரீடெய்ல் தொழில். கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து ரீடெய்ல் பிஸினஸை சிறப்பாக நடத்த முடியாது. ஒரு கிளையின் மேனேஜரை விட உரிமையாளருக்கு அதிக பொறுப்பு இருக்கும். அதனால் தற்போது எங்கள் வசம் இருக்கும் அத்தனையும் பிரான்ஸைசி அடிப்படையிலே செயல்பட்டு வருகிறது.
நிறுவனங்கள் பிரான்ஸைசி கட்டணம், புதுப்பிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை வாங்குவார்கள். ஆனால் நாங்கள் எதையும் வாங்குவதில்லை. பேக்கரி அமையும் இடத்தை பொறுத்து ரூ.15 முதல் ரூ.18 லட்சம் வரை செலவாகும். எங்களுடைய ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய கிட்சன் (centralized kitchen) மூலம் பொருட்களை அனுப்புகிறோம். இதற்கான தொகையை மட்டும் பிரான்ஸைசி எடுப்பவர்கள் செலுத்தினால் போதும்.
சராசரியாக இரண்டரை ஆண்டுகளில் ஒரு பிரான்ஸைசி லாபம் ஈட்டத்தொடங்கும். ஆனால் சில ஸ்டோர்கள் ஒர் ஆண்டுக்குள்ளாகவே லாபம் ஈட்டுகின்றன. இது சம்பந்தப்பட்ட இடம் மற்றும் முதலீட்டை பொறுத்து இருக்கும்.
அடுத்து என்ன?
இன்னும் சில ஆண்டுகளில் 500 பிரான்ஸைசிகள் மூலம் விரிவுப்படுத்த இருக்கிறோம். இதுதவிர சிகே என்னும் பெயரில் உணவுத்துறையில் விரிவடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உதாரணத்துக்கு பர்கர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட தனிப்பட்ட பிரிவுகள் சிகே Foods-ன் அடையாளமாக இருக்க வேண்டும் என்னும் திட்டம் இருக்கிறது.
இப்போதைக்கு வழக்கமான ரெஸ்டாரண்ட் அமைக்கும் திட்டம் இல்லை. ஆனால் கஃபே மாடலில் சில சோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம். பேக்கரியை போல ஆரம்பத்தில் நாங்களே முதலீடு செய்து வெற்றியடையந்த பிறகு இதனையும் பிரான்ஸைசி அடிப்படையில் விரிவுப்படுத்தும் திட்டம் இருக்கிறது, என்று விரிவாக பேசினார் மனு.
அப்பாவிடம் கற்றுக்கொண்டது?
இந்த கேள்விக்கு எல்லாமே என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில விஷயங்களை நாம் அனுபவிக்கும் போதுதான் அதற்கான மதிப்பு நமக்கு புரியும். யோசிப்பதற்கு தினசரி நேரம் ஒதுக்க வேண்டும் என அப்பா அடிக்கடி கூறுவார். ஆனால் இதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தோன்றி இருக்கிறது. காரணம், நாம் குளிக்கும்போது யோசிக்கிறோம், பயணத்தில் யோசிக்கிறோம், எப்போது வேலைகள் இல்லையோ அப்போதெல்லாம் யோசிக்கிறோம் என நினைப்பேன்.
ஆனால் யோசிப்பதற்கு நேரம் ஒதுக்கும் போதுதான் நான் செய்யவேண்டிய வேலைகள் என்ன, எப்படி திட்டமிடுவது, நீண்ட காலம் குறித்து சிந்திக்க முடிகிறது. தற்போது இதனை செய்கிறேன்.
அடுத்ததாக விட்டுக்கொடுக்க வேண்டும் என அப்பா அடிக்கடிச் சொல்வார்கள். இது சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் தொழிலுக்கு வந்த பிறகுதான் இதற்கான அர்த்தம் புரிகிறது. அனைத்து பிஸினஸ் முடிவுகளும் உங்களுக்கே சாதகமாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் உங்களுடன் எப்படி இணைந்து தொழில் செய்ய முடியும் என்னும் கேள்வி தொழிலில் எழும். அப்போதுதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதற்கான அர்த்தம் புரியும்.
வாங்கிய திட்டு/கோபம்?
இதெல்லாம் அவ்வப்போது இருப்பதுதான். தொழில் தொடங்கிய சமயத்தில் சரியான மனிதர்களைத் தெர்ந்தெடுக்க முடியாமல் சிரமப்பட்டேன். அப்போது அப்பாவுடன் சில உரையாடல்கள் நடந்தன. ஆனால் அப்போதும் அப்பா சொல்வது, ’நான் சொல்லிக் கேட்பதைவிட, இந்த அனுபவமே உனக்கு சிறந்த பாடம்’ என்பார்.
இப்போது எங்களிடம் மிகப்பெரிய கிச்சன் உள்ளது. ஆனால் தொழில் தொடங்கிய சமயத்தில் அமைத்த கிச்சன் அப்போதைய நிலைமையில் கொஞ்சம் பெரியது. இது போல சில முடிவுகளை நாங்கள் விவாதிப்போம்.
கெவின்கேரில் உங்கள் பங்கு?
தற்போதைக்கு கெவின்கேர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் மட்டும் இருக்கிறேன். நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியுமே தவிர தினசரி அலுவல்களில் என்னுடைய பங்களிப்பு இல்லை. கெவின்கேரை அடுத்த கட்டத்துக்கொண்டு செல்வதற்கு பெரிய குழு தயாராக இருக்கிறது. இப்போதைக்கு நான் சி.கே பேக்கரியில் கவனம் செலுத்துகிறேன் என விடைகொடுத்தார் மனு ரஞ்சித்.