குடும்ப பிசினஸை விட்டு, திருமண சேவைகள் ஒருங்கிணைக்கும் நிறுவனம் தொடங்கி வெற்றி கண்ட தக்ஷ்ணாமூர்த்தி...
இவரின் நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 10 ஆயிரம் திருமணங்கள் நடந்திட, திருமண சேவைகளை ஒருங்கிணைக்கிறது.
திருமணம் என்றாலே பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவு இன்று ஆகிவிட்டது. திருமணங்களுக்காக செலவு செய்யும் தொகையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்தத் தொகை அவசியமா, இல்லையா என்னும் விவாதங்களைத் தாண்டி செலவுகளும், புதுமையான திருமணங்களும் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.
திருமணம் என்பது குடும்ப விழாவாக இருந்தது மாறி தற்போது ஒரு துறையாக மாறி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.10 கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்திய திருமண சந்தையின் மதிப்பு 5,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்துத் திருமணங்களும் ஆடம்பரமாக நடப்பதில்லை என்றாலும் குறைந்தபட்ச வித்தியாசங்களை காண்பிக்கவே அனைவரும் விரும்புகின்றனர்.
இந்த சேவைகளை எங்கு பெறுவது என்னும் கேள்விக்கு பதிலாக திருமணத்தின் அனைத்து சேவைகளையும் Wedding vows நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தக்ஷ்ணாமூர்த்தியை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்து. திருமணத் துறையில் மாறிவரும் விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
எம்பிஏ பட்டதாரியான தக்ஷ்ணாமுர்த்தி, அப்பா உடன் கட்டுமானத்துறையில் சிலகாலம் இருந்தார். 24 வயதிருக்கையில் கட்டுமான நிறுவனத்தின் பல முக்கிய ப்ராஜக்டுகளை சிறப்பாக கையாண்டவர். 100 கோடி வரை மதிப்பிலான ப்ராஜக்டுகளை வெற்றிகரமாக முடித்து, தன் தந்தையின் கட்டுமான நிறுவனத்தின் வருவாயை பெருக்கியவர்.
மீடியாவில் யாரும் செய்யாததை செய்ய முடிவெடுத்துதான் wedding vows (வெட்டிங் வவ்ஸ்) என்னும் ஆங்கில பத்திரிகையை 2011-ல் தொடங்கினார். தற்போது திருமணம் என்பது மிகப்பெரிய துறையாக வளர்ந்திருக்கிறது. ஆனால் நான் தொடங்கும்போது இவ்வளவு பெரிய துறையாக மாறும் என நினைக்கவில்லை, என்கிறார் தக்ஷ்ணாமூர்த்தி.
பத்திரிகையின் அடுத்த கட்டமாக திருமணத்துக்கான சேவைகளை ஒருங்கிணைப்பதை செய்யத் தொடங்கியது wedding vows. திருமண ஏற்பாட்டிற்கு உதவும் ஆன்லைன் தளம் கொண்டிருக்கும் இந்நிறுவனம், ஆண்டுக்கு 10 ஆயிரம் திருமணங்கள் நடந்தேறவும், மாதம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை சேவையாளர்களுக்கு வழங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
திருமணத்துக்கு தேவையான மேடை அலங்காரம், கேட்டரிங், போட்டோ, நகை, இசை என பலவிஷயங்களை வாடிக்கையாளர்கள் தேட வேண்டி இருப்பதால் அவற்றை எங்கள் தளம் மூலம் ஒருங்கிணைத்தோம். பல்வேறு சேவையாளர்களுடன் கைகோர்த்து அவர்களை பட்டியலிடுகிறோம். மண வீட்டார் தங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப சேவைகளை எங்கள் மூலம் பெற்றுக் கொள்வர்.
இது தவிர தற்போது திருமணத் துறையில் என்ன புதுமைகள் நடந்து வருகிறது என்பது குறித்து தொடர்ந்து தகவல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். இத்துறையில் ஒருவரே தொடர் வாடிக்கையாளர்களாக இருக்கமாட்டார் என்பது எங்கள் முன் உள்ள சவால்தான். ஆனால் இந்தியாவில் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் புதிய வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வருகிறார்கள்.
திருமணம் வீண் செலவு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் எவ்வளவு குடும்பங்கள் திருமணத்தை நம்பி இருக்கும் என்பது புரியும். இந்தியாவின் திருமண சந்தை மதிப்பான 5,000 கோடி டாலரில் தென் இந்தியாவின் பங்கு 12 சதவீதமாக இருக்கிறது.
தற்போதைய டிரெண்ட்?
இதுவரை திருமணம் என்றாலே நகை தான் பிரதானம் என்று இருந்தது. ஆனால் தற்போது நகை முக்கிய பங்கு வகிக்கவில்லை. திருமணத்தை அனுபவமாக மாற்றவே மணமகன்/மகள் விரும்புகிறார்கள். Destination wedding இப்போது அதிகமாகி இருக்கிறது. அதற்கு அதிகம் செலவாகுவதில்லை என்பதும் முக்கியமான விஷயம்.
ஒரு உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால்,
சென்னையில் 1,000 நபர்கள் கலந்து கொள்ளும் ஆடம்பர திருமணத்துக்கு ரூ.1 கோடி செலவாகும். ஆனால் இதே ஒரு கோடியில் 100 நபர்களை அழைத்து துருக்கியில் திருமணத்தை நடத்த முடியும். விமான செலவு, தங்கும் செலவு, உணவு எல்லாவற்றையுமே ஒரு கோடி ரூபாயில் முடிக்க முடியும். இது போல ஐரோப்பிய நாடுகள் சுற்றுலாவை ஊக்குவிக்க இதுபோன்ற திட்டங்களை வைத்துள்ளன.
அதேபோல 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணங்கள் மண்டபத்தில்தான் நடந்தன. ஆனால் தற்போது அனைத்து ஐந்து நட்சதிர ஓட்டல்களிலும் இதற்கான பிரத்யேக ஹால், மேனேஜர் குழுவை வைத்திருக்கின்றன. ஓரளவு வசதியானர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை வைக்க விரும்புகின்றனர்
சர்வதேச டிரெண்ட்?
திருமணத்துறையில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. இத்துறை ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தில் என்ன செய்ய முடியும், சர்வதேச அளவில் நடந்து வரும் மாற்றங்களை குறித்து அறிந்துகொள்ள சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். ஏப்ரல் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் மாமல்லபுரத்தில் உள்ள ராடிசன் புளூ ஓட்டல் இந்த கருத்தரங்கினை நடத்துகிறோம், என்றார்.
திருமண நிகழ்வில் சர்வதேச அளவில் முக்கியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். குறிப்பாக Preston Bailley கலந்து கொள்ள இருக்கிறார். அம்பானி குடும்பத்தின் இரண்டு திருமணங்களை ஒருங்கிணைத்தவர் இவர்தான். சர்வதேச அளவில் முக்கியமானவர். இவர் தவிர இந்தத் துறையின் பல முன்னோடிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை மட்டுமல்லாலம் இந்தியா, மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமணம் தொடர்பாக கருத்தரங்கு முதல் முறையாக தற்போது சென்னையில் நடக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவிலான வாய்ப்புகள், பல கலாசாரங்களை தெரிந்துகொள்ள முடியும் எனக் கூறினார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு திருமண வீடுகளில் போட்டோவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஆனால் இன்றைய நிலைமையில் போட்டோகிராபரை தவிர யாரும் திருமணத்தை பார்க்க முடியாது என்னும் அளவுக்கு மேடையில் அவர்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் Destination wedding அந்த நிலையை அடையும் என்றே தோன்றுகிறது.
வெற்றிகரமான குடும்ப பிசினஸ் இருந்தும் தனக்கான பாதையில் சென்று, தனியே தன் தொழிலில் வெற்றி கண்டுள்ள தக்ஷ்ணாமூர்த்தி, ஒரு சிறந்த தொழில்முனைவருக்கான எடுத்துக்காட்டு. பாரம்பரிய பழக்கத்தை தற்கால தொழில்நுட்பம், புதுமைகளை புகுத்தி, தொடர்ந்து வருங்கால வளர்ச்சியை சிந்தித்து செயல்பட்டாதாலேயே திருமணத்துறையில் அவர் இவ்வித வெற்றியை பெற்றுள்ளார்.