‘கொரோனா பரிசோதனையில் ஸ்டார்ட் அப், கார்ப்பரேட், அரசாங்கம் ஒன்றிணைய வேண்டும்’ - தைரோகேர் வேலுமணி
கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தொடர்பாக இந்தியாவில் நிலவும் முக்கிய சவால்கள் குறித்து யுவர்ஸ்டோரி உடன் பகிர்ந்துகொண்டார் தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி.
கொரோனா வைரஸ் தொற்று மொத்த உலகையும் நிலைகுலையச் செய்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எண்பதைக் கடந்துவிட்டது. 3500க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகப்படுத்தவேண்டும் என்பதையே இந்தச் சூழல் உணர்த்துகிறது. பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு ஸ்டார்ட் அப்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்கள் இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அவசியம் நிலவுவது குறித்தும் இந்தியாவிற்கே உரிய தனித்துவமான சவால்கள் குறித்தும் தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி பகிர்ந்துகொண்டார்.
கொரோனா பரிசோதனைக்கு 4,500 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் இதில் 1,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் இதற்காக பரிசோதனைகள் நிறுத்தப்படக்கூடாது. இதற்கான முயற்சிகள் மேலும் தீவிரமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் விவரித்தார்.
தைரோகேர் நிறுவனம் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள இந்திய அரசாங்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் ப்ராக்டோ உடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் தனிநபர்கள் ஆன்லைனில் பரிசோதனைகளை புக் செய்யலாம்.
இந்தியாவும் ஒட்டுமொத்த உலகமும் தற்போது சந்தித்து வரும் அபாயகரமான சூழலுக்கு தீர்வுகாண மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் வேலுமணி பகிர்ந்துகொண்டார்.
யுவர்ஸ்டோரி: தற்போது கோவிட்-19 பரிசோதனை செய்வதில் சந்திக்க நேரும் முக்கியப் பிரச்சனை என்ன?
டாக்டர் வேலுமணி: மூலப்பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால் என்னால் நீண்டகால அடிப்படையில் திட்டமிடமுடியவில்லை. இன்றளவும் பெரும்பாலான டெஸ்ட் கிட் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கோவிட் கிட் இறக்குமதிக்கு 30 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. அத்துடன் நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக உள்ளூர் தயாரிப்பாளர்களும் 30 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயித்து விற்பனை செய்கின்றனர். ஆனால் வேறு வழியில்லாத காரணத்தால் நாங்கள் எங்கள் செயல்பாடுகளைத் தொடர்கிறோம். ஆனால் இதற்கு விரைவாக தீர்வுகாணவேண்டியது அவசியம்.
அடுத்தபடியாக நான் பரிசோதனைகளுக்கான மாதிரிகளை சேகரிக்கவேண்டுமென்றால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் என்னிடம் இல்லை. பலர் இதில் சமரசம் செய்துகொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மாதிரியை சேகரிக்கின்றனர்.
இன்று இந்தப் பேரிடரில் இருந்து மீண்டு சீனா உலகிற்காக உற்பத்தி செய்து வரும் நிலையில், தட்டுப்பாடு வருவதற்கான வாய்ப்பு இருப்பதை நாம் முன்னரே கணித்திருக்கவேண்டும். தயாரிப்பையும் முன்னரே தொடங்கி இருக்கவேண்டும். நாங்கள் எங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறோம். இந்தப் பேரழிவை சமாளிப்பதில் இயன்ற வரை பங்களிக்க விரும்புகிறோம்.
எங்கள் நிறுவனம் மனிதவளம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதியுடன்கூடியது. மிகப்பெரியளவில் செயல்படும் நாடு தழுவிய நெட்வொர்க் கொண்டது. என்னால் இயன்ற அளவில் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால் விரைந்து தீர்வுகாண வேண்டும்.
யுவர்ஸ்டோரி: நோய்த்தொற்று கண்டறியப்படாதவர்களைக் கண்டறிய டெலிமெடிசன் உதவுமா?
டாக்டர் வேலுமணி: துரதிருஷ்ட்டவசமாக 90% மருத்துவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவ சமூகத்தினர் வைரஸ் குறித்து அச்சப்பட்டு ஆபத்தைத் தவிர்க்க விரும்பினால் டெலிமெடிசன் முறையைப் பின்பற்றலாம்.
டெலிமெடிசன் மூலம் தீர்வுகளை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதுவரை மருத்துவ சமூகமானது டெலிமெடிசன் முறையை எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலை மாறி வருகிறது.
யுவர்ஸ்டோரி: கோவிட்-19 பரிசோதனைகளில் நீங்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் என்ன?
டாக்டர் வேலுமணி: நாங்கள் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் திறன் கொண்டுள்ளோம். ஆனால் கோவிட் பரிசோதனை ரத்தப் பரிசோதனை அல்ல என்பதுதான் பிரச்சனை. ஸ்வாப் சோதனைகளில் அனுபவமிக்க நபர்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றனர். பயிற்சியைப் பொறுத்தவரை ரத்தம் : ஸ்வாப் என்பது 1000 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. ஆனால் திடீரென்று 1 : 1 என்கிற விகிதத்தில் தேவைப்படுவது சவாலாக உள்ளது.
மனிதவளம் மற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஸ்வாப் சேகரிக்க ஸ்விக்கி, ஊபர், ஓலா போன்ற நிறுவங்களில் பணியாற்றிய வேலையில்லா டெலிவரி ஊழியர்களை நியமிக்கலாம். பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் அவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம். இதற்கு மருத்துவ நிபுணத்துவம் அவசியமில்லை.
யுவர்ஸ்டோரி: பணிகளைத் துரிதப்படுத்த எது உதவும்?
டாக்டர் வேலுமணி: கார்ப்பரேட்கள் ஒன்றிணைந்தால் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒருவரிடம் பேசுவதற்கு பதிலாக ஒவ்வொருவரையும் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது. பரிசோதனை அளவை அதிகப்படுத்தவேண்டும்.
அடுத்து நிலவும் பிரச்சனை லாஜிஸ்டிக்ஸ். நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள சூழலில் கௌஹாத்தியில் மாதிரி சேகரிக்கப்பட்டால் அவை எவ்வாறு என்னை வந்தடையும்?
நான் ஏற்கெனவே டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதுபோல விமான சேவை வழங்கும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது 10 சதவீத விமானங்களை சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக பயன்படுத்த வலியுறுத்தப்படவேண்டும். அடுத்தகட்டமாக கூரியர் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது 20 சதவீத வாகனங்களை விமான நிலையத்திலிருந்து இணைக்க பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படவேண்டும்.
நாடு எவ்வளவு காலம் முடக்கப்படும் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பியிருப்பதால் அவர்கள் இடம்பெயர ஓராண்டு வரை ஆகலாம்.
பல்வேறு நிலைகளில் பாதிப்பு உள்ளது. தனிநபர் மட்டுமே இந்தச் சூழலைக் கையாள முடியாது. முன்னணி 50 நிறுவனங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். இந்த முயற்சியானது பணத்திற்காக மட்டுமல்லாமல் சரியான நபர்களை ஒன்றிணைக்கவும் அவசியம். இதனால் இது தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து அரசாங்கத்துடனும் சமூகத்துடனும் ஒருங்கிணைந்து, கலந்தாலோசித்து தீர்வுகாணலாம்.
இன்றைய நிலையில் பிரச்சனை இல்லாததுபோல் தோன்றினாலும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அதற்கு ஸ்டார்ட் அப்கள், அரசாங்கள், தனியார் துறை அனைத்தையும் ஒன்றிணைக்கவேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா