ஆட்டுபால் சோப், மூலிகை பேஸ்ட், ஷாம்பு; மாதம் 7லட்சம் டர்ன்ஓவர் - ஈரோடு விவசாயியின் தொழில் கதை!
அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பேஸ்ட், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் பசை போன்றவற்றை இயற்கையான மூலிகை பொருள்களைப் பயன்படுத்தி தரமான முறையில் தயாரித்து, அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகிலுள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வி.எஸ். மகாலிங்கம்.
நவீனமயமான உலகில் இயற்கையை மறந்துவிட்டு, செயற்கையோடிணைந்த வாழ்வை மேற்கொண்டு வந்த இன்றைய இளைய சமுதாயத்தினரை புதிய புதிய நோய்களும், உருமாறும் வைரஸ்களும் நமது பாரம்பரியமான இயற்கை உணவுகள், மூலிகைகள் பக்கமாக திரும்பியுள்ளது. ஆர்கானிக் உணவுகள், ஆர்கானிக் பொருள்கள் என திரும்பும் பக்கமெல்லாம் இயற்கைப் பொருள்களைப் பற்றியத் தேடல் தொடங்கியுள்ளது.
அந்த தேடலுக்கு தீனி போடும் விதமாக அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பேஸ்ட், ஷாம்பு, பாத்திரம் துலக்கும் பசை போன்றவற்றை இயற்கையான மூலிகை பொருள்களைப் பயன்படுத்தி தரமான முறையில் தயாரித்து, அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகிலுள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்த வி.எஸ். மகாலிங்கம்.
ஆட்டுப்பாலில் சோப் தயாரிப்பு
சருமப் பாதுகாப்புக்கு ஆட்டுப்பால் சோப், மூலிகை சோப், ஆரோக்கியமான பற்களுக்கு மூலிகை பற்பசை, மூலிகை பாத்திரம் துலக்கும் பசை என வேதிப் பொருள்கள் கலப்பில்லாத மூலிகை அழகு சாதன, தினசரி பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில்முனைவோரான மகாலிங்கம் இதுகுறித்து யுவர் ஸ்டோரி தமிழுக்கு அளித்த பேட்டியில் தன் தொழில் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
நான் பி.ஏ. வரை படித்துவிட்டு, ஏராளமான தொழில்களை செய்து வந்தேன். ஆனால், அவை எதுவும் சரியாக வராத காரணத்தால், குடும்பத் தொழிலான விவசாயம் மற்றும் கால்டை வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வந்தேன். அப்போதுதான் விவாசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது.
இதையடுத்து, நானும், எனது தங்கையும் இணைந்து அதற்கான பயிற்சிகளைப் பெற்றோம். தொடர்ந்து 2017ல் ’தேவாஸ் ஆர்கானிக் புராடக்ட்ஸ்’ என்ற கம்பெனியைத் தொடங்கினோம். எங்கள் கம்பெனி மூலம் ஆட்டுப்பாலில் இருந்து சோப் தயாரிக்கத் தொடங்கினோம் என தனது வெற்றிக் கதையைத் தொடங்கினார் மகாலிங்கம்.
இவரின் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளில் இருந்து கிடைத்த ஆட்டுப்பாலை பதப்படுத்தி, அதனுடன் பழங்களையும் சேர்த்து தயாரித்து புதுப் பொலிவுடன் ஆட்டுப்பால் சோப்பை உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்தனர். ஆனால், கிராமப் பகுதி என்பதால் தொடக்கத்தில் வாரத்துக்கு 50, 60 சோப்புகளே விற்பனையாகியுள்ளன. இதனால் தயாரித்த ஆயிரக்கணக்கான சோப்புகளை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக அளித்து மக்களின் கருத்துக்களையும், தேவைகளையும் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக ஆட்டுப்பால் என சந்தைகளில் விற்பனையாகும் சோப்புகளில் பால் பவுடரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நாங்கள் தூய உண்மையான ஆட்டுப்பாலை பயன்படுத்தி சோப் தயாரித்தோம். மேலும் சோப் தயாரிக்க தேவைப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எங்கள் மரங்களில் இருந்து கிடைக்கும் தேங்காயை ஆட்டி எண்ணெய் எடுத்து பயன்படுத்துவோம்.
”ஆட்டுப்பால் சோப் தவிர, வெட்டிவேர், கற்றாழை, வேப்பிலை என பல்வேறு மூலிகை கலப்பிலான வகை வகையான சோப்புகளையும் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம். இதனால் எங்களின் வியாபாரம் சற்று சூடு பிடித்தது,” என்கிறார்.
Miyo என்ற ப்ராண்ட் பெயரில் இயங்கும் இவர்கள், தற்போது 10 வகையான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர்களிடம், ஆட்டுப்பால் சோப் ரூ.90-க்கும், மூலகை சோப்புகள் ரூ.180-க்கும், குழந்தைகளுக்கான சிறப்பு சோப் ரூ.240-க்கும் என பல்வேறு தரப்பினருக்கான சோப்புகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
தயாரிப்பு, உற்பத்தி போன்ற விசயங்களை மகாலிங்கத்தின் மனைவி பரமேஸ்வரி கவனித்துக் கொள்ள, ஆன்லைன் விற்பனை உள்ளிட்ட டிஜிட்டல் மார்க்கெட்டிக் வேலைகளை மகாலிங்கத்தின் தங்கை சாந்தி பார்த்துக் கொள்ள, மார்க்கெட்டிங்கை மகாலிங்கம் மேற்கொண்டு வருகிறார். ஆக மொத்தம் ஓர் குடும்பமாக இணைந்து இத்தொழிலை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
“ஆட்டுப்பாலைப் பயன்படுத்தி மட்டும் மாதமொன்றுக்கு சுமார் 1250 சோப்புகளைத் தயாரிக்கிறோம். இதற்குத் தேவைப்படும் பாலை எங்கள் பண்ணையில் இருந்தும், அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும் வாங்கி, அந்தப் பாலை பதப்படுத்தி கெட்டியாக்கி, தேவைக்கேற்ப பயன்படுத்துவோம். இந்த ஆட்டுப்பாலுடன் தேங்காய் எண்ணெய், பாதாம் விழுது, பூந்திக்கொட்டை போன்றவற்றை தேவையான அளவில் சேர்த்து, கிடைக்கும் சோப்புக் கரைசலை அச்சில் ஊற்றி 1 நாள் காற்றோட்டமாக வைத்திருந்தால் சோப் தயார். இதனை தேவையான அளவுகளில் வெட்டி, பேக்கிங் செய்து பின் விற்பனைக்கு அனுப்புவோம்,” என்றார்.
முற்றிலும் மூலிகைப் பொருள்களால் தயாரிக்கப்படும் இந்தச் சோப்புகளை மொத்தமாக வாங்கி வைத்து ஆண்டுக்கணக்கில் கூட பயன்படுத்தலாமாம். மேலும், முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த சோப்புகளை சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு டிஸ்ரிபியூட்டர் நியமித்து இருக்கும் இவர்கள், ஆந்திரா, பெங்களூரூ உள்பட இந்தியா முழுவதும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
6 பேர் பணிபுரிந்து வரும் மாகாலிங்கத்தின் நிறுவனம், மாதமொன்றுக்கு 6 முதல் 7 லட்சம் வரை ட்ர்ன்ஓவர் செய்கிறதாம். மாதமொன்றுக்கு 60 ஆயிரம் வரை வருவாயாகக் கிடைக்கிறதாம்.
சோப்பைத் தொடர்ந்து, இயற்கையான முறையில் பற்பசை தயாரிப்பிலும் தற்போது களமிறங்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மியோடென்ட் ‘(Miyodent) என்ற பெயரில் புதிய ஆர்கானிக் பற்பசையைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
இதில், தேங்காய் எண்ணெய், கருப்பட்டி, கருவேல், ஆலம் விழுது, நாயுருவி, வெட்டிவேர், அதிமதுரம், திரிபலா, பூந்திக்காய், உப்பு, பட்டை, கிராம்பு, புதினா போன்ற இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால், பல் தேய்மானம், பல் வலி, கூச்சம் போன்றவை குறைகிறது.
“இது ஈறுகளை வலுவாக்கி, உமிழ்நீர் சுரத்தலை அதிகரிக்கிறது. இவைதவிர, தலைக்கு போடும் ஆர்கானிக் ஷாம்பு, மூலிகை பாத்திரம் துலக்கும் பசை என இன்னும் பல்வேறு புதிய திட்டங்களை வைத்துள்ளோம்,” என்கிறார் மகாலிங்கம்.
மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்களை வேதிப் பொருள்கள் கலப்பில்லாத இயற்கையான மூலிகைப் பொருள்களாக வழங்கவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை உருவாக்க முடியும். இதேபோல, இன்னும் பல்வேறு மக்களின் தினசரி பயன்பாட்டு பொருள்களை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்தான் குடும்பமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என உற்சாகத்துடன் தெரிவிக்கிறார் மகாலிங்கம்.
ஓர் விவசாயியின் கனவை நனவாக்க ஆதரவு தாருங்கள் என வேண்டுகோள் விடுக்கும் மகாலிங்கத்தின் மூலிகை பொருள்களை வாங்க 99 4389 45 45 என்ற அவரின் செல்போனுக்கோ, அல்லது www.miyaorganic.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்.
சோற்றுக்கற்றாழையில் இத்தனை வணிக வாய்ப்புகளா? அய்யா இராம. சண்முகம் சொல்வதை கேளுங்க...