அளவுக்கு அதிக உடற்பயிற்சியால் இருதயத்துக்கு ஆபத்து ஏற்படலாம் எச்சரிக்கை!
மருந்துகளில் அளவுக்கு அதிகமான டோஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது போல, மிகை உடற்பயிற்சி ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்வது நல்லது தான். ஆனால், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அதிலும் உடற்பயிற்சிக்கு பழகாதவர்கள், மிகையான உடற்பயிற்சி செய்தால், மாரடைப்பு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க இருதய சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
“உடற்பயிற்சி என்பது மருந்து தான். மிதமானது முதல் தீவிர உடற்பயிற்சி ஒட்டுமொத்த இதய நலனக்கு உதவக்கூடியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மருந்து போலவே, இதன் அளவு குறைவாகலாம், அளவுக்கு அதிகமாகலாம். அதிகம் என்பது எப்போதுமே நல்லது அல்ல, அளவுக்கு அதிக உடற்பயிற்சி மாரடைப்பை உண்டாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யாதவர்கள் அல்லது இருதய பாதிப்பு உள்ளவர்கள் இவ்வாறு செய்யும் போது அபாயம் அதிகம்," என புதிய அறிவியல் அறிக்கைகள் எழுதும் குழுவின் தலைவரான பேரி பிராங்ளின் தெரிவித்துள்ளார்.
“அதிகமானவர்கள் மராத்தான் ஓட்டம், டிரையத்லான்களில் பங்கேற்கின்றனர். இத்தகைய கடினமான உடற்பயிற்சியின் பலன்கள் மற்றும் பாதகங்கள் பற்றி புரிய வைப்பது தான் அறிகையின் நோக்கம்,” என்று அவர் கூறியுள்ளார்.
300க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை பரிசீலனை செய்த போது, தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்கள் உள்ளிட்ட உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பு அல்லது திடீர் இருதய செயலிழப்புக்கு உள்ளாகும் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதில் உள்ள பாதகங்களும் தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலங்களில், மராத்தான் ஓடுபவர்களில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்திருப்பது, அதிக இடர் உள்ளவர்கள் இவற்றில் ஈடுபடுவதை உணர்த்துகிறது.
துடிப்புடன் இருக்க விரும்புகிறவர்கள், சிறிய அளவில் உடற்பயிற்சி செய்வதை துவக்குவது நல்லது என அமெரிக்க இருதய சங்கம் தெரிவித்துள்ளது.
“உடற்பயிற்சி செய்வது முக்கியம் தான். ஆனால், சிறிய அளவில் துவங்குவது ஏற்றது,” என்று பிராங்க்ளின் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்ம் அப் செய்வது, மலைகளில் ஏறுவதற்கு முன், 6 வாரங்கள் சமதளத்தில் நடப்பது, உடற்பயிற்சிக்கு பின் ஓய்வு எடுப்பது, மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை முக்கியம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: ஏ.என்.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்