மாதம் 2000 பூச்செடி, மரங்கள் ஏற்றுமதி: நர்சரி கார்டன் தொழிலில் மாதம் 2 லட்சம் ஈட்டும் கார்த்திக் குமார்!
நித்தம் நித்தம் சமையலுக்கான காய்கறிகளுக்காகவோ, வீட்டுத்திண்ணையில் அமர்கையில் விரும்பும் தூய சுவாசக்காற்றுக்காகவோ, வீட்டு பால்கனிகளையும், ஜன்னல்களையும் அலங்கரிப்பதற்காகவோ....என ஏதோவொரு தேவைக்காக வீட்டுக்குள் ஒரு குட்டித் தோட்டம் அமைப்பதை பலரும் மனதிற்கினிய வேலைகளுள் ஒன்றாக செய்கின்றனர். தோட்டங்களை நேசிக்கும் மக்கள் பலரும் ஹாபியாக கொண்டுள்ள கார்டனிங்கையே, வெற்றிகரத் தொழிலாக மாற்றியுள்ளார் மதுரை வாடிப்பட்டியில் உள்ள கட்டங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார்.
அடிப்படையில் எம்.எஸ்சி தோட்டக்கலை பட்டதாரியான அவர், மதுரையில் இரு இடங்களில் நர்சரி கார்டன்கள் அமைத்து விற்பனை செய்வதுடன், மாலத்தீவு, சிங்கப்பூர், துபாய் மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் மாதத்திற்கு 2000 செடிகள் மற்றும் மரங்களை ஏற்றுமதி செய்துவருகிறார்.
ஏற்றுமதி, நர்சரி கார்டன் தவிர கார்டனிங் வடிவமைப்பு வேலையையும் செய்து மாதம் ரூ 2 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.
“அடிப்படையில் அப்பா ஒரு விவசாயி. பொதுவாக பத்தாம் வகுப்பில் 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்தால், முதல் க்ரூப்பில் சேருவதற்கு தகுதி கிடைத்துவிடும். ஆனால், நான் அப்போதும் தொழிற்கல்வியை தான் தேர்ந்தெடுத்தேன். எனக்கு வயக்காட்டில் இறங்கி வேலைப்பார்க்க ரொம்ப இஷ்டம். அதனால், பள்ளிப்பருவத்திலே வேளாண் கல்வி தான் படிக்கப் போகிறோம் என்பதையும், தொழில் முனைவோராக தான் ஆகவேண்டும் என்பதில் ரொம்ப உறுதியாக இருந்தேன்,” என்று வேளாண் மீதான முதல் காதல் எங்கு தொடங்கியது என்பதை பகிர்ந்தார் அவர்.
பட்டப்படிப்பு முடித்த சமயத்தில் மாலத்தீவில் உள்ள ஒரு தாஜ் எக்ஸோடிகா எனும் ஐந்து நட்சத்திர விடுதியில் புல்தரை மற்றும் தோட்டத்தை அமைப்பதற்காக 6 மாத பணிக்கு சென்றுள்ளார். அப்போது, நிலத்தோற்ற வடிவமைப்புக்காக அலங்காரச் செடிகள், புற்கள் மற்றும் பிற செடிகள் இறக்குமதியாகியுள்ளன. செடிகளை சேகரிக்கும் இடத்தில் இருந்தவருக்கு அத்தொழிலில் மீது ஈர்ப்புவர, அதேத் துறையில் பயணிக்கும் அவர், தொழில் சார்ந்த கூடுதல் தகவல்களை திரட்டி உள்ளார். பின், அப்போதே 70 டாலர் மதிப்பிற்குரிய ஆர்டர் ஒன்றையும் பெற்று நாடு திரும்பியுள்ளார்.
“மாலத்தீவு ஓட்டலில் லேண்ட்ஸ்கேப்பிங் செய்யும் போது எனக்கு எக்கச்சக்கமான செடிகள் இறக்குமதியாகின, அதைத் தான் நட்டு வடிவமைத்துக் கொண்டிருந்தேன். அப்போ, இதே ஃபீல்ட்டிலிருக்கும் நாமளும் ஏன் செடிகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தோணியது. உடனே 70 டாலருக்கு ஆர்டரும் கிடைத்தது. ஆர்டர் பெற்று கொண்டு ஊரு திரும்பிவிட்டேன். இது நடந்தது 2003ம் ஆண்டில்,
அப்போது ஒரு டாலரின் மதிப்பு 35ரூபாய், சோ, மொத்த ஆர்டரே கூட்டி கழித்தால் 2,500ரூபாய் தான் வரும். ஆனா, நான் 1000ரூபாயுக்கு செடிகளை வாங்கி அனுப்பி வைத்துவிட்டு அதற்கான காசை கலெக்ட் பண்ண, 10,000 ரூபாய்க்கு பிளைட் டிக்கெட் போட்டு போனேன். கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும், திரும்பி வரும்போது ரூ 3 லட்சம் ஆர்டரை பெற்று வந்தேன். அன்று அந்த ஆர்டர் கிடைக்கவில்லையெனில், இன்று என் தொழில்வாழ்வே கேள்விக்குறியாகி இருக்கும்,” என்றார்.
2004ம் ஆண்டு ‘கார்த்திக் அண்ட் கோ’ எனும் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்து அனைத்து வகையான செடிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து விற்பனை செய்துவருகிறார். அந்த நேரத்தில் மாலத்தீவு வேளாண் துறை அமைச்சகத்திற்கு செடிகளை அனுப்பும் வாய்ப்பு இருந்துள்ளது . தொழிலுக்கு அவர் புதிது என்றாலும் இத்துறையில் டாப் சக்சசில் தொழில் புரியும் பிற விற்பனையாளர்களுடன் மோதுவதற்கான ஓர் வாய்ப்பாகக் கருதி, மாதிரி செடிகளை சமர்பித்துள்ளார். அவருடைய தொழிலின் நேர்த்தியை கண்டவர்கள், மறுமாதமே பல்க் ஆர்டரை கொடுத்துள்ளனர்.
“தொடங்கிய போது மரக்கன்றுகளையும், செடிகளையும் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து, அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினேன். 1000 செடிகள் ஆர்டர் கிடைத்தால் 1500 செடிகள் வாங்கி தேர்ந்தெடுத்ததில் உபரிகளின் எண்ணிக்கை அதிகமாகியது. சோ, அந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூரில் ஒரு விற்பனைக்கூடம் தொடங்கலாம் என்று திட்டமிட்டு, கோச்சடை பகுதியில் 25,000 முதலீட்டில் நர்சரி கார்டனை தொடங்கினேன்,” என்கிறார்.
மதுரை கோச்சடையில் உள்ள அவரது ‘லோட்டஸ் நர்சரி கார்டன்’-ல் அவென்யூ மரங்கள், அலங்கார மரங்கள், செம்பருத்தி போன்ற, பூஞ்செடிகள், ஹெட்ஜ் செடிகள், 30வகையான கொடிகள், தரைபடர் தாவரங்கள், 4 வகையான புற்கள், 10 வகையான ரோஜாக்கள், 30 வகையான பனை மரங்கள், மூலிகைசெடிகள், பொன்சாய் மரங்கள், பூங்கன்றுகள், பழச்செடிகள், வீட்டினுள் வளர்க்கும் செடிகள், ராசிக்குரிய மரங்கள் என 300க்கும் அதிகமான வகையான செடிகள் படர்ந்து விரிகின்றன.
2014ம் ஆண்டில் ரூ 25,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நர்சரியின் இன்றைய மதிப்பு ரூ 5 லட்சம். மதுரையில் இரு கிளைகளுடன் உள்ளூர் வணிகத்தை கவனித்துகொண்டே மாலத்தீவு, துபாய், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 4 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்.
தாவரங்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்பான படிநிலைகளை பற்றி அவர் பகிருகையில்,
“நாம் ஏற்றுமதி செய்யும் செடி வணிக நோக்கத்திற்காக நிலத்தில் பயிரிடப்பட்ட தாவரம் என்ற சான்றிதழ் பெற்றுபின், தாவர ஆய்வு அதிகாரியை தொடர்பு கொண்டு நாம் ஏற்றுமதி செய்யவுள்ள செடியை எந்த பக்குவநிலையில் அனுப்பவேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற நாட்டில் எந்த வகையான தாவர சுகாதார சான்றிதழ் கேட்கிறார்களோ அதையும் பெற்று கொள்ளல் அவசியம். பிறகு செடிகளை வேர்பிடி மண்ணோடு அனுப்ப முடியாது. வேரினை சுத்தம் செய்து மண்ணுக்கு மாற்றாய் தேங்காய்நார் கொண்டு செடிகளை அனுப்பவேண்டும்” என்றார்.
செடிகள் ஏற்றுமதி தொழிலை பொறுத்தவரை 200% லாபம் கிடைக்கும் அதே வேளையில், அடியாச்சு என்றால் பூமராங் போன்று மொத்த முதலும் காலியாகும் என்கிறார் அவர். ஏனெனில் அதுபோன்ற பற்பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறார் கார்த்திக்.
“’ஐரோப்பாவிற்கு 2லட்சம் மதிப்புள்ள பத்தடி அவென்யூ மரங்களை பிளைட்டில் ஏற்றுமதி செய்திருந்தேன். அதில் சில பூச்சிகள் இருந்து மட்கிய மணம் வீசியிருக்கிறது. ஒரு கண்டெய்னர் நிரம்ப 30 மரங்களை அனுப்பும் போது குட்டி குட்டி லார்வாக்களாக இருக்கும் நம்மால் அதை கணிக்க முடியாது . புழுக்கள் ஸ்பாட்டை அடைவதற்குள் பலமடங்காக பெருகிவிடும். அந்த சரக்கின் விலை 2 லட்ச ரூபாய், பிளைட் செலவு 70,000ரூபாய் என மொத்தமாக நஷ்டமாகியதுடன், அந்த மரங்களை அப்புறப்படுத்த ரூ1.5லட்சம் செலவு செய்தேன்.” என்கிறார்.
“நாம உயிருள்ள பொருள்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கையில், அவைகளை பற்றி நிறைய படிக்கணும். தினந்தோறும் ஆய்வு செய்து கொண்டே இருக்கவேண்டும். செடிகளை பொறுத்தவரை ஒரு தொற்று உண்டாகிவிட்டால், ரொம்பவே வேகமாக எல்லாச் செடிகளையும் அழித்துவிடும். செடிகளுக்கும் கிரிட்டிக்கல் ஸ்டேஜ்னு ஒண்ணு இருக்கு. அந்த நிலைக்கு செடிகள் வந்துவிட்டால், என்ன செய்தாலும் நம்மால் அவற்றை காப்பாற்ற முடியாது. சோ, ஒரு குழந்தையை கவனித்துகொள்வது போல் பார்த்து கொள்ள வேண்டும்.” என்றார் அவர்.
மதுரையில் கோச்சடை மற்றும் திருநகர் ஆகிய இரு இடங்களில் நர்சரி அமைத்து, கேரளா, ஆந்திரா, கொல்கத்தா என இந்தியா முழுவதும் சப்ளையர்களை கொண்டு தொழிலை வெகு சிறப்பாய் நடத்தி வருகிறார்.
எப்பொழுதும் பத்து லட்சம் செடி ,கொடி, மரங்களை கொண்ட நர்சரி கார்டனில் தாவரத்தேக்கம் ஏற்படுவதை தடுக்க, அவர் தொடங்கிய அடுத்த தொழில் முதல் தொழிலின் தொடர்ச்சி. ஆம், ‘கீரின் ஸ்கேட்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் புல்தரைகள், தோட்டங்கள் அமைக்கும் நிலத்தோற்ற வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மதுரையில் அன்னை பாத்திமா கல்லூரி, ஹனிவேல் நிறுவனம், ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளி என பெரும் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் வளாகத்தினை அவருடைய அழகியல் உணர்வால் மிளிர வைத்துவருகிறார்.
நர்சரி கார்டன், செடி, மர ஏற்றுமதி மற்றும் நிலத்தோற்ற அலங்காரிப்பாளர் என துறைச் சார்ந்து தொடர்ந்து அடுத்தடுத்த தொழிலை விரிவுப்படுத்திவரும் கார்த்திக், விருதுநகரில் உள்ள நரிக்குடி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகளையும், செடிகளை சொந்தமாய் உற்பத்தி செய்யவதை எதிர்கால கனவுத்திட்டமாய் கொண்டு உழைத்து வருகிறார்.