ரூ.5,000 முதலீடு; 7 ஆண்டுகளில் மாதம் 50 லட்சம் டர்ன்ஓவர் - மகளின் பிசினசை இன்ஸ்டாவில் பேமஸ் ஆக்கிய தாய்!
தன் குழந்தைகளுக்கான எஜுகேஷனல் டாய்ஸ் பற்றிய தேடலில், ஏழு ஆண்டுகளுக்கு முன் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த தொழிலை இன்று மாதம் ரூ. 50 லட்சம் டர்ன் ஓவர் செய்யும் அளவிற்கு வளர்த்திருக்கிறார் கோயமுத்தூரைச் சேர்ந்த ‘Extrokids' ஹரிப்பிரியா.
விளையாட்டு வேறு, கல்வி வேறு என்ற நிலை மாறி, சமீபகாலமாக கல்வியையே விளையாட்டோடு கற்றுக் கொடுக்கும் கல்விமுறை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.
தட்டாங்கல், நொண்டி என அந்தக்காலத்தில் செலவில்லாமல் நாமும் அப்படித்தான் விளையாட்டோடு கணிதம், அறிவியல் போன்றவற்றைக் கற்றோம். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை. தெருவில் குழந்தைகள் கூடி விளையாடிய காலங்கள் மறைந்து, அப்பார்ட்மெண்ட் வீட்டுக்குள் நான்கு சுவருக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு செல்போனும், டிவியும்தான் ஒரே பொழுதுபோக்கு.
எனவே, எப்படியாவது அவர்களது நேரத்தை உபயோகமாக, அதே சமயம் குழந்தையின் மழலைத்தன்மை மாறாமல் விளையாட்டோடு புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய பெற்றோர்களின் பெரும் ஆசையாக இருக்கிறது.
இப்படி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தன் குழந்தைகளுக்காக சிந்தித்த 25 வயது இளம்தாய் தான் ஹரிப்பிரியா. ஒரு கட்டத்தில் தன்னைப் போலவே, குழந்தைகளுக்காக எஜுகேஷனல் டாய்ஸ் தேடும் மற்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நினைத்து, இதையே தன் தொழிலாக மாற்றி, இன்று அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார்.
குழந்தைக்காக தொடங்கிய தேடல்
“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர்தான். என் அப்பா உட்பட எங்கள் குடும்பத்தில் அனைவருமே சுயதொழில் புரிபவர்கள்தான். தங்க நகை செய்து விற்பது தான் அவர்களது தொழில். ஆனால், சிறுவயதில் எனக்கு சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையைவிட மருத்துவராக வேண்டும் என்ற கனவுதான் அதிகமாக இருந்தது. ஆனால், நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, என் தந்தையின் எதிர்பாராத மரணத்தால் என் டாக்டர் கனவு கைகூடவில்லை.
இளங்கலை பட்டம் முடித்தேன். பிறகு எங்காவது வேலைக்குச் செல்வதற்குப் பதில் நாமே ஒரு தொழில் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. எதையுமே முயற்சித்துப் பார்க்காமல், என்னால் முடியாது என்ற முடிவுக்கு வரக்கூடாது என்பதால், டியூசன் எடுப்பது, ப்ளே ஸ்கூல் ஆரம்பிப்பது, நாப்கின் விற்பது என மனதிற்கு தோன்றிய தொழில்களை எல்லாம் எடுத்துச் செய்தேன். ஆனால் அவை எதிலுமே என்னால் நீடித்திருக்க முடியவில்லை.
இதற்கிடையே, திருமணம் ஆனது. குழந்தை பிறந்த பிறகுதான், அந்தக் குழந்தைக்கு வாங்கும் விளையாட்டுப் பொருட்கள் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், அறிவையும் போதிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
“அந்த மாதிரியான பொருட்களைத் தேட ஆரம்பித்தேன். அப்போது உதித்த யோசனைதான் இன்று ’எக்ஸ்ட்ரோகிட்ஸ்’ (Extrokids.com), ’எக்ஸ்ட்ரோமாம்’ (Extromoms) மற்றும் ’சுபம்’ (Thesubham.store) என மூன்று ஆன்லைன் பிராண்டுகளாக வளர்ந்து நிற்கிறது,” என தான் தொழில்முனைவோர் ஆன கதையை விளக்குகிறார் ஹரிப்பிரியா.
ஆரம்பத்தில் ஹரிப்பிரியாவின் தொழில் ஆசைக்கு குடும்பத்தில் முட்டுக்கட்டைதான் போட்டுள்ளனர். மூன்று மாதக் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, ஏன் புதிய தொழிலை ஆரம்பித்து கஷ்டப்பட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், ஹரிப்பிரியா அதையெல்லாம் ஒரு தடையாக நினைக்கவில்லை.
“நான் சம்பாதித்துதான் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் என் குடும்பம் இல்லை என்பதால், இந்த புதிய தொழில் தொடங்கும் ஆசையெல்லாம் தேவையில்லாத வேலை என என் கணவர் மற்றும் என் குடும்பத்தார் நினைத்தனர்.
“ஆனால், நான் என்னைப் போல் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்களைத் தேடும் எத்தனை பெற்றோர் இருப்பார்கள்? நம்மை போல்தானே அவர்களும் தேடித் தேடி அந்த மாதிரியான விளையாட்டுப் பொருட்கள் கிடைக்காமல் களைத்திருப்பார்கள். எனவே, நமது தேவையையே ஒரு தொழிலாக மாற்றினால், நிச்சயம் அதில் வெற்றி பெற முடியும் என பாசிடிவ்வாக மட்டுமே சிந்தித்தேன்,” என்கிறார்.
சிறிய முதலீடு
ஆன்லைன் தொழிலில் முன் அனுபவம் இல்லாததால், நிறைய விசயங்களை ஆன்லைனில் இருந்துதான் கற்றுக் கொண்டேன். யூடியூப் எனது தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. எனது குழந்தைக்கு எப்படி பொம்மை வாங்குவேனோ, அதேபோல் மரத்தினால் ஆன இகோ பிரண்ட்லி விளையாட்டு சாமான்களை குறைந்த முதலீட்டில் வாங்கினேன்.
“எனது முதல் முதலீடு வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான். ஒரு அட்டைப்பெட்டியில் வைக்கும் அளவிற்கு மட்டுமே அந்தப் பணத்தில் சில விளையாட்டு ஜாமான்களை வாங்கினேன்.”
அவற்றைப் புகைப்படம் எடுத்து வாட்சப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவிட்டேன். நான் நினைத்ததுபோல் உடனே ஆர்டர் வந்து குவிந்துவிடவில்லை. முதல் ஆர்டரைப் பெறுவதற்கே காத்திருக்க வேண்டி இருந்தது. சரியாக 30வது நாளில்தான் எனக்கு முதல் ஆர்டர் கிடைத்தது.
“தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொண்டேன். அதில் முக்கியமானது வெற்றியோ, தோல்வியோ ஒரு தொழிலில் கன்சிஸ்டன்சி இருந்தால் மட்டுமே அதில் நிலைத்திருக்க முடியும் என்பதுதான்,” என்கிறார் ஹரிப்பிரியா.
ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த இந்தத் தொழிலில், கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 60 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார் ஹரிப்பிரியா.
சிறிய அட்டைப் பெட்டியில் ஆரம்பித்த அவரது வர்த்தகம், வீட்டில் ஒரு அறையாகி, தற்போது சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் தனியாக அலுவலகமாக விரிந்து நிற்கிறது. மாதம் ரூ.50 லட்சம் வரை டர்ன் ஓவர் நடப்பதாகக் கூறுகிறார் ஹரிப்பிரியா.
முதல் பெண் தொழில்முனைவர்
“எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பெண் தொழில்முனைவர். ஆரம்பத்தில் எல்லா வேலைகளையும் நானேதான் பார்த்தேன். நான் தொழிலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வைதைப் பார்த்ததும், என் வீட்டில் உள்ளவர்களுக்கு என் மீது நம்பிக்கை வந்து விட்டது. இப்போது அவர்களும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள்.
"என் அம்மாதான் நான் விற்பனை செய்யும் பொருட்களை வீடியோவாக தயாரித்து, சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார். என்னிடம் இப்போது 20 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். நாளொன்றிற்கு 300 ஆர்டர்கள் வரை கூரியர் செய்கிறோம்."
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத இக்கோ பிரண்ட்லியான மர விளையாட்டு சாமான்களில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக விளையாட்டுடன் கல்வியைப் போதிக்கும், திறமையை வளர்க்கும் விளையாட்டு சாமான்களைத்தான் அதிகம் விற்பனை செய்கிறோம்.
குழந்தைகளுக்கு ஐந்து வயதிற்குள் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு நாம் நேரடியாக பாடங்களைச் சொல்லித் தராமல், விளையாட்டு மூலம் சொல்லித் தர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமே. எனவே, அதற்குத் தேவையான புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைத்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்,” என்கிறார் ஹரிப்பிரியா.
தாய்மார்களுக்கான தளம்
எக்ஸ்ட்ரா கிட்ஸ் மட்டுமல்லாமல், எக்ஸ்ட்ரா மாம், சுபம் என மற்ற இரண்டு ஆன்லைன் பிராண்டுகளையும் ஹரிப்பிரியா நடத்தி வருகிறார். இதில் எக்ஸ்ட்ரோ மாம் என்பது வீட்டையும் கவனித்துக் கொண்டு, தொழில் அல்லது வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்யும் தளமாகும்.
“எங்களது எக்ஸ்ட்ரோ மாம் என்பது வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் கிச்சன் வேலையை சுலபமாக்கும் கருவிகள் விற்கும் தளம் ஆகும். குழந்தைகளுக்காக ஒரு பிளாட்பார்ம், தாய்மார்களுக்காக ஒரு பிளாட்பார்ம் என இரண்டு மட்டுமின்றி, கெமிக்கல் இல்லாத ஹெர்பல் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக சுபம் என்ற ஆன்லைன் ஸ்டோரையும் நடத்தி வருகிறேன்.”
அதில் நாங்கள் விற்பனை செய்யும் ஹெர்பல் ஹேர்வாஷ், எங்கள் பாட்டி சொல்லிக் கொடுத்த முறையில் அம்மா தயாரிப்பது ஆகும். ஆரம்பித்த ஒரு மாதத்திற்குல் ஒரு நாளைக்கு 100 ஆர்டர்கள் வரத் தொடங்கி விட்டது. அந்தளவிற்கு மக்களிடம் நாங்கள் நம்பிக்கையைச் சம்பாதித்துள்ளோம், என பெருமிதத்துடன் கூறுகிறார் ஹரிப்பிரியா.
குழந்தைகள் மலச்சிக்கலை போக்க இந்தியன் ஸ்டைல் ‘Potty Seater’ - மகனுக்காக தொடங்கி வர்த்தமாக்கிய இளம் தாய்!