அனிமேஷன் வடிவில் புரோகிராமிங் மொழிகள்: ரூ.1 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் ஸ்டார்ட்-அப்!
கடலூரைச் சேர்ந்த பொறியாளர் பிரேம்குமார், சொந்தமாக நிறுவனம் தொடங்கி, கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் மொழிகளை அனிமேஷன் வடிவில் தயாரித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வாடிக்கையாளர்களாக பெற்றுள்ளார்.
Log2base2 நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் குமாருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் இலக்காக இருந்தது. ஆனால், 0.25 கட் ஆப் மதிப்பெண் குறைந்ததன் காரணமாக இன்ஜினியரிங் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால், அந்த படிப்புதான் தற்போது அவர் தொழில்முனைவோராக மாறுவதற்கு அடித்தளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டு ஒரு நல்ல ப்ராடக்டை உருவாக்க நினைத்து, பிரேம் குமார் ஒரு தொழில்முனைவரானார். அடுத்த ஆண்டு, தரமான ப்ராடக்டை எப்படி சந்தைப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தி, தற்போது மூன்றாம் ஆண்டில் இருக்கும் இந்நிறுவனம், 1000+ வாடிக்கையாளார்களுடன், ஆண்டு வருவாயாக 1 கோடியை தாண்டி அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
ஆரம்ப காலம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம்தான் பிரேம் குமாரின் சொந்த ஊர். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுப்பதால், இவர் மருத்துவராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அதனால் பயாலஜி குரூப் எடுத்து படித்தார். ஆனால், 0.25 மதிப்பெண் கட்-ஆப் மார்கில் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. என் மதிப்பெண் 197.25க்கு பதில் 197.50 எடுத்திருந்தால் மருத்துவராகி இருப்பேன் என்கிறார் பிரேம்.
”பயாலஜி உடன் கணிதமும் எடுத்திருந்தேன். கணக்கு பாடத்தில் செண்டம் எடுத்திருந்ததால், அண்ணா பல்கலைகழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் கிடைத்தது. தமிழ் மீடியத்தில் இருந்து வந்ததால் முதல் சில மாதங்கள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. எப்படியோ அடுத்தடுத்த ஆண்டுகளில் அதனை சரி செய்து, மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு முன்னேறினேன்,” என்கிறார் பிரேம்குமார்.
பல்கலைகழக கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்று, Gigamon என்னும் நெட்வோர்க்கிங் நிறுவனத்தில் 2016ல் வேலை சேர்ந்தார் பிரேம்.
நல்ல சம்பளம், நிறுவனத்தில் பங்குகளும் (ESOP) கிடைத்தன. வேலை நன்றாக இருந்தாலும் அதிக சவால் மிக்கதாக இல்லை. அப்போது எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அதனால் அந்த கடனை அடைப்பது எனக்கு முக்கியமானதாக இருந்ததால் வேலையில் இரு ஆண்டுகள் இருந்தேன்.
அப்போது கம்யூட்டர் புரோகிராமிங் தொடர்பாக பிளாக் எழுதத் தொடங்கினேன். இந்த பிளாக் பலருக்கும் சென்று சேர்ந்தது. வரைபடமாக எழுதத் தொடங்கினேன். ஆனால் எத்தனை படங்கள் இருந்தாலும் ஒரு புரோகிராம் எப்படி நடக்கிறது என்பதை உருவகப்படுத்தி (simulation) சொல்லும்போதுதான் மாணவர்களுக்கு புரிந்தது. என்னுடைய ஜூனியர் நண்பர் ஒருவர் அனிமேஷன் எக்ஸ்பர்ட். அவர் மூலமாக புரோகிராமை அனிமேஷன் மூலம் சொல்லிக்கொடுக்கத் தொங்கினோம்.
இந்த சமயத்தில் வீட்டில் உள்ள கடனும் முடிந்தது. இரு ஆண்டுகளில் நானும் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி Log2base2 நிறுவனத்தைத் தொடங்கினோம். புரோகிராம் அல்லது கம்யூட்டர் மொழிகளை விஷுவலாக சொல்லித்தருவதுதான் எங்களுடைய தொழில். ஆரம்பத்தில் யூடியுபில் பதிவேற்றினோம். அதன் பிறகு, நிறுவனமாக பதிவு செய்து எங்களுடைய தளத்தில் பதிவேற்றிவருகிறார்கள்.
ஐந்து மொழிகளில் அனிமேஷன்
கல்லூரி இரண்டாம் ஆண்டு முதல் வேலைக்கு சேர்ந்த ஐந்தாண்டுகள் வரையில் இருப்பவர்கள்தான் எங்களுக்கான வாடிக்கையாளர்கள். கம்ப்யூட்டர் மொழிகளை கற்றுக் கொள்வதில் இருந்து, அது எப்படி செயல்படுகிறது மற்றும் நேர்காணல்களுக்கு தயாராவது வரை அனைத்தையும் அனிமேஷன் மூலமாக கற்றுக்கொடுக்கிறோம்.
யாருடைய உதவியும் இல்லாமல் எளிமையாகக் கற்றுகொள்ள முடியும். சர்வதேச மொழி ஆங்கிலம்தான். ஆனால், ஆங்கிலம் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய 5 மொழிகளிலும் எங்களுடைய அனிமேஷன் இருக்கும்.
நிதிசார்ந்த தகவல்கள்
ஆரம்பத்தில் என்னுடைய சொந்த முதலீட்டை செய்திருந்தேன். பிறகு குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலமாக ரூ.70 லட்சம் முதலீட்டை பெற்றோம்.
”தற்போது நிதி வழங்க பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் நிர்ணயம் செய்த இலக்கை அடையும் வரை அடுத்த நிதி திரட்ட வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். தற்போதைய நிலையில் இருந்து மூன்று நான்கு மடங்கு அளவுக்கு வளர்ந்த பிறகுதான் அடுத்த கட்ட நிதி குறித்து யோசிக்க வேண்டும், என்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு கோர்ஸுக்கு இவ்வளவு தொகை என நிர்ணயம் செய்தோம். ஆனால் அதன்பிறகு மொத்தமாக ஆண்டுக்கு ரூ.3000 என நிர்ணயம் செய்தோம். சந்தையில் இருக்கும் தேவையை பொறுத்து விலையில் ஏற்றம் மற்றும் தள்ளுபடி இருக்கும். இதுவரை சுமார் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களிடம் பணம் செலுத்தி பயிற்சி எடுத்து இருக்கிறார்கள். சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆங்கிலம் மூலமாகவே கற்றுக்கொள்கிறார்கள்.
தற்போது இருக்கும் விலையில் சிறிது மாற்றம் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம். மாதத்துக்கு ரூ.700 செலுத்தி விடியோக்களை பெற்றுக்கொள்ளலாம், தேவைப்பட்டால் அதன்பின் விலகிக்கொள்ளாம் என்பதுபோல புதிய திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம்.
”இதன் மூலம் ஒரு முறை மட்டுமே சோதனை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும். எங்கள் புராடக்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களிடம் அவர்கள் தொடர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் அதிக நபர்களுக்கு சென்றடையும் வாய்ப்பும் இருக்கிறது,” என்று புதிய திட்டத்தை விளக்கினார் பிரேம்குமார்.
இவர்களின் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவில் இருந்துதான் வருகிறார்கள். ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, பூனே, லக்னோ உள்ளிட்ட முக்கியமான நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் வாடிக்கையாளர்கள் ஆகுகின்றனர். இதுதவிர, 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் அமெரிக்காவில் கணிசமான வாடிக்கையாளர்கள் (6%) உள்ளனர். தவிர இலங்கை, வங்கதேசம் ஆகியவையும் முக்கியமான சந்தையாக உள்ளதாக பிரேம் தெரிவிக்கிறார்.
வருவாய் மற்றும் வாடிக்கையாளர்கள்
எங்கள் நிறுவனத்தைப் பற்றி ஆரம்பத்தில் பல வகைகளில் விளம்பரம் செய்தாலும் எங்களுக்கு யூடியூப் நல்ல பலன் கொடுத்தது. எங்களுக்கான வாடிக்கையாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு எங்களால் கண்டறிய முடிகிறது. எங்களுடைய வருமானத்தில் கணிசமான தொகை யூடியூப் விளம்பரங்களுக்கு செலவாகிறது. நாங்கள் விளம்பரங்களுக்குச் செய்யும் செலவைவிட இரு மடங்குக்கு மேல் வருமானம் கிடைக்கிறது என்று சொல்லலாம்.
”தற்போது ஆண்டு வருமானம் ரூ.1.1 கோடி அளவுக்கு ஈட்டுகிறோம். இதே வருமானத்தை குறைந்த செலவில் எப்படி ஈட்டுவது என்று பார்க்க வேண்டும். வருமானம் சீராக இருக்கிறது, தவிர ஏற்கெனவே திரட்டிய நிதியும் இருப்பதால் தற்போதைக்கு நிதி திரட்ட தேவையில்லை.”
ஏற்கெனவே கூறியதை போல தற்போதைய நிலையில் இருந்து நான்கு மடங்கு வளர்ச்சி அடைந்த பிறகுதான் அடுத்த கட்ட நிதி தேவைப்படும். இந்த நிதியும் புதிய சர்வதேச சந்தையை பிடிப்பது மற்றும் புதிய சர்வதேச மொழிகளைக் கொண்டுவருவதற்காக மட்டுமே பயன்படுத்த இருக்கிறோம் என பிரேம்குமார் தெரிவித்தார்.
அனிமேஷன் முறையில் கற்றுக்கொள்வது எளிதாகப் புரியும் என்பது மட்டுமல்ல, நீண்ட நாட்கள் நினைவிலும் இருக்கும் என்பதே இந்த ஸ்டார்ட்-அப்-இன் வெற்றிக்கு வழியாக அமைந்துள்ளது.