தங்கம் வென்ற ‘கட்டைவிரல்’ - மாரியப்பன் பயணமும், காலூன்ற தோள் கொடுத்த பயிற்சியாளரும்...
2016, செப்டம்பர் 10-ம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T-42 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் தாண்டியபோது, போட்டியில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் உயரத்தை தொட்டார் என்றால் அது மிகையாகாது. ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயர தாண்டினார் மாரியப்பன். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் என்பதற்கேற்ப 21 வயதான மாரியப்பன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
தற்போது சாலையில் நடந்து செல்கையில் மக்கள் தன்னை அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். இதுதான் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தார் மாரியப்பன். மாரியப்பனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இத்தகைய மாற்றத்திற்கு காரணம் அவரது பயிற்சியாளர் சத்யநாராயணா.
”இதற்கு முன் தனது இயலாமை காரணமாக மாரியப்பன் தனது குடும்பத்தைச் சார்ந்திருந்தார். தற்போது அவரது குடும்பமே அவரைச் சார்ந்துள்ளது.” என்றார் சத்யநாராயணா.
தமிழக அரசாங்கம் அவரது வெற்றியை பாராட்டி 2 கோடி ருபாய் பரிசளித்துள்ளது. இதேபோல பல்வேறு அரசுகளும் கார்ப்பரேட்களும் அவருக்கு பரிசளித்து கௌரவித்துள்ளனர். இன்று அவர் ஒரு கோடீஸ்வரர் என்கிறார் அவரது பயிற்சியாளர். அவருக்குக் கிடைத்த பரிசுத்தொகையிலிருந்து 30 லட்சம் ரூபாயை தான் பயின்ற பயிற்சி பள்ளிக்கு நன்கொடை அளித்திருக்கிறார் மாரியப்பன்.
கீழிருந்து மேல் நிலைக்கு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவடாகம்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் மாரியப்பன். மாரியப்பனின் தந்தையின் துணையின்றி தாயார் சரோஜா வீட்டின் ஏழ்மை நிலையை சமாளித்து தனியாக குடும்பத்தை நிர்வாகிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சரோஜா தலையில் கல் சுமந்து தினக்கூலியாக வேலை செய்தார். பின்னர் பூ மற்றும் காய்கறிகள் விற்றார். ஐந்து வயதிருக்கும்போது மாரியப்பன் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. பஸ் ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மாரியப்பனின் முழங்காலுக்கு கீழுள்ள பகுதி நசுங்கியது.
”இன்னும் என்னுடைய காலுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. அது வளரவும் இல்லை குணமாகவும் இல்லை”
என்று தி ஹிந்து நாளிதழுக்கு முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார் மாரியப்பன். அவரது தாயார் தனியாக மாரியப்பனின் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் திரட்டினார். ஒரு நாளுக்கான வருமானத்தை இழக்க மனதில்லாமல் தனது மகன் போட்டியில் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக்கூட தயங்கினார் அவரது தாயார். கிராமத்தினருடன் சேர்ந்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அவரது மற்ற குழந்தைகள் வற்புறுத்தினர். அருகிலிருப்பவர்கள் துள்ளிக்குதிப்பதை பார்க்கும்போது அவரது மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்தமுடியவில்லை.
பெங்களூருவில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா இன்க்ளூஷன் சம்மிட்டில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தங்கம் வென்றதும் முதலில் தன் அம்மாவை அழைத்தபோது “அவர் சந்தோஷத்தில் அழ ஆரம்பித்துவிட்டார்” என்று கூறினார்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
கூச்சம், தன்னடக்கடம் நிறைந்த மாரியப்பன் அவரது பயிற்சியாளர் சத்யநாராயணாவையே அதிகம் உரையாடவைத்தார். ”அவரது அணுகுமுறையைப் பார்த்து யாரும் ஏமாந்துவிடவேண்டாம். கூச்ச சுபாவமுடைய எவரும் விளையாட்டு வீரராக முடியாது” என்று விளையாட்டாக கூறினார் மாரியப்பனின் பயிற்சியாளர்.
பளீரென்று சிரித்தவாறே தலைகுனிந்து நிற்கும் மாரியப்பனை நோக்கி “நீங்கள் கூச்ச சுபாவமுடைவரா குறும்புக்காரரா?” என்று கேட்டார். அதற்கு மாரியப்பன் ’சாது’ என்று பதிலளித்ததும் அறையே சிரிப்பலையில் நிறைந்தது.
ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர் த்ரோனாச்சார்யா விருதி பெறும் தகுதி பெற்ற சத்யநாராயணா. பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்வதற்காக மாரியப்பன் 2013-ல் பெங்களூரு சென்றபோதுதான் அவர் மாரியப்பனை முதன்முதலில் சந்தித்தார்.
திறமை இருக்கும் இடத்தை பருந்தின் பார்வையோடு ஒரு பயிற்சியாளர் கண்டறிந்துவிடுவார். மாரியப்பனிடம் திறமை இருப்பதை சத்யநாராயணா அப்படித்தான் கண்டறிந்தார்.
சத்யநாராயணா ஒரு சர்வதேச விளையாட்டு வீரர். உலகளவில் இதுவரை ஏழு முறை இந்தியாவிற்காக பங்கேற்றுள்ளார். 2012-ல் லண்டன் பாராலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற HN கிரிஷாவிற்கு இவர்தான் பயிற்சியளித்தார்.
“இன்னும் பல மாரியப்பன்களை உருவாக்குவதே எனது நோக்கம். நமது நாட்டில் திறமைக்கு குறைவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே போதும், எதுவும் சாத்தியம்தான்.” என்றார் சத்யநாராயணா.
அவருக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும். ஏனெனில் அவரே வீடு வீடாக சென்று பூ விற்பனை செய்து கீழ்தட்டிலிருந்து முன்னேறியவர்.
பெங்களூருவில் மாற்று திறனாளிகளுக்கான ஸ்போட்ர்ஸ் அகாடமியை நடத்தி வருகிறார் சத்யநாராயணா. உடல் நலத்துடன் இருப்பவரோ அல்லது மாற்றுத்திறனாளியோ யாராக இருந்தாலும், எந்த ஒரு விளையாட்டு வீரரும் சரியான விளையாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று மேரத்தான் ப்ளேட் ரன்னரை பார்த்திருப்பீர்கள். அந்த ப்ளேட்கள் விலை உயர்ந்தவை. எங்கள் விளையாட்டு வீரர்களால் அதை வாங்க இயலாது. அவரவர் வசதியை மனதில் கொண்டு தங்களுக்கு பொருத்தமானவற்றை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்கவேண்டும்” என்றார். ஒரு சிறந்த பயிற்சியாளர், தான் பயிற்சியளிக்கும் வீரர்களின் நிறை குறைகளை தெரிந்துவைத்திருப்பர். சத்யநாராயணாவும் அப்படித்தான்.
”மாரியப்பன் உயரம் தாண்டுவதற்கு அவரது வலது கால் கட்டைவிரல் உதவுவதால் அவருக்கு அது முக்கியமானதாகும். நோய் தொற்று ஏற்படாமல் அதை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.”
விபத்திற்குப்பின் சிதைந்ததுபோன வலது காலில், கட்டைவிரல் மட்டுமே இருந்தது. அதனுடன் வாழ்ந்துவருகிறார் மாரியப்பன். இருப்பினும் அந்த விரலின் உதவியுடன்தான் பதக்கம் வெல்லும் அளவிற்கு அவரால் உயரம் தாண்டமுடிந்தது என்பதால் அவர் அதைக் ’கடவுள்’ என்கிறார்.
விரக்தியிலிருந்து நம்பிக்கை
விபத்திற்குப் பின்னும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். உடல் நலத்துடன் விளையாடுபவர்களுக்கே கடும் போட்டியை அளித்தார் மாரியப்பன். ”கைப்பந்து விளையாடுவார். ஒரு நிகழ்வின்போது உயரம் தாண்டும் போட்டியில் யாரும் கலந்துகொள்ள முன்வரவில்லை. பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மாரியப்பனை உயரம் தாண்டும் போட்டியில் சேர்த்தார்” என்றார் சத்யநாராயணா.
அன்றிலிருந்து தனது முடிவிற்காக மாரியப்பன் வருந்தியதில்லை. பாரா ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு சில ஆண்டுகள் முன்பே சத்யநாராயணா மாரியப்பனுக்கு கடும் பயிற்சியளித்தார்.
“அவரது படிப்பு அனைத்தையும் நிறுத்திவிட்டேன். BBA இறுதி செமஸ்டர் தேர்வை நேற்றுதான் முடித்தார்” என்றார். அடுத்த வருடன் ஜுலை மாதம் நடக்கவிருக்கும் லண்டன் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சியாளருடன் இணைந்து தயாராகி வருகிறார் மாரியப்பன்.
பெங்களூருவிலுள்ள கண்டீரவா ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள சத்யநாராயணாவின் அகாடெமியில் மாரியப்பன் ஒரு சில விளையாட்டு வீரர்களுடன் கவனம் சிதறாத தீவிர பயிற்சிக்காக தங்கியுள்ளார்.
”2020-ம் ஆண்டு டோக்யோவில் நடக்கவிருக்கும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாங்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என எல்லா பதக்கங்களையும் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.”
சத்யநாராயணா வெறும் வார்த்தைக்காக இப்படிச் சொல்லவில்லை. காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாரியப்பனின் தாயிடம் அவரது மகன் நிச்சயம் தங்கம் வெல்வான் என்று சத்யநாராயணா கூறியிருக்கிறார்.
இந்திய இன்க்ளூஷன் சம்மிட் மேடையில் இந்திய ஜெர்சி மற்றும் ஜீன்ஸ் உடையணிந்து அமைதியாக அமர்ந்திருந்தார் மாரியப்பன். மேடையில் பாலிவுட்டின் ‘பாக் மில்கா பாக்’ எனும் பாடல் ஒலியுடன் இணைந்து வேகமாக ஓவியம் தீட்டுவதில் புகழ்பெற்ற ஓவியர் விலாஸ் நாயக் மாரியப்பனின் உருவத்தை வரைந்தார்.
தங்கத்தையும் மூவர்ணத்தையும் இறுதியாக வரைந்து முடிக்கையில் பார்வையாளர்களின் கரகோஷம் உச்சத்தை எட்டியது. நம்பிக்கையற்ற சூழலையும் நிச்சயம் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை இதுபோன்ற தருணங்களில் உணரலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர்