கேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...
ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த நாள் காணும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நான் ரஜினி ரசிகன்; கமல் ரசிகனும் தான். தமிழ் வெகுஜன சினிமா மீது பற்றுள்ள ஒருவன் இப்படி தான் இருக்க முடியும் என நம்புகிறேன். அதிலும் 70 களில் பிறந்து வளர்ந்திருந்தால், எனக்கு ரஜினியின் ஸ்டைலும், துடிப்பும் பிடிக்கும். அவர் ஆர்ப்பாட்டம் இல்லாத நல்ல நடிகரும் கூட. பில்லாவில் ரஜினியின் ஸ்டைலும், பொல்லாதவன் படத்தில் அவரது சீற்றமும் விசிலிடத்து ரசிக்கத்தக்கவை. மகேந்திரனின் காளியையும் (முள்ளும் மலரும்), ஜானியையும் மறக்க முடியாது தான். கே.பியின் தில்லுமுல்லுவையும், நினைத்தால் இனிக்கும் இசைமயமான கலாட்டவையும் இன்னும் கூட ரசிக்கலாம்.
இன்னொரு பக்கம், நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் அழகான கமலையும், சலங்கை ஒளியில் பரத கலைஞராக அசத்திய கமலையும் எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். சிகப்பு ரோஜாக்களில் பாடல் காட்சியில் கூட சின்ன சின்ன நுட்பம் காட்டிய கமலை ஒரு நடிகனாக வியக்காமல் இருக்க முடியுமா?
நிற்க, இந்த பதிவு கமல், ரஜினி பற்றியோ, என் தனிப்பட்ட ரசனை பற்றியதோ அல்ல; தமிழ் சினிமாவில் இவ்விருவரும் ஒரு கட்டத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க இயலாத கலைஞர்களாக கொடிகட்டிப்பறந்தனர் என்பதே இங்கு நான் சொல்ல வருவது. அதி தீவிர ரஜினி, கமல் ரசிகர்கள் இருக்கின்றனர் என்றாலும், வெகுஜன சினிமாவை விரும்புகிறவர்கள் இந்த இருவர் திறமையைம் திரையில் பார்த்து வியக்காமல் இருந்திருக்க முடியாது.
இந்த பார்வை கூட விவாத்திற்கு உரியதாக இருக்கலாம், ஆனால் இந்த குறிப்பு எதற்காக என்றால், ரஜினியும் கமலும் செல்வாக்கு பெற்று ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மூன்றாவதாக நுழைந்து ஒருவர் வெற்றி பெற்று தனக்கென தனி இடம் பிடித்த சாகசத்தை சுட்டிக்காட்ட தான். அந்த மூன்றாம் நபர் வேறு யாருமல்ல இன்றைய அரசியல் தலைவர் கம் நடிகரான விஜய்காந்த் தான்.
அரசியலில் விஜய்காந்தை விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மேம்போக்காக மீம்ஸ் போட்டும் இதை செய்யலாம், அல்லது விஜய்காந்த் எதிர்கட்சித்தலைவராக தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றத்தவறியது குறித்து ஆழமான அலசலாகவும் மேற்கொள்ளலாம். இரண்டுமே என் நோக்கம் அல்ல; மாறாக ஒரு நடிகராக விஜய்காந்தின் பயணத்தை திரும்பி பார்த்து அதில் தெரியும் மின்னல் கீற்றுகளை கொண்டாடுவது தான்.
இங்கு இன்னொரு விஷயம். ரஜினி, கமல் ரசிகன் போல் நான் விஜய்காந்த் ரசிகனும் தான். ஆனால் அவரது பெரும்பாலான ரசிகர்கள் மார்தட்டிக்கொள்வது போல கேப்டன் ரசிகன் என கூற மாட்டேன். அப்படி கெத்தாக அவர் புகழ்பெறுவதற்கு முன்னரே மதுரை வீரனாக தமிழ் சினிமாவில் கலக்கினாரே, அப்போதே இலக்கணம் மீறிய கவிதையாக இருந்த அவரது ஆவேசத்தை கண்டு ரசித்தவன். ஒருவிதத்தில் பார்த்தால் அவருக்கு முதல் திருப்புமுனையாக அமைந்த சட்டம் ஒரு இருட்டரை படம் ஒரு கிளாசிக் தான்.
திரைமொழி, உத்திகள் என்றெல்லாம் பார்த்தால் இந்த படம் அத்தனை பிரமாதமானது அல்ல தான். ஆனால் தமிழ் சினிமா போக்கை வைத்துப்பார்த்தால் அதன் குறைகளை எல்லாம் மீறி இந்த படத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது.
இது விஜய்காந்தை ஆவேச நாயகனாக காட்டிய படம். ஆவேச நாயகn என்றால் வெறும்னே சண்டை போட்டு வீர வசனம் பேசும் நாயகன் மட்டும் அல்ல. இந்திய சினிமா வரலாற்றில் அமிதாப் பச்சன் முன்னிறுத்தியதாக ஸ்லாகிப்பபடும் ஆங்கிரி யங்மேன் எனப்படும் கோப ஆவேச இளைஞன் பாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இந்த ஆவேச நாயகனை பார்க்க வேண்டும். சினிமாத்தனம் தான் என்றாலும் கூட, அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்து நியாயத்தை தட்டி கேட்கும் நாயகனாக சட்டம் ஒரு இருட்டறையில் விஜயகாந்த பொங்கினார். இந்த படத்திற்கு சட்டம் ஒரு பின்னணியாக அமைந்ததும் அருமையான உத்தி தான்.
இன்றைய இளைய தளபதி விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதை ஒரு உத்தியாகவே தனது பெரும்பாலான ஆரம்ப கால படங்களில் கடைப்பிடித்திருந்தார்.
இப்போது திரும்பி பார்க்கையில், சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு விஜய்காந்தை விட வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஒரு முரட்டு ஆவேசம், தார்மீக கோபம் மற்றும் ஒரு சராசரித்தன்மை அவரிடம் இருந்தது. இந்த அம்சங்களே அவரை ஆவேச நாயகனாக பொருந்தச்செய்தது.
ஒருவிதத்தில் ரஜினி தான் தமிழ் சினிமாவின் ஒரிஜினல் ஆங்ரி யங்மேன். ஆனால் சூப்பர் ஸ்டாரானதும், ஆவேசத்தை தவிரவும் வேறு பல விஷயங்கள் தேவைப்பட்டன. இந்த காலத்தில் தான் விஜய்காந்த் ஆவேச நாயகனாக கச்சிதமாக பொருந்தினார். பின்னர் அவரும் நட்சத்திர அந்தஸ்து பெற்று சேதுபதி ஐபிஎஸ். ஆகவும், தென்னவனாகவும், கஜேந்திரவாகவும் கர்ஜிக்கத்துவங்கிவிட்டார் என்றாலும் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவின் மக்கள் நாயகனாக அவர் இருந்தார். சிவப்பு மல்லி படம் முழுவதுமாக நினைவில்ல என்றாலும், வேலையில்லா திண்டாட்டமும், தொழிலாளர் சுரண்டலும் மலிந்த கிடந்த காலத்தில் சந்திரசேகருடன் இணைந்து அவர் தொழிலாளர் சார்பில் ஆவேசமாக சிவப்பு எழுத்து வசனங்களை பேசி சீறிய காட்சிகள் நிழலாடுகின்றன.
இந்த ஆவேச நாயகன், அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் பாடகராக உருகியதும், பின்னர் பூந்தோட்டக்காவல்காரன் படத்தில் மிடில் ஏஜ் நாயகனாக மாறியதும் இயல்பாக நடந்தன என்றாலும் அதன் பிறகு அவர் தொடை தட்டி வசனம் பேசியபடி, பாய்ந்து பாய்ந்து அடிக்கத்துவங்கி விட்டார். கேப்டன் பிரபாகரன் அவரை கேப்டனாக்கியது, அதன் பிறகு ரசிகர்கள் அவரை தலையில் வைத்துக்கொண்டாடினர். வசூல் சக்ரவர்த்தியாகவும் வலம் வந்தார்.
ஆனால் விஜய்காந்தின் உண்மையான சாதனை ரஜினி, கமல் யுகத்தில் நுழைந்து தனக்கென தனி இடம் பிடித்தது தான். இதில் என்ன ஆச்சர்யம் என கேட்கலாம். ஆனால் தமிழ் சினிமா நாயகர்களுக்கு என கருதப்பட்ட எந்தவித அம்சமும் இல்லாதவராக கருதப்பட்ட நிலையில் விஜய்காந்த் பட வாய்ப்புகளை பெற்றதே ஒரு அதிசயம் தான். அவர் பெரிய அழகன் அல்ல: அந்த கால கட்டத்தில் சினிமாவில் நடிக்க அழகனாக இருக்க வேண்டும். தவிர அவர் கருப்பாகவும் இருந்தார். தோற்றத்தில் வசீகரம் கிடையாது. இவை எல்லாம் குறைகளாக கருதப்பட்டதை மீறி மதுரையில் இருந்து வந்த விஜய்காந்த் தனக்கான வாய்ப்பை பெற்றார். முதல் படமான தூரத்து இடிமுழக்கத்தில் வரும் பொன்னனாக தோன்றும் அவரது பாத்திரத்தை பார்த்தால், சரியான மாற்று சினிமா என்று சொல்லத்தோன்றலாம்.
அதன் பிறகு தான் அவருக்கு சட்டம் ஒரு இருட்டறையும், சிவப்பு மல்லியும் அமைந்தது. வழக்கமாக சாகசம் செய்து, நாயகிகளுடன் டூயட் பாடி வசீகரிக்கும் நாயகனாக அவர் விளங்கவில்லை. சட்டம் ஒரு இருட்டறையில் பைல்ஸ், முரட்டு மீசையுடன் டூயட் பாடியிருப்பார். ஆனால் தமிழ் சினிமாவின் உடைக்கப்பட்டிருந்தால் அன்றே அவர் டூயட் பாடாத நாயகனாக அசத்தியிருப்பார். ஏனெனில் அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்தார். அவரது விழிகளில் பொங்கிய ஆவேசம் சராசரி தமிழ் ரசிகனை வெகுவாக ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் தமிழ் சினிமாவின் அனைத்து வரம்புகளையும் உடைத்து அவர் வெற்றி பெற்றார்.
ஆரம்ப காலத்தில் அவருடன் நடிக்க மறுத்த நடிகைகள் உண்டு. ஒப்பந்தம் செய்யத்தயங்கிய தயாரிப்பாளர்கள் உண்டு. அவரை தங்களுக்கான நாயகனாக நினைக்கத்தயங்கிய இயக்குனர்களும் உண்டு. இதனால் அவர் பட்ட அவமானங்களும் அதிகம் என அறிகிறேன். ஆனால் அவர் எல்லாவற்றையும் மாற்றிக்காட்டினார். கருப்பு நிறம் பொதுபுத்தியில் ரசிக்கப்படாத நிலையில், அவர் பெற்ற வெற்றி உளவியல் ரீதியாக சொன்ன செய்தி முக்கியமானவை.
திரையில் தோன்றி ஜொலித்த விஜய்காந்த் நிச்சயம் கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் தோற்றம் நிறம் தொடர்பான கற்பிதங்களால் மனதுக்குள் முடங்கி கிடந்த எண்ணற்றவர்களுக்கு எத்தனை நம்பிக்கை அளித்திருப்பார் என தனியே ஆய்வு செய்யலாம்.
இன்று விஜய்காந்த் ரசிகர்கள் அவரது திரைப்பட பிரவேசத்தின் 40 ஆண்டுகளை கொண்டாடும் நிலையில், அவரது திரை வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது, தமிழ் சினிமாவில் முக்கியமாக வலியுறுத்தப்பட்ட நாயகனுக்கான தோற்ற இலக்கணத்தை உடைத்து அவர் வெற்றி கண்ட விதமே பளிச்சிடுகிறது. இது மிகப்பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். அது மட்டும் அல்ல, அச்சு அசல் கிராமத்து மனிதனாக, திரையில் அவர் தீம்பிழ்பு போல் தோன்றி ஆவேசமாக நடித்த விதமும் தனக்கான கதைகளை தேடி நடித்ததும் அவர் திரைப்பயணத்தில் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.
யார் கண்டது வெகுஜன சினிமாவின் நிர்பந்தம் இருக்காவிட்டால் அவர் ஒரு மகத்தான மாற்று கலைஞனாக மின்னி இன்னும் மகத்தான படங்களை கொடுத்திருக்க முடியும். இருந்தாலும் என்ன, தமிழ் சினிமாவில் கேப்டன் கொண்டாடப்பட வேண்டியவரே.