சிறு, குறு, நடுத்தர வணிகங்களுக்கு பிணையில்லா கடன்: ஃபேஸ்புக் இந்தியா புதிய திட்டம்!
கடன் வழங்க புதிய கூட்டணி!
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMBs) கடன் உதவி செய்யும் வகையில் வகையில், ஃபின்டெக் கடன் வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான Indifi உடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஃபேஸ்புக் இந்தியா தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் இந்த கடன் உதவி செய்ய Indifi நிறுவனத்திடம் கூட்டணி அமைந்துள்ளதாக ஃபேஸ்புக் இந்தியா தெரிவித்துள்ளது. அதன்படி,
சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை எந்த பிணையின்றி கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 17 முதல் 20 சதவிகிதம் வரை விதிக்கப்படும். பெண் தொழில் முனைவோர்கள் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு 0.2 % வட்டி குறைவாக வழங்கப்படும். முதல்கட்டமாக இந்தியாவின் 200 நகரங்களில் இந்த கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு இண்டிஃபை மூலம் பிராஸஸிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், கடன் வாங்குபவர் அனைத்து ஆவணப் படிவங்களையும் முடித்த 5 வேலை நாட்களுக்குள் இண்டிஃபை கடன் தொகையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள, ஃபேஸ்புக் இந்தியாவின் எம்.டி., அஜித் மோகன்,
“இந்தியாவின் சிறு வணிகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க ஃபேஸ்புக் ஆழமாக உறுதிபூண்டுள்ளது. சரியான நேரத்தில் மூலதனத்திற்கான அணுகல் முன்னெப்போதையும் விட முக்கியமானது, ஏனெனில் இது அவர்களின் மீட்பைத் தொடங்கவும் பெரிய வளர்ச்சியைத் தூண்டவும் உதவும்," என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த அறிவிப்பானது, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பங்கேற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) உடன் இணைந்து, ஃபேஸ்புக் இந்தியா நடத்தும் மெய்நிகர் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
விழாவில் எஃப்ஐசிசிஐ தலைவர் உதய் சங்கர் பேசுகையில்,
“எஃப்ஐசிசிஐ எப்போதும் இந்தியாவின் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக வலுவான தனியார் துறை பங்களிப்புக்காக வாதிட்டு வருகிறது. அந்தடிப்படையில், ஃபேஸ்புக்கின் சிறுதொழில் கடன் முயற்சி தொடங்கப்படுவதை வரவேற்கிறது. வரும் மாதங்களில் இந்த துறைக்கு உத்வேகம் அளிக்கும் திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க ஃபேஸ்புக்கோடு ஒத்துழைக்கும் வாய்ப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்று கூறியுள்ளார்.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில்,
“சிறு, குறு நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை புத்துயிர் பெறுவதிலும் மேலும் தன்னிறைவு பெறுவதற்கான அதன் நோக்கத்தை அடைவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். டிஜிட்டல் மாற்றம் இந்தியாவின் முன்னேற்றக் கதைக்கு ஒரு ஊக்கியாக செயல்படும். மேலும், நிதி மாற்றத்திற்கான அணுகல் இந்த மாற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும்.
”ஃபேஸ்புக்கின் சிறு வணிகக் கடன் முயற்சி சரியான திசையில் அமைந்துள்ள பெரிய படியாகும். மேலும், இதுபோன்ற ஒரு முயற்சியை நிறுவனம் தொடங்கும் முதல் நாடு இந்தியா என்பதை நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி: பிடிஐ | தமிழில்; மலையரசு