’இந்த குழந்தைகள் அன்பு மட்டுமே நிறைந்தவர்கள்’- கோவையில் சிறப்புப் பள்ளி நடத்தும் தீபா மோகன்ராஜ்!

By sneha belcin|10th Jan 2021
கோவை சின்னவேடம்பட்டியில் இயங்கிக் கொண்டிருக்கும் கௌமாரம் ஸ்பெஷல் பள்ளியை நடத்தும் தீபா பகிரும் அனுபவங்கள்! 
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கோவையில் பிறந்த தீபா, காங்கேயத்திலும் கோவையிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். பி.காம் படித்து முடித்த உடனேயே திருமணமும் நடந்திருக்கிறது. தீபாவின் கணவர் கோவை துடியலூரில் பிசினஸ் செய்து கொண்டிருந்திருக்கிறார். திருமணம் முடிந்ததுமே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா எனக் கணவரிடம் கேட்டிருக்கிறார் தீபா. ஏன் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என நினைத்தீர்கள் எனக் கேட்டதற்கு,  

“எனக்கு தெரியல. அது சின்ன வயசுல இருந்தே தோணிட்டு இருந்த ஒரு விஷயம் தான். எப்படியோ, அப்பா அம்மா தேவைப்படுற நிறைய குழந்தைங்க இருக்கற்தால அப்படி நான் நினைச்சுட்டே இருந்தேன்” என்றுள்ளார் தீபா.

அதற்கு மறுப்பு தெரிவித்த தீபாவின் கணவர், அது சாத்தியமில்லாத ஒன்று, நாம் தான் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சளைக்காத தீபா, அப்படியானால் தனக்கொரு சத்தியம் செய்து தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். 

கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் தீபா
கௌமாரம் பிரசாந்தி அகாடமி நிறுவனர் தீபா
“நமக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்து, வளர்ந்த பிறகு, எனக்கு முப்பது வயசாகும் போது, எதாவது ஒரு அனாதை இல்லத்திலையோ முதியோர் இல்லத்திலையோ சர்வீஸ் பண்ண பெர்மிஷன் வேணும்னு கேட்டேன். அவர் அப்போ அதை சீரியஸா எடுக்கல. சரி ஓக்கேன்னு சும்மா சொல்லி சமாளிச்சார்,” என்று அதை நினைவுபடுத்துகிறார். 

தீபாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தீபா மறுபடியும் கருத்தரித்திருக்கிறார். அப்போது தன்னுடைய வயிற்றில் கையை வைத்துக் கொண்டு ‘இந்த குழந்தை, இந்த உலகில் எல்லாரும் வாழ்வதைப் போன்றதொரு தினசரி வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்துவிடாமல், ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வாராம். 


இரண்டாவது பிறந்ததும் பெண் குழந்தை. அந்த குழந்தைக்கு ருச்சி மந்திரா என பெயர் வைத்திருக்கிறார்கள். குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள், அவள் சாதாரண குழந்தைகளை போலவே வளர்ந்திருக்கிறாள். 

“அவ தவழ்வது மாதிரியான விஷயங்களை பண்ணவே ரொம்ப சிரமப்பட்டா. நான் என்னோட பீடியாட்ரியசியன் கிட்ட கேட்டப்போ டவுன்ஸ் சிண்ட்ரோம் உட்பட சில டெஸ்டுகள் பண்ணி பார்த்தோம். அது எல்லாமே நார்மலா தான் இருந்தது. அந்த சமயத்துல நிறைய பேர் பாப்பாவ வித்தியாசமா பார்த்து கேட்க ஆரம்பிச்சாங்க. என்னால அதை தாங்கிக்கவே முடியல. ஒரு மூணு மாசம் ரொம்ப டிப்ரசனுக்குள்ள போனேன். ஒரு நாள் ராத்திரி எந்திரிச்சு என் ஹஸ்பெண்ட் கிட்ட ‘நம்ம எல்லாரும் சூசைட் பண்ணிக்கலாமா’னு கேட்டேன். அப்போ எனக்கு ஆறுதலா இருந்தது என்னோட பெரிய பொண்ணு. ‘அம்மா..பாரும்மா.. அவ சிரிக்குறாம்மா.. அவ நல்லாதாம்மா இருக்கா’னு சொல்லுவா...” 

இதேவேளையில், பல டாக்டர்களிடம் தன்னுடைய குழந்தையை கூட்டிச் சென்று சோதனைகள் செய்து கொண்டே தான் இருந்திருக்கிறார் தீபா. குழந்தைக்கு ஒரு வயது இருக்கும் போது அவளுக்கு க்ரெனியோஸ்டெனோசிஸ் (Craniostenosis) என்றொரு குறைபாடு இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். 


மூளை முழுமையான வளர்ச்சி அடைவதற்கு முன்னரே மண்டை ஓடு மூடிவிட்டதால் உண்டாகும் குறைபாடு இது. இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்காக குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லும் போது அவளுடைய அப்பாவும், உறவினர்களும் கதறி அழுதிருக்கிறார்கள். ஆனால், தீபா கலங்கவில்லை. 

“சர்ஜரிக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடியே என் மனசு ரொம்ப அமைதியாக ஆரம்பிச்சிடுச்சு. ஏழரை மணி நேரம் மேஜர் சர்ஜரின்னு சொல்றாங்க. ஏதோ ஒரு வகையில எனக்கு சொல்யூஷன் கிடச்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன். அப்போ தான், இவ என்னால தான் என் வாழ்க்கைக்கு வந்தா, அவளை முழுசா ஏத்துக்குறேன். இந்த மாதிரியான குழந்தைகளுக்கு எதாவது பண்ணனும்னு அந்த நாள் முடிவு பண்ணேன்,” என உணர்வுப்பூர்வமாக சொல்கிறார். 

அந்தக் கட்டத்தில் தன்னுடைய குழந்தை ‘ஸ்பெஷல் சைல்ட்’ என அடையாளப்படுத்தப்பட்ட காரணத்தால், ‘ஸ்பெஷல் சைல்ட்’ என்பதன் ஆழத்தை தெரிந்துக் கொள்ள முயன்றிருக்கிறார் தீபா. ‘ஸ்பெஷல் ஸ்கூல்கள்’ பற்றித் தெரிந்துக் கொள்ள கோவையில் இருக்கும் சில சிறப்புப் பள்ளிகளுக்கு சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியிருக்கிறது. 


அங்கு அளிக்கப்பட்ட பராமரிப்பும், அணுகுமுறையும் சரியானதல்ல என்பதை புரிந்துக் கொண்ட போதே, தான் ஒரு சிறப்புப் பள்ளியை தொடங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். இங்கிருக்கும் சிறப்புப் பள்ளிகளை எல்லாம் விட மேம்பட்டதாக, வலிமையானதாக அந்தப் பள்ளி இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார். 

அவர் வாழ்ந்து வந்த அபார்ட்மெண்டில், டவுன்ஸ் சிண்ட்ரோமோடு ஒரு குழந்தை இருப்பது தெரிய வர, அந்தக் குழந்தையின் அம்மாவோடு அறிமுகமாகியிருக்கிறார். அறிமுகமான சில மாதங்களிலேயே, அவர்கள் இருவரும் சேர்ந்து கோவை ஜி.என்.மில்ஸில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு தங்களுடைய சிறப்புப் பள்ளியை 2006 ஆம் ஆண்டில் தொடங்கியிருக்கிறார்கள். அந்த பள்ளிக்கு ‘ஸ்ரீ பிரசாந்தி அகாடமி’ என பெயரிட்டிருக்கிறார்கள். 

“ஒவ்வொரு வீதியா போய் இடம் தேடிட்டு இருந்தேன். இப்படி ஸ்பெஷல் ஸ்கூல்னு சொன்ன உடனேயே ‘இல்ல’ன்னு நெறைய பேர் சொல்லிருக்காங்க,” என 2006 ஆம் ஆண்டு அகாடமியை தொடங்க சந்தித்த சவாலை விவரிக்கிறார். 
image
image

மூன்று மாதங்கள் ஜி.என்.மில்ஸில் இருந்த பிறகு, அவருடைய மாமியார் தவறிவிட, மாமனார் தீபாவை அழைத்து அவருடைய வீட்டிலேயே அகாடமியை நடத்துமாறு கேட்டிருக்கிறார். ஏறத்தாழ பதினைந்து குழந்தைகள் ஒரு கூரையின் கீழ் ஒன்றாகியிருக்கும் போது, தீபா இந்த குழந்தைகளை ஆழமாக கற்கத் தொடங்கியிருக்கிறார். ஆட்டிசம், டவுன்ஸ் சிண்ட்ரோம், செரிபிரல் பால்சி என பல வெவ்வேறு குறைபாடுகளுடன் வாழும் குழந்தைகளோடு அதிக நேரம் வாழ்ந்து வருகிறார்.

“நிறைய செமினார்களுக்கு, மீட்டிங்குகளுக்கு எல்லாம் போவேன். நான் இப்படி ஒரு ஸ்பெஷல் ஸ்கூல் நடத்துறேன்னு சொன்ன உடனேயே என்னோட க்வாலிஃபிகேஷன் என்னன்னு கேப்பாங்க. கேக்குறவங்க எல்லாம் ஸ்பெஷல் எஜுகேட்டராகவோ, சைக்காலஜிஸ்டாகவோ இருப்பாங்க. நான் ஒரு குழந்தையோட அம்மான்னு ரொம்ப பெருமையா சொல்லிப்பேன். உடனே, எல்லாரும் ஒரு மாதிரி வித்தியாசமா பார்ப்பாங்க,” அதனால் அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலைகழகத்தில் சைக்காலஜி பயின்றிருக்கிறார். 

அகாடமிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடியது. கம்யூனிகேஷன் தெரபி, ஸ்பீச் தெரபி, நேச்சுரோதெரபி என பல்வேறு சிகிச்சைகளுக்கான தேவையும் வளர்ந்தது. இதற்காக, இரண்டு மூன்று கட்டிடங்களை வாடகைக்கு எடுத்திருக்கிறார். கூடவே, தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் இருக்கும் சிறப்புப் பள்ளிகளின் தரத்தை கண்டு உணர்ந்ததால், அது போல மேம்பட்ட ஒரு சிறப்புப் பள்ளியை தொடங்க வேண்டும் என்பதிலேயே தீபாவின் முழு கவனமும் இருந்திருக்கிறது. 


ஆனா, இடம் தேடத் தொடங்குனப்போ, எல்லாரும் பல கோடி ரூபாய் விலை கேட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ தான் கௌமாரம் மடத்துல இருந்து சுவாமி வந்து பார்த்தாரு. குழந்தைங்க கிட்ட எல்லாம் பேசிட்டு, எங்களுக்கு என்ன வேணும்னு கேட்டார்? மூன்று இடங்களில் பள்ளியை நடத்துவதன் சிரமத்தை சொன்னதும், சில நாட்களிலேயே பள்ளித் தொடங்க நிலம் வழங்கியிருக்கிறார் கௌமாரம் மடத்தின் சுவாமி. கோவையின் சின்னவேடம்பட்டியில் ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட, அங்கு ‘கொமாரம் பிரசாந்தி அகாடமி’ தொடங்கப்பட்டிருக்கிறது. 

தற்போது அறுபத்தைந்து ஊழியர்களும், நூற்று முப்பத்தைந்து மாணவர்களும் அகாடமியில் இருக்கின்றனர். மேலும், திருப்பூரில் பிரசாந்தி அகாடமியின் கிளை ஒன்றும் இருக்கிறது. 
கௌமாரம் பிரசாந்தி அகாடமி குழுவினர்
கௌமாரம் பிரசாந்தி அகாடமி குழுவினர்

மாணவர்கள் எந்த அளவீட்டில் வகுப்புவாரியாக பிரிக்கப்படுகிறார்கள் என்றால், “முக்கியமா வயசு அடிப்படையில தான். அது போக, அவங்களோட பெர்ஃபாமன்ஸ் அளவு,” என்கிறார். எர்லி இண்டர்வென்ஷன், ப்ரீ -அகாடெமிக் 1, ப்ரீ-அகாடெமிக் 2, அகாடெமிக் 1, அகாடெமிக் 2, அகாடெமிக் 3, அகாடெமிக் 4,வொகேஷனல் 1, வொகேஷனல் 2 - இப்படி பல வரிசையில் வகுப்புகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


கடந்த பனிரண்டு வருடங்களில், ஏறத்தாழ அறுபது குழந்தைகளை ரெகுலர் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கிறது பிரசாந்தி அகாடமி. 

“எந்த ஒரு காரணத்துக்காகவும் ஒரு குழந்தைக்கு அட்மிஷன் கிடையாதுன்னு ஒரு ஸ்கூல் சொல்லக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. எல்லாரையும் குறை சொல்லிட முடியாது. ஆனா, ரெண்டு பள்ளிகளோட சில அனுபவம் ஏற்பட்டிருக்கு. ரெகுலர் ஸ்கூல்ஸ் கொஞ்சம் உதவி பண்ண முன் வந்தா நல்லா இருக்கும்.”

பள்ளிக்கென இருக்கும் ஃபீஸ் பற்றிக் கேட்ட போது, “நிச்சயமா ஃபீஸ் வாங்குறோம். ஆனா, பிரசாந்தி அகாடெமியில ஃபீஸ் கட்ட முடியாததால குழந்தைய சேர்க்காதவங்கன்னு யாருமே கிடையாது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியுதோ, மாசம் ஐநூறு, ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக்குவோம். எதுவுமே கொடுக்க முடியாதுன்னா நான் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட அந்த குழந்தைக்காக ஸ்பான்ஸ்ர் பண்ணச் சொல்லி கேட்பேன்,” என்கிறார்.


மூளைத்திறன் குறைபாடு இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவது அரிதானதாக இருக்கிறது. அம்பா ஃபார் லைஃப் (Amba for life) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு இதற்கான தீர்வை தேடிக் கொண்டிருக்கிறது. மூளைத்திறன் குறைபாடு இருப்பவர்களை வைத்தே, அவர்களை போன்றவர்களுக்கு டேட்டா எண்ட்ரி முதலான தொழில் பயிற்சிகள் வழங்குகின்றது.


பிரசாந்தி அகாடமி மாணவர்களை இந்த அமைப்பிற்கு கொண்டு சென்று பயிற்றுவித்து, அவர்களை வைத்து அகாடமியின் பிற மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்த பயிற்சியை பிரசாந்தி அகாடமி மாணவர்கள் சுலபமாக கையாண்டதை பார்த்து அம்பா அமைப்பினரும் ஆச்சரியப்பட்டதாக தீபா சொல்கிறார்.

“நம்மளோட பூர்வ ஜென்ம பாவங்களால தான் இந்த மாதிரியான குழந்தைகள் பிறக்குதுனு நம்ம காதுபடவே பேசுவாங்க. ஆனா, நான் இந்த குழந்தைங்களோட நெருங்கி பழகத் தொடங்குன பிறகு தான் எனக்கு புரிஞ்சுது. அவங்க எல்லாருமே ரொம்ப வெகுளியானவங்க. அவ்ளோ புனிதம். அன்பு மட்டுமே நிறைஞ்சு இருக்குறவங்க.”

வைப்ரேஷன்ஸ்னு சொல்லுவோம் இல்லையா? அலைகள். அந்த அலைகள் மூலமாவே கம்யூனிகேட் பண்ணுவாங்க. நான் ரொம்ப நல்ல வைப்ஸோட இருந்தேன்னா, அந்த கொழந்தைக்கு என்ன யாருன்னே தெரியாம இருந்தாலும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சுப்பான். கர்மான்னு சொல்றாங்க இல்லையா? நிறைய புண்ணிய கர்மா இருக்கதால தான் கடவுள் தன்மையோட இவ்வளவு அழகான கொழந்தைய கடவுள் கொடுத்திருக்காருன்னு புரிஞ்சுக்கிட்டேன், என்கிறார். 


எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசிய தீபா, மாணவர்களுக்கு கல்வியும் பயிற்சியும் அளித்து வேலைக்கு அனுப்புவது ஒருபுறம் இருந்தாலும், அவர்களுக்கென ஒரு வாழ்க்கைச் சூழலை உண்டாக்கி தருவது தான் பெரிய உந்துதலாக இருக்கிறது என்கிறார். எனவே, மூளைத்திறன் குறைபாடிருக்கும் வயது வந்தோருக்காக ஒரு அபார்ட்மெண்ட் கட்டியெழுப்பி, அங்கு அவர்கள் வேலை செய்து வாழ ஒரு சூழலை உண்டாக்குவதை அடுத்த ப்ராஜெக்டாக கையிலெடுத்து இருக்கிறார்.


பேட்டி எடுத்து முடித்ததும், கௌமாரம் பிரசாந்தி அகாடமி நடத்திய Walkathon நிகழ்வின் வீடியோ லிங்கை எனக்கு தீபா அனுப்பியிருந்தார். வீடியோவின் ஒரு நிமிடம் முப்பதாவது நொடியில் குழந்தைகளை கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் காட்ச்சியில் தீபாவை பார்க்கும் போது, இந்த கட்டுரையின் ஒட்டுமொத்த சாரமும் அந்த நொடியில் அநாயாசமாக வெளிப்பட்டு விடுகிறது!