பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரிக்கும் ஃபேஷன் டிசைனர்!
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக கொட்டப்படுவதைக் குறைக்கும் வகையில் ஒரு தனித்துவமான கான்செப்டை உருவாக்கியிருக்கிறார் 22 வயது ஃபேஷன் டிசைனர் சாரா லக்கானி.
பிளாஸ்டிக் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகவே மாறிவிட்டது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் கழிவுகளாக கொட்டப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளாக கொட்டப்படுவதைக் குறைக்கும் வகையில் ஒரு தனித்துவமான கான்செப்டை உருவாக்கியிருக்கிறார் 22 வயது ஃபேஷன் டிசைனர் சாரா லக்கானி.
இவரது கலெக்ஷன்ஸ் மறுசுழற்சி செய்யப்பட்ட டெக்ஸ்டைல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இவரது இந்த முன்னெடுப்பு இந்த ஆண்டு Lakme Fashion Week ரேம்ப்வாக் வரை இவரைக் கொண்டு சென்றுள்ளது. இதில், Trash or Treasure என்கிற பெயரில் தனது தொகுப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
FDCI, Pearl Academy, Graduate Fashion Foundation ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து The Lakme Fashion Week for Week International (GFWi) நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள குளோபல் ப்ரீமியர் ஃபேஷன் ஸ்கூல் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
“நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையின் நுணுக்கங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. என்னுடைய தொகுப்பு அக்கறையுடன் பொருட்களை தேர்வு செய்யும் நுகர்வோர்களுக்கானது,” என்கிறார் சாரா.
கழிவுகளை மக்கள் பார்க்கும் கண்ணோட்டத்தை இந்த பிராஜெக்ட் மூலமாக இவர் மாற்ற விரும்புகிறார். அதேபோல், இதற்கான தீர்வை உருவாக்குவதில் எப்படி உலக மக்கள் பங்களிக்கலாம் என்பதையும் இந்த பிராஜெக்ட் வாயிலாக காட்ட விரும்புகிறார்.
உதாரணத்திற்கு இவரது தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நெகடிவ் கந்தா எம்பிராயிடரியில் பாலித்தீன் பேக் கழிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இந்தத் துணிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட, கைத்தறி ஜவுளி கழிவுகள். எல்லோரும், எங்கும், எல்லா நேரங்களிலும் அணிந்துகொள்ளும் வகையில் வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இவர் ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்.
சாராவின் தொகுப்புகளில் ’கந்தா எம்பிராயிடரி’ இடம்பெற்றிருக்கிறது. இது பல நூற்றாண்டு கால பழமையான தையல் முறை. இதில், மேற்பரப்பின் ஒருபக்கம் மட்டும் நூல்கள் நுழைத்து எடுக்கப்படும். துணியின் மறுபக்கத்தில் எளிமையான கந்தா தையல் இருக்க, முன்பக்கத்தில் சிக்கலான வடிவியல் முறை காணப்படும்.
”மறுசுழற்சி செய்யப்பட்ட இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எளிமையான டாப்ஸ், பாட்டம்ஸ் போன்ற ஆடைகள் கொண்டது என் தொகுப்பு,” என்றார் சாரா.
குடும்பத்திலிருந்து கிடைத்த உத்வேகம்
சாரா நாக்பூரில் உள்ள ஒரு சிறிய நகரைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் மருந்தகம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மருந்து துறையில் அதிகளவில் பிளாஸ்டிக் உற்பத்தியாவதை அவர் கவனித்தார்.
“சிறிய இடத்தில் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் நாங்கள் கடும் சிரமத்தை சந்தித்தோம். சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனமோ தனிநபர்களோ அந்தப் பகுதியில் இல்லை,” என விவரித்தார்.
Pearl Academy ஃபேஷன் ஸ்டூடண்டாக இருந்த சமயத்தில் இறுதியாண்டு பிராஜெக்டிற்காக ஒரு தலைப்பை தேர்வு செய்யவேண்டியிருந்தது. அப்போது அவர் சற்றும் யோசிக்கவில்லை.
பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய ஆய்வில் களமிறங்கினார். இந்தியாவில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன, அவற்றை எந்தெந்த வழிகளில் மறுசுழற்சி செய்யமுடியும் என்பதை ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்யத் தொடங்கினார்.
“இந்த ஆய்வுதான் என்னுடைய முயற்சிக்கான ஆரம்பப்புள்ளியாக இருந்தது. தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன். மும்பை, குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் மறுசுழற்சி செய்பவர்கள் பலரைத் தொடர்பு கொண்டேன். அவர்களிடமிருந்து அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தேன்,” என்கிறார்.
சாரா வெவ்வேறு நெசவு முறைகளை பரிசோதனை செய்து பார்த்தார். பிராஜெக்டிற்கு பிளாஸ்டிக்கை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்தார். பிறகு நெகடிவ் கந்தா எம்பிராயிடரி பயன்படுத்த முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் சாரா பிரளாஸ்டிக் கழிவுகள், குறிப்பாக பிளாஸ்டிக் பைகள், மாத்திரை அட்டைகள் போன்றவற்றைக் கொண்டு வேலையைத் தொடங்கினார்.
“என் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு நூல் தயாரித்தேன். அதைத் தைக்க ஆரம்பித்தேன். அனைத்து வகையான எம்பிராயிடரிகளையும் முடிச்சுகளையும் முயற்சி செய்து பார்த்தேன். எனக்குத் தேவையான எம்பிராயிடரி தையலை இறுதி செய்தேன்,” என்கிறார்.
மும்பை மற்றும் குஜராத் பகுதியில் வெவ்வேறு எம்பிராயிடரி வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆரம்பத்தில் எம்பிராயிடரி வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சாராவின் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.
“இந்த வேலைக்கான செயல்முறை நீண்டது. அதிக ஊழியர்கள் தேவைப்படுவார்கள். எளிதாக வேலை செய்ய உகந்த நூல்களையே எம்பிராயிடரி வேலை செய்பவர்கள் பயன்படுத்தி பழகிவிட்டனர்,” என விவரித்தார்.
கடைசியாக மும்பையில் எம்பிராயிடரி வேலை செய்த ஒருவர் சாராவின் பிராஜெக்டிற்கு உதவ சம்மதித்திருக்கிறார். இது சவாலான வேலைதான் என்றாலும் எல்லோரும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார்.
சாரா தற்போது Mufti என்கிற ஆண்களுக்கான ஆடை பிராண்டில் ஜூனியர் டிசைனராக பணியாற்றுகிறார். துறைசார்ந்த அனுபவம் கிடைத்ததும் நிபுணர்களுடன் பணியாற்றிவிட்டு சொந்தமாக பிராண்ட் தொடங்கவும் விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா
பீர் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களால் கட்டிய வீடு: கேரள இளைஞரின் அசத்தல் முயற்சி!