ஃபேஷன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஐஸ்வர்யா!
உருவ கேலி, பாலியல் வன்கொடுமை, இன பாகுபாடு போன்ற சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் 24 வயது ஐஸ்வர்யா ஷர்மா.
ஐஸ்வர்யாவிற்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகம். இது சார்ந்த பல்வேறு அம்சங்களை தனது வலைப்பக்கத்தில் பதிவிடுகிறார். இந்தப் பகுதியை சமூக அக்கறையுடன் இவர் அணுகுவதே இவரது தனித்துவம். ஐஸ்வர்யாவின் ஆன்லைன் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் (Figuramoda) அழகான தோற்றம் பற்றி மட்டுமல்லாது சமூக மாற்றம் குறித்தும் விவாதிக்கிறது.
“ஃபேஷன் என்பது புற அழகு சார்ந்தது என்பதே பலரது கருத்தாக உள்ளது. ஆனால் அது சுதந்திர உணர்வு சம்பந்தப்பட்டது. என் வலைப்பதிவுகள் மூலம் அதை வலியுறுத்துவதுவதில் தீவிரம் காட்டுகிறேன்,” என்று ஐஸ்வர்யா சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐஸ்வர்யா பல்வேறு பிரச்சனைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். உருவத்தை வைத்து கேலி செய்தல், பாலியல் வன்கொடுமை, இன பாகுபாடு போன்ற தலைப்புகள் இதில் அடங்கும். அதுமட்டுமின்றி ஃபேஷன் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிகளால் 75,000-க்கும் மேற்பட்டோரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இவரது வெற்றிகரமான பிரச்சாரங்களில் ஒன்று #flowersnotscars. இது ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரச்சாரம் அறிமுகமான 72 மணி நேரங்களுக்குள்ளாகவே ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.
இதுவரையிலான பயணம்…
ஐஸ்வர்யா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். கேம்பிரிட்ஜ் ஃபவுண்டேஷனில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு விவேகானந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ப்ரொஃபஷனல் ஸ்டடீஸ் கல்வி நிறுவனத்தில் ஜர்னலிசம் படித்தார். தற்போது மும்பை NMIMS-ல் எம்பிஏ படித்து வருகிறார்.
16 வயதிலேயே இவருக்கு ஃபேஷன் மீது ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. புதிய ட்ரெண்ட், விழாக்களுக்கான உடையலங்காரம், புதிய ஸ்டைல்களை சோதித்து பார்ப்பது என மும்முரமாக செயல்பட்டார். அவர் அணியும் ஆடைகளின் மூலம் அவர் தெரிவிக்க விரும்புவதை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஃபேஷன் சம்பந்தப்பட்ட ஒன்பது பத்திரிக்கைகளின் சந்தாதாரராக இருந்துள்ளார்.
“ஃபேஷன் என்னுடைய சிந்தனையை மேம்படுத்தியது. தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. காலம் செல்ல செல்ல இந்தத் துறை மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே போனது. இந்தத் தீவிர ஆய்வின் நோக்கம் என்ன என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது. அழகாக தோன்றுவதும் ட்ரென்டியாக இருப்பதும் மட்டுமே ஃபேஷன் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த மனநிலையை நான் மாற்ற விரும்புகிறேன். அப்போதுதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஃபேஷனைப் பயன்படுத்தும் எண்ணம் தோன்றியதும்,” என்றார் ஐஸ்வர்யா.
கல்லூரி நாட்களில் ஆதரவற்றோர்களுக்கு உணவளிக்கும் இடங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது தன்னார்வலப் பணிகளுக்காக ஐஸ்வர்யா செல்வதுண்டு.
இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் லண்டன் ஃபேஷன் வீக்கில் ரேம்ப் வாக் செய்தது குறித்து தெரிந்துகொண்டார். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வன்முறைக்கு ஆளான நூற்றுக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லட்சுமி அகர்வால் ரேம்ப் வாக் செய்தார். அவரைக் கண்டு உந்துதல் பெற்ற ஐஸ்வர்யா சமூகத்தில் நடக்கும் கசப்பான சம்பவங்களை வெளியுலகிற்கு சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சொந்தமாக வலைப்பக்கத்தைத் தொடங்கினார்.
ஐஸ்வர்யா அன்றைய தினம் அணியும் உடைகளை வலைப்பக்கத்தில் பதிவிடத் தொடங்கினார். மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி குறித்து சுருக்கமாக எழுதத் தொடங்கினார்.
“மாணவர் பள்ளியில் கிண்டல் செய்யப்படுவது, மாடல் ஒருவர் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவது, அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் உயர் அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது என ஒவ்வொருவரின் மனநிலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே இவற்றைப் பற்றி கலந்துரையாடத் தூண்டியது. இதையே என் வலைப்பக்கத்தில் செய்தேன்,” என்கிறார் ஐஸ்வர்யா.
ஃபேஷன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல்
24 வயதான ஐஸ்வர்யாவின் முதல் வலைப்பதிவு ஆசிட் வீச்சு பற்றியது. இந்தப் பதிவிற்கு முன்பு ஐஸ்வர்யா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அவர்கள் கடந்து வந்த கடினமான காலகட்டத்தைப் புரிந்துகொண்டார்.
“பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதைக் கேட்கும்போது அவர்கள் ஒவ்வொருவரின் கடினமான சூழலையும் என்னால் உணரமுடிந்தது. அதுவே என் ஆழ்மனதில் இருப்பதை எழுதவும் வெளிப்படுத்தவும் உதவியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் அதேநேரம் சமூகத்தில் நடக்கும் தீங்குகளை எதிர்த்துப் போராடுவது குறித்த என்னுடைய கருத்தையும் தெரிவிக்கும் நோக்கத்துடன் முகத்தில் டூடுல்கள் கொண்டுள்ள என் புகைப்படத்தை பதிவிட்டேன்,” என்றார்.
அப்போதிருந்து ஏராளமானோர் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை இ-மெயில் மூலம் ஐஸ்வர்யாவிடம் பகிர்ந்துகொண்டனர். எனினும் இத்தகைய எதிர்வினைகள் அனைத்தும் ஏற்புடையதாக இருப்பதில்லை.
“சமூக வலைதளங்களில் என்னைத் தரக்குறைவாக பேசுவார்கள். இதை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிலர் என்னுடைய வலைபக்கம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் இவை கவலையளித்தாலும் இதை சமாளிக்கக் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் ஐஸ்வர்யா Gucci, American Eagle, Help Age India, Water Aid, Save Rural India, Women Development Cell போன்ற பல்வேறு ஃபேஷன் பிராண்டுகளுடன் பல்வேறு பிராஜெக்டுகளில் பணியாற்றியுள்ளார். இவரது சமீபத்திய பிரச்சாரம் ஒரு உலகளாவிய இயக்கம் தொடர்பானது. ஐக்கிய நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட 17 வளர்ச்சி இலக்குகள் எட்டப்படுவதற்காக ஒரு பில்லியன் மக்களை ஒன்றிணைப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இதில் தனிநபர்கள் #TOGTHERBAND மூலம் கைகளால் தயாரிக்கப்பட்ட பேண்ட் வாங்கி இந்த இலக்குகளை எட்டுவதில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி ஐஸ்வர்யா மகேந்திர சிங் ஃபவுண்டேஷன் முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். #Takethepowerback என்கிற இந்தப் பிரபல பிரச்சாரம் பெண்களுக்கு சக்தியளிப்பது தொடர்பானது. வருங்காலத் திட்டம் குறித்து ஐஸ்வர்யா பகிர்ந்துகொண்டபோது,
“ஃபேஷன் தொடர்பான ஒரே மாதிரியான சிந்தனைகளை தகர்த்தெறிந்து மறுவடிவம் செய்யவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இதன் மூலம் குரலற்றவர்களுக்கு சக்தியளிக்க விரும்புகிறென். முக்கியத்துவம் அளிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து பேச விரும்புகிறேன். ‘சமூக வலைதளங்கள் சமூக நலனுக்கானது’ என்பதை என் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற உள்ளேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி