கொரோனாவை எதிர்க்க உணவு மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை பெறுவது எப்படி?
ஊரடங்கால் உடல் உழைப்பு இல்லாமல், பெருந்தொற்று பயத்தினால் இருக்கும், நமது உடல் வலிமையையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் பலப்படுத்தும் தேவை இருக்கிறது.
மக்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வைத் தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் பாதித்துள்ளது. தினசரி வழக்கங்களுக்கு ஏற்பட்ட திடீர் இடையூறு, விருப்பமில்லாத தனி நபர் இடைவெளிச் சட்டங்கள் மற்றும் வெள்ளம் போல் வரும் தகவல்கள் நம் அனைவரையும் மன அழுத்ததிலும், குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன.
தொடர் பயம், கவலையளிக்கும் மனநிலை, எரிச்சல், குற்றவுணர்வு, அவநம்பிக்கை மற்றும் கையாலாகாத்தனம், தூக்கமின்மை, பசியின்மை அல்லது உடல் எடை கூடுதல், கவனமின்மை மற்றும் நீண்ட காலமாக இருக்கும் நோய்கள் தீவிரமடைதல் ஆகியவை நமது ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மன அழுத்தம் பாதித்துக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பொது முடக்கக் காலத்தில், போதிய உடல் உழைப்பு இல்லாததாலும், பெருந்தொற்று குறித்த பயத்தினாலும் ஏற்கனவே இருக்கும், ஆனால் வெளியில் தெரியாத நோய்கள் தீவிரமடையலாம். இதனால், நமக்கு எந்த வாழ்க்கை முறை வியாதி இல்லாத போதும், நமது உடல் வலிமையையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் பலப்படுத்தும் தேவை இருக்கிறது.
கோவிட்-19க்கு எதிராக எந்த குறிப்பிட்ட சிகிச்சையும், தடுப்பு மருந்தும், மருத்துவப் பரிந்துரைகளும் இல்லாத நிலையில் என்னென்ன உட்கொள்ளலாம்?
- பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும்.
- சோடா, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உபயோகத்தைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம், பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கம், மற்றும் யுடி உணவு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
- உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல் ஆகியவற்றையும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
இந்தியாவின் பழமையான சிகிச்சை முறையான ஆயுர்வேதத்தின் பகுதிகளாக இந்தப் பரிந்துரைகளும், வழிகாட்டுதல்களும் எப்போதிலிருந்தோ உள்ளன. ஆஹார் (உணவு), விஹார் (வாழ்க்கை முறை), ஆச்சார் (ஒருவர் வெளி உலகத்திடம் எப்படி நடந்து கொள்கிறார்) மற்றும் விச்சார் (மன நலம்) ஆகிய நான்கு தூண்களின் மீது தான் வாழ்க்கை நிற்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
இதன் படி, உணவு ஒரு மருந்தாகச் செயல்பட்டு, வாழ்க்கை, உணவு மற்றும் உடல் ஆகிய புலன்களோடுத் தொடர்பு ஏற்படுத்தி ஒருவரைக் குணப்படுத்தும். ஒருவரது உணவுத் தேர்வுகள், அளவுகள் மற்றும் வாழ்க்கை முறையை வைத்து அவரது மன, உடல் மற்றும் உணர்வு நிலைகளை முடிவு செய்து ஒழுங்குப்படுத்த முடியும்.
மரபணுக்கள், சூழ்நிலை, உணவு மற்றும் உணர்வுக் காரணிகளுக்குள் உள்ள நெருங்கியத் தொடர்பு, மனநிலை, உணவு மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கான சக்கரத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. சுகாதாரமான வாழ்க்கை முறை, தியானம், பிராணாயாமம், போதியத் தூக்கம் மற்றும் சாத்வீகமான உணவு ஆகியவற்றின் மூலம் சுகாதாரமான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து, கோவிட்-19 உட்பட பல்வேறு நோய்களை எதிர்த்துப் போரிடலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
பழங்கள், காய்கறிகள், முளை தானியங்கள், பருப்புகள், கொட்டைகள் மற்றும் விதைகள், குறைந்த அளவிலான கொழுப்புள்ள பால் மற்றும் பால் பொருள்கள், தூய பழச் சாறுகள் மற்றும் சமைக்கப்பட்ட 3-4 மணி நேரங்களுக்குள் உண்ணக்கூடிய உணவு வகைகளுக்கான எடுத்துக்காட்டாகும்.
தற்போதைய பெருந்தொற்றுக் காலத்திற்கான உணவுத் தேர்வுகள்:
நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குவதற்காக சுய பராமரிப்பு வழிகாட்டுதல்களை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் தற்போதைய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
மூலிகை தேநீர் மற்றும் துளசியில் இருந்து செய்யப்பட்ட டிகாக்ஷன், தால்சினி, காளிமிர்ச், காய்ந்த இஞ்சி, வெல்லத்துடன் கூடிய உலர் திராட்சை, எலுமிச்சை சாறு ஆகியவை கொவிட்-19க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும் என்று இந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தேவையான ஓய்வு, நேரத்துக்கு தூக்கம், சூரிய ஒளி மேலே படுதல், யோகாசனம் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் ஆகியவை நமது உடல், மனம் மற்றும் வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்த உதவும் என்று பரிந்துரைகள் கூறுகின்றன.
நிலையில்லாத்தன்மை உள்ள மற்றும் சிகிச்சை கிடைக்காமல் இருக்கும் இந்த சமயத்தில், உடல் நலனோடும் அமைதியாகவும் இருப்பது முக்கியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலே பரிந்துரைக்கப்பட்ட உணவு வகைகள் போன்ற உணவுகளோடு, நல்ல பழக்கவழக்கங்கள், நோய் எதிர்ப்புத் தன்மையை கட்டமைப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, கோவிட்-19ஐ எதிர்த்து போரிடும் வலிமையை அளிக்கிறது.
கட்டுரையாளர்கள்: ஜோதி சர்மா, விஞ்ஞானி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் எஸ். கே வர்ஷ்னே, தலைவர், சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்பு பிரிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
*(இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் இதை எழுதிவர்களின் சொந்தக் கருத்துகளே, அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்களுடையது அல்ல).