'இறந்தவர்களின் மீட்பர்' - ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் 'ஆத்மா அறக்கட்டளை' கந்தவேலன்!
கோவையில் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தனது சொந்த எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து வரும் கந்தவேலன் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
கோவையில் இறந்தவர்களின் உடல்களை இலவசமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்து வரும் கந்தவேலன் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
மனிதன் வாழும் போது ஏழை, பணக்காரன் என எப்படி வேண்டுமானாலும் வாழ்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் இறக்கும் போது, கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டு பிரியாவிடை தர வேண்டியது அவசியமாகும். அப்படிப்பட்ட புனித சேவையைத் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையைச் சேர்ந்த கந்தவேலன் என்பவர் செய்து வருகிறார்.
யார் இந்த கந்தவேலன்?
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த கந்தவேலன், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 5 வயது இருக்கும் போது, தாய் மற்றும் 4 உடன்பிறப்புகளுடன் தந்தை இல்லாமல் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டார். சிங்காநல்லூரில் உள்ள பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்தார்.
தாய்க்கு வயதானதை அடுத்து குடும்ப பாரம் கந்தவேலன் மீது விழுந்தது. 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர், படிப்பை கைவிட்டு வேலைக்குச்செல்ல ஆரம்பித்தார். ஆனால், இந்த பயணம் தான் தன்னை இறந்தவர்களின் மீட்பராக மாற்றப்போகிறது என கந்தவேலனுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"1980ம் ஆண்டு, ஆதரவற்ற நபர் ஒருவர் எங்களுடைய சுற்றுப்புறத்தில் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சிங்காநல்லூர் ஸ்டேஷன் போலீஸ் அதிகாரி உதவி கேட்டார். நானும் என் நண்பனும் தயங்காமல் சம்மதித்தோம். அனைத்து சட்ட நடைமுறைகளும் என் பெயரில் செய்யப்பட்டன. பின்னர், இறுதி சடங்குகள் முடிந்து உடலை அடக்கம் செய்தோம். அந்த நாள் என் வாழ்க்கையை மாற்றியது,” என்கிறார்.
இறந்தவர்களின் மீட்பர்:
அப்போது சிறிய ஃபேப்ரிகேஷன் யூனிட் ஒன்றினை நடத்தி வந்த கந்தவேலனுக்கு, தனது வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு ஆதரவற்ற இறந்தவர்களின் உடல்களை ஏன் நல்லடக்கம் செய்யக்கூடாது என்ற யோசனை உருவானது.
“நான் ஐந்து காவல் நிலையங்களையும், அரசு மருத்துவமனையையும் அணுகி உதவி செய்தேன். அதன்பிறகு, உரிமை கோரப்படாத உடல்கள் கிடைக்கும் போதெல்லாம் போலீசார் எனக்கு தகவல் தெரிவிக்கத் தொடங்கினர்,” என்றார்.
கோவை, திருப்பூர் ரயில்வே தண்டவாளங்களில் கிடக்கும் சேதமடைந்த உடல்கள் முதல் எச்.ஐ.வி. போன்ற நோயால் மரணித்த ஆதரவற்ற உடல்களையும் நல்ல முறையில் அடக்கம் செய்து வருகிறார்.
ஆத்மா அறக்கட்டளை:
தனது சமூக சேவையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து ’ஆத்மா அறக்கட்டளை’யை தொடங்கினார். தற்போது ஒரு நண்பர் மரணமடைந்துவிட, மற்றொருவர் விலகிய நிலையில் கந்தவேலன் தனியாகவே அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார்.
2002ம் ஆண்டு முதல் உரிமை கோரப்படாத 1,675 உடல்களை இலவசமாக அடக்கம் செய்துள்ளார். ஒரே நாளில் 24 உடல்களை கூட புதைத்துள்ளதாக நினைவுகூறுகிறார்.
கந்தவேலன் ஆரம்பக்கட்டத்தில் அனைத்து இறுதிச்சடங்குகளையும் தனது கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்திலேயே செய்து வந்துள்ளார். அப்போது ஒரு உடலை புதைக்க சுமார் 1,300 ரூபாய் செலவான நிலையில், தற்போது உடலை புதைக்க குழி தோண்டுவது முதல் இறுதிச்சடங்கு, உடலை போர்த்துவதற்கான துணிகள், சவக்கிடங்கில் இருந்து உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வது வரை 2,500 ரூபாய் வரை செலவழிக்கப்படுவதாக கூறுகிறார்.
“நாங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சடலங்களை எடுத்துச் சென்று, குளிப்பாட்டி சுத்தம் செய்து உரிய முறையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்து வருகிறோம். அதிகபட்சமாக ஒரே நாளில் 22 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். மின் கம்பிகள் உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளின் சடலங்களையும் மீட்டுள்ளோம்.”
இவரது சேவையைப் பாராட்டி, கோவை மாநகரக் கழகம், சிங்காநல்லூர், உப்பிலிப்பாளையம், கல்லிமடை ஆகிய இடங்களில் உள்ள மயானங்களைப் பராமரிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளது. சமீப காலங்களில், அவர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 11 முதல் 14 உடல்களை அடக்கம் செய்து வருகிறார். கொரோனா தொற்றின் போது 133 உடல்களை நல்லடக்கம் செய்ததோடு, தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல இலவச வேன் சேவையையும் வழங்கியுள்ளார்.
கந்தவேலன்; ஆத்மா அறக்கட்டளையை நடத்தி வந்தாலும், ஸ்பான்சர்ஷிப்களைப் பெறுவதைத் தவிர்க்கிறார், ஏனெனில் அவர் தனது வருமானம் மூலமாக இந்த சேவையை தொடர்வதையே விரும்புகிறார். இருப்பினும், சில நலன் விரும்பிகள் அளிக்கும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறார்.
தகவல் உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வீடில்லாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களை மீட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்!