இந்தியாவின் LGBT சமூகத்தினருக்கான முதல் மருத்துவமனை!
மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ஹம்சஃபர் ட்ரஸ்ட் எல்ஜிபிடி சமூகத்தினருக்கான மருத்துவ பராமரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. இங்கு எச்ஐவி தொடர்பான சிகிச்சை, நோய் கண்டறிதல், ஆலோசனை போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது.
கடந்த இருபதாண்டுகளாக எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ஆதரவளித்து வரும் மும்பையைச் சேர்ந்த ஹம்சஃபர் ட்ரஸ்ட் சமீபத்தில் இவர்களுக்கான சுகாதார பராமரிப்பு மையம் ஒன்றைத் துவங்கியுள்ளது. இந்த மருத்துவமனை எச்ஐவி மற்றும் இதர நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சிகிச்சை அளிப்பதிலும் கவனம் செலுத்த உள்ளது.
இந்த மையம் இந்தியாவிலேயே எல்ஜிபிடி சமூகத்தினருக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட முதல் முழுமையான கிளினிக் ஆகும். இங்கு நோயாளிகளை வேறுபடுத்திப் பார்க்கதவாறும் தனிமையான உணர்வை ஏற்படுத்தாதவாறும் நட்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வரவேற்பாளர்கள், மருந்து வழங்குபவர்கள், ஆலோசகர்கள் போன்ற பொறுப்புகளில் எல்ஜிபிடி சமூகத்தினரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்சஃபர் ட்ரஸ்ட் சிஇஓ விவேக் ஆனந்த் ’தி கார்டியன்’ உடன் உரையாடுகையில் முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் எல்ஜிபிடி சமூகத்தினர் சந்திக்கும் சிக்கல்களைக் குறிப்பிட்டார்.
”இந்தியாவில் பொது சுகாதார பராமரிப்பு மையங்களில் திருநங்கை சமூகத்தினர் நுழையமுடியாத நாட்கள் இருந்தன. செக்யூரிட்டி அவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்,” என்றார்.
இந்தியாவில் சுமார் 2.1 மில்லியன் பேருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது. எல்ஜிபிடி சமூகத்தினருக்கு எச்ஐவி சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுவதில்லை. எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்த 59 சதவீதம் பேர் எச்ஐவி பரிசோதனைக்கு அனுப்பப்படுவதாகவும் இதில் 67 சதவீதம் பேருக்கு ஏ.ஆர்.டி எனப்படும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி குறித்த ஆலோசனை வழங்கப்படுவதில்லை என்றும் இந்தியாவில் திருநங்கைகள் ஆரோக்கியம் குறித்து லேன்செட் மருத்துவ இதழின் 2016-ம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
எச்ஐவி நோய்க்கான சிகிச்சை முறையில் ஏ.ஆர்.டி-யின் முக்கியத்துவம் குறித்து ஹம்சஃபர் ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் அசோக் ரோ கவி ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடனான உரையாடலில் தெரிவிக்கையில்,
”எங்களது மையத்தில் சமூக உறுப்பினர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். சோதனை முடிவுகள் பாசிடிவ் எனில் அவர்களை Sion மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துவோம். ஆனால் அதிகம் பேர் அங்கு செல்வதில்லை. இந்த சமூகம் குறித்த வெளியுலகத்தின் கண்ணோட்டம் மோசமாக இருப்பதால் பலர் சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை,” என்றார்.
பரிசோதனைக்கு முன்பான ஆலோசனை, நோய் கண்டறிதல், சமூகத்தில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு சிகிச்சை போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாக இந்த க்ளினிக் விளங்குவதாக கவி பகிர்ந்துகொண்டார்.
சமூகம் சார்ந்த குழுக்களின் தலையீட்டினால் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எச்ஐவி பாதிக்கப்பட்ட எல்ஜிபிடி நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, என்கிறார் மும்பை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகலா ஆச்சாரியா.
கட்டுரை : THINK CHANGE INDIA