12 ஆண்டு கால போராட்டம் - இந்த கேரள கிராமத்திற்கு 'கதகளி கிராமம்' என பெயர் கிடைத்த கதை!
கேரளாவில் உள்ள அயிரூர் எனும் கிராம மக்கள் 12 ஆண்டுகளாக போராடி, கிராமத்தின் பெயரை கதகளி என மாற்றம் செய்துள்ளனர். எதற்காக இந்த பெயர் மாற்றம்?
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பதனம்திட்டா என்ற பகுதியில் அமைந்திருக்கிறது அயிரூர் கிராமம். ஆனால், இனி அக்கிராமத்தினை அயிரூர் என்று மக்கள் அழைக்க போவதில்லை. ஆம், 12 ஆண்டுகளாக போராடி, கிராமத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளனர் அக்கிராம மக்கள். கிராமத்தின் புதிய பெயரோ 'அயிரூர் கதகளி கிராமம்..'
கதகளி கலைக்கென நீண்ட வரலாறைத் தாங்கி நிற்கும் கிராமம், அதன் பெயரிலும் கலை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் இப்பெயர் பெற்றுள்ளது.
மலையாளத்தில் ’களி’ என்றால் ’நாடகம்’ மற்றும் 'கதா' என்றால் 'கதை' என்று பொருள். அதன்படி, கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்பதே 'கதகளி' என்ற சொல்லுக்கான அர்த்தமாகும். இதை ஆட்டக்கதை என்றும் அழைக்கின்றனர்.
நடன- நாடக வடிவத்தில் இந்து இதிகாசங்களில் வரும் கதைகளை அரங்கேற்றுவதே கதகளியாகும். பெரும்பாலான கதைகள் தீமையை அழித்து நன்மைக்கு கிடைக்கும் வெற்றி; காதல், நட்பு மற்றும் பக்தியை மையமாகக் கொண்டுள்ளது. அயிரூர் கிராமத்தில் சிறப்பு என்னவெனில், கிறிஸ்துவ மதத்தினரது கதைகளையும் கதகளி கலையின் மூலம் அரங்கேற்றுகின்றன. வகுப்புவாத சேர்க்கைக்கு கலை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதொரு அழகான சான்றாகும்.
அயிரூர் கிராமம்
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது அயிரூர். புராணங்களின் படி, அய்யா (அய்யப்பன் எனப் பொருள்) + ஊர் என்பதன் மூலம் அதன் பெயர் ’அயிரூர்’ எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கிராமத்தில் உள்ள பள்ளிகளிலே பாரம்பரிய கதகளி நடனம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. செருத்துருத்தி எனும் பகுதியில் உள்ள கேரள கலாமண்டலம், ஆண்டுத்தோறும் பல இளைஞர்களை கதகளி நடனக் கலைஞர்களாகவும், பாடகர்களாகவும், மேக்கப் கலைஞர்களாகவும் மாற்றி வருகிறது. 3,000 பேர் மக்கள்தொகையாகக் கொண்ட கிராமத்தில், சுமார் 70% பேர் ஏதோ ஒரு வகையில் கதகளியுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
கதகளியின் மீது கிராம மக்களுக்கு இருந்த ஆர்வத்தினால் ஊக்கமாகிய அக்கிராமத்தைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவர், 1987ம் ஆண்டு கதகளி பாராட்டு மன்றத்தைத் தொடங்கியுள்ளார். 1995ம் ஆண்டு முதல் இம்மன்றம் மாவட்ட கதகளி கிளப் ஆக செயல்படத் தொடங்கியுள்ளது. கிராமத்திலுள்ள பள்ளிகளில் இலவசமாக கதகளி நடனத்தின் முக்கிய அசைவுகள், முத்திரைகள் மற்றும் ஒப்பனைகளை கற்றுக் கொடுத்து, மாநிலம் முழுவதும் கதகளியை பிரபலப்படுத்துவதில் கிளப் முக்கியப் பங்காற்றி வருகிறது.
"புகழ்பெற்ற குரு செங்கனூர் ராமன் பிள்ளையின் பல சீடர்களைக் கொண்ட இந்த கிராமம் கதகளியின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கற்றுக் கொள்வதற்கு கதகளி கடினமான ஒரு கலை வடிவமாகும். தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளைக் கண்டும், திருவிழாக்கள் மூலமும் கதைகளைக் கற்று, புரிந்து கொள்வதன் வழியாக மக்களை கதகளி கலையினை எளிதாக அணுக வைக்க முயற்சித்து வருகிறோம்," என்றார் ராஜ்.
கிளப்பின் முயற்சியால் கதகளி பிரபலமடையவே, அயிரூரிலிருந்து உருவாகும் கதகளி கலைஞர்களின் எண்ணிக்கையும் பெருக்கெடுத்தது. பம்பாவின் நதிக்கரையில் ஒரு வாரகால கதகளி திருவிழாவினை கிளப் நடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் திருவிழாவினை காண 15,000 மக்கள் குவிகின்றனர். வழக்கமாக இரவில் நடத்தப்படும் கதகளிக்கு மாற்றாக பகல் கதகளியினை நடத்துவதால், மாவட்டத்தின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் வருகை புரிகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு இந்த கிளப் கிராம பஞ்சாயத்தின் மூலமாக, அயிரூர் கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய விண்ணப்பித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பஞ்சாயத்து தலைவர் அம்பிலி பிரபாகரன் நாயர் தெரிவித்தார். இருப்பினும், அவர்களது கோரிக்கை நிறைவேற 12 ஆண்டுகள் காத்துக்கிடந்துள்ளனர். மாநில, மத்திய அரசின் ஒப்புதல்கள், உளவுத்துறை அதிகாரிகளின் சோதனைகள் என பல கட்டங்களை இவர்கள் கடக்க வேண்டியதாக இருந்துள்ளது.
"கிராமத்தின் பெயரை மாற்றம் செய்வதால் சமூக ரீதியாகவோ அல்லது சாதிய ரீதியாகவோ எவ்வித பிரச்னைகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் கவனமாக கையாண்டனர். ஆனால், எங்களது கிராமத்தில் அப்படியான பிரச்னைகள் ஏற்படவில்லை. ஏன், கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தான் அதிக ஆதரவு கிடைத்தது. கதகளி கலையை ஊக்குவிக்கும் பொருட்டு கிளப்பிற்கு பொருளாதார ரீதியாக அவர்கள் அதிகம் உதவியுள்ளனர். அதுமட்டுமின்றி, கதகளி நிகழ்ச்சிகளை காண அதிக அளவில் அவர்கள் கூடுவார்கள்," எனும் ராஜ்,
கிட்டதட்ட 200 ஆண்டுகள் பழமையான கதகளியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கிராமத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டதாக கூறுகிறார்.
மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கதகளி கலையினை அடுத்த சந்ததியினருக்கு கடத்தி, கலையை வளரச் செய்வதில் அயிரூரின் பங்கு இன்றியமையாததாக இருப்பதை கவனத்தில் கொண்ட மாநில மற்றும் மத்திய அரசுகள் கிராமத்தின் பெயரை மாற்றும் கோரிக்கையை பரிசீலித்து, கிராமத்தின் பெயரை, 'அயிரூர் கதகளி கிராமம்' என்று மாற்றம் செய்து கிராம மக்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.
"சுற்றுலா அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள 'கிரேட் டெஸ்டினேஷன்'-ன் ஒரு பகுதியாக இந்த கிராமம் அடங்கும். இதன் கீழ் முதலில் கதகளி கிளப் வழங்கிய நிலத்தில் கதகளி அருங்காட்சியகம் அமைக்கவுள்ளோம். மூடப்பட்ட ஒரு பிரைமரிப் பள்ளியை புதுப்பித்து, கதகளிக்காக ஒரு தெக்கன் கலாமண்டலம் திறக்கும் திட்டமும் உள்ளது" என்றுக் கூறி முடித்தார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஜெயஸ்ரீ
FarmersFZ | ஐ.நா. திட்டத்தில் தேர்வாகி நாட்டுக்குப் பெருமை சேர்த்த கேரள அக்ரி-டெக் நிறுவனம்!