333.2 கிலோ வரலாற்றுக் கல்லை தூக்கி சாதனை - ஸ்காட்லான்டடில் சென்னை இளைஞர் அசத்தல்!
டின்னி ஸ்டோன்ஸ் என்பது 332.5கிலோ எடைக் கொண்ட ஒரு ஜோடி கற்பாறைகளாகும். நீண்ட நெடிய வரலாற்றை சுமந்து கிடக்கும், அக்கல்லை துாக்கி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் அஷ்ரஃப். உடற்பயிற்சி ஆலோசகரான அவர் தான், டொனால்ட் டின்னி போட்டிக்கு தகுதி பெற்று டின்னி ஸ்டோன்ஸை துாக்கிய முதல் இந்திய நபர்!.
இளவட்டக்கல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!. 100 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தோள்பட்டைக்கு மேல் துாக்குவது பல ஆண்டுகளாக உள்ள ஒரு பழக்கம்.
தமிழகம் மட்டுமல்ல உலகமெங்குமே கல்துாக்குதல் பழக்கம் உள்ளது. அதிலும், ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளில் நுாற்றாண்டுகால பழமையான கற்பாறைகளை பாதுகாத்து அதற்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன. அதுபோன்றதொரு கல் தான் 'டின்னி ஸ்டோன்ஸ்'.
டின்னி ஸ்டோன்ஸ் என்பது 332.5 கிலோ எடைக் கொண்ட ஒரு ஜோடி கற்பாறைகளாகும். நீண்ட நெடிய வரலாற்றை சுமந்து கிடக்கும், அக்கல்லை துாக்கி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் அஷ்ரஃப்.
உடற்பயிற்சி ஆலோசகரான அவர் தான், டொனால்ட் டின்னி போட்டிக்கு தகுதி பெற்று டின்னி ஸ்டோன்ஸை துாக்கிய முதல் இந்திய நபர்!
அதென்ன டின்னி ஸ்டோன்ஸ்!
டின்னி ஸ்டோன்ஸ் என்பது 188 கிலோ பெரிய கல் மற்றும் 145.2 கிலோ எடையுள்ள சிறிய கல் என மொத்தம் 333.2 கிலோ எடை கொண்ட ஒரு ஜோடி கிரானைட் கற்கள். இரும்பு வளையங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இக்கற்கள் ஸ்காட்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 19 வரலாற்று கற்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஹைலேண்டர் கேம்களின் நிறுவனர் மற்றும் பழம்பெரும் வலிமையானவராகவும், 'பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தடகள வீரராக' கருதப்படும் டொனால்ட் டின்னியைக் கொண்டாடும் வகையில், டொனால்ட் டின்னி தினம் கொண்டாடப்படுகிறது.
அந்நாளைக் கொண்டாட, உடல் வலிமையைக் காட்டும் வகையில் டின்னிஸ்டோன்சை துாக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த போட்டியில் அஷ்ரஃப் கலந்து கொண்டு வெற்றிகரமாக கற்களை துாக்கி வரலாற்றில் பெயரைப் பதிவு செய்துள்ளார். ஆம், எவரெஸ்ட் மலையில் ஏறியவர்களின் எண்ணிக்கையைவிட டின்னி ஸ்டோன்சை துாக்கியவர்களின் எண்ணிக்கைக் குறைவு என்று மெய்சிலிர்த்து பகிரத் தொடங்கினார் அவர்.
"கல்துாக்குதல் பலத்தை நிரூபிப்பது மட்டுமல்ல. டொனால்ட் டின்னி துாக்கிய கற்களை நானும் துாக்கியுள்ளனே் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 260 உறுப்பினர்கள் மட்டுமே அவற்றை தூக்கியிருக்கிறார்கள். அதில் 254வது நபராக நான் அக்கற்களை துாக்கியுள்ளேன். எவரெஸ்ட் சிகரத்திலே இந்தக் கற்களைத் தூக்கியவர்களை விட அதிகமானோர் ஏறியுள்ளனர்," என்றார்.
பாறைக் கற்களை தேடி ஆறு, மலைகளுக்கு பயணம்...
பள்ளிக் காலத்தில் தடகளம் மற்றும் கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ள அஷ்ரஃப், கபடி போட்டியில் விளையாடுகையில் எதிர்பாராதவிதமாக நடுவர்கள் அமரும் மேசையின்மீது விழுந்துள்ளார். அதில் ஏற்பட்ட காயம் நாள்பட்டவலியை கொடுத்து, விளையாட்டு வீரர் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியிட்டது.
மோசமான முதுகுவலி மற்றும் சியாட்டிகா வலிக்கு ஆளாகி கிட்டத்தட்ட படுக்கையில் இருந்துள்ளார். உடல் எடையும் அதிகரித்த நிலையில், நாள்பட்ட வலியிலிருந்து விடுபட உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அங்கு தொடங்கிய பயணம் உடற்பயிற்சியாளராக்கியதுடன் கல்துாக்குதல் போட்டியிலும் பங்கேற்க வைத்துள்ளது.
"நான் பயிற்சி செய்துவந்த ஜிம்மில் ஓரமாய் ஒரு கல் ரொம்ப நாளாய் அதே இடத்திலே இருந்தது. நகற்றி கூட யாரும் வைத்ததில்லை. திடீர்னு ஒரு நாள் அந்த கல்லை துாக்கலாம்னு தோணி துாக்கினேன். ப்ரெண்ட்ஸ் கூச்சல்கள், கிண்டல்கள் மத்தியில் கல்லை துாக்கியது செம ஃபன்னாக இருந்தது. அந்த ஃபீல் ரொம்ப பிடிச்சு போயி, மலைகளுக்கும், ஆறுகளுக்கும் சென்று அங்கு கிடக்கும் பெரிய பெரிய கற்களை துாக்குவதே வீக்கெண்ட் ஹாபியாக மாறியது, என்கிறார்.
ஆனால், அதுநாள் வரை கல்துாக்கும் போட்டிகள் நடந்துவருவது பற்றியெல்லாம் தெரியாது. அந்த சமயத்தில் டொனால்ட் டின்னி மற்றும் டின்னி ஸ்டோன்ஸ் பற்றிய டாக்குமென்டரி படம் பார்த்தேன். அப்போதே ஸ்காட்லாந்து சென்று அந்த கல்லை துாக்கணும்னு ஆசை வந்திருச்சு, என்று டின்னி ஸ்டோன்ஸ் பற்றி அறிந்த கதை பகிர்ந்தார் அஷ்ரஃப்.
டின்னி ஸ்டோன்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கினார் அஷ்ரஃப். ஸ்காட்லாந்தில் உள்ள டிரைனர்களிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்றார். டின்னி ஸ்டோன்சை துாக்குவதற்கு ஏதுவாக அதில் இரும்பு வளையம் பொறுத்தப்பட்டிருக்கும். அதுபோன்றதொரு இரும்பு வளையத்தைத் தேடிய அஷ்ரஃபிற்கு, அது கிட்டவில்லை. பின், அவரே அதை வடிவமைத்து தயாரித்துள்ளார். இன்று, அதுவே அவரது தொழிலாகியுள்ளது. ஆம், இந்தியாவில் கிடைக்காத உடற்பயிற்சி உபகரணங்களை வடிவமைத்து தயாரித்து அளிக்கிறார் அஷ்ரஃப்..
"டின்னி ஸ்டோன்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு, 300கிலோ எடையை துாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். திரிசூல மலை, பாலாறு ஆற்றங்கரை போன்ற மலை, ஆறுப் பகுதிகளுக்கு சென்று பாறைக்கற்களை துாக்கி பயிற்சி எடுப்பேன். எங்கும் செல்லவில்லை என்றால், வீட்டிலிருக்கும் பைக்கை துாக்கி பயிற்சி எடுத்து கொள்வேன்,'' என்றார் அஷ்ரஃப்.
டின்னி ஸ்டோன்சை துாக்கிய முதல் இந்தியர்!
பல மாத பயிற்சிகளுக்கு பிறகு டின்னி ஸ்டோன்சை துாக்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்து பறந்துள்ளார் அஷ்ரஃப். அவரது நீண்ட நாள் கனவும் நிறைவேறியது.
"டின்னி ஸ்டோன்ஸ் இரண்டும் வெவ்வேறு எடைக் கொண்டவை. அவற்றை என் கையால் தொட்டத் தருணங்கள் காலத்திற்கும் நினைவிலிருக்கும். டொனால்ட் டின்னி கரங்கள் பற்றிய கற்களை நானும் துாக்கியுள்ளேன் என்ற உணர்வே விவரிக்க இயலாது.
”டின்னி ஸ்டோன்சை துாக்கிய பிறகு, ஸ்காட்லாந்தின் வெவ்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் மற்ற வரலாற்று கற்களையும் துாக்கினேன். அதுபோல், 118 கிலோ எடையுள்ள 'இன்வர்' ஸ்டோனையும், 125 கிலோவுடைய 'மில் ஷோர்' ஸ்டோனையும், 110 கிலோ மற்றும் 58 கிலோ எடைக் கொண்ட 'புல்லர்ஸ் ஆஃப் புக்கான்' ஸ்டோனையும் தூக்கினேன்..." என்று பெருமிதத்துடன் கூறினார் அஷ்ரஃப்.
டின்னி ஸ்டோன்ஸ் போன்று தமிழகத்தில் வரலாற்றுமிக்க கற்பாறைகள் இல்லை என்றாலும், பாரம்பரியமிக்க இளவட்டக்கல் துாக்கும் பழக்கம் இன்னமும் கிராமப்பகுதிகளில் உள்ளது. இளவட்டக்கல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு, கல் துாக்குதலை பிரபலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் வொர்க் ஷாப்களை நடத்த திட்டமிட்டுள்ளார் இந்த ஸ்ட்ராங்கான இளைஞர்.
‘எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்' - தன் சிறுவயது கனவை முத்தமிழ்ச்செல்வி நினைவாக்கியது எப்படி?