முதல் ‘மேட் இன் இந்தியா’ கொரோனா டெஸ்ட் கிட் உருவாக்கிய புனே நிறுவனம்!
Mylab Discovery Solutions உருவாக்கியுள்ள இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கோவிட்-19 சோதனைக் கருவிக்கு, அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இந்தியா, கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், குறைவான பரிசோதனை வசதிகள் மற்றும் விலை மிகுந்த பரிசோதனை சாதனங்கள் ஆகியவை அதிகாரிகளுக்குக் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், புனேவைச்சேர்ந்த மூலக்கூறு நோய்க்கூறு ஆய்வு நிறுவனமான மைலேப் டிஸ்கவரி சொல்யுஷன்ஸ் (Mylab Discovery Solutions Pvt Ltd) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கோவிட்-19 சோதனைக்கான சாதனத்தை, ஆறு வார காலத்தில் உருவாக்கியுள்ளது.
இந்திய எப்டிஏ/ மத்திய மருந்து கட்டுப்பாடு தர அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) முதல் வர்த்தக அங்கீகாரம் பெற்ற இந்த பரிசோதனைக் கருவி, ‘மைலேப் பேத்தோடிடெக்ட் கோவிட்-19 குவாலிடேட்டிப் பிசிஆர் கிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாக நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“மேட் இன் இந்தியா மீதான ஈடுபாடு, மாநில மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் இந்த பரிசோதனைக் கருவி, உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைக்கு ஏற்ப சாதனை நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ஹஸ்முக் ரவால் (Hasmukh Rawal) கூறியுள்ளார்.
சிடிஎஸ்.சிஓ/எப்டிஏ உள்ளிட்ட கட்டுப்பாடு அமைப்புகளின் ஆதர்வௌ, ஐசிஎம்.ஆர், என்ஐவி, உயிரிதொழில்நுட்ப தொழில் ஆய்வு சங்க கவுன்சில் (பிஐஆர்ஏசி) ஆகிய அமைப்புகளின் மதிப்பீடு மற்றும் மாநில, மத்திய அரசிகளின் ஆதரவு சிறப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மைலேப், மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் தயாரிப்பு நீண்ட அனுபவமிக்க நிறுவனமாக விளங்குகிறது. பல்வேறு வகையான பரிசோதனைக் கருவிகளை தயாரிப்பதற்கான அனுமதி பெற்றுள்ளது.
தற்போது மைலேப் தயாரித்துள்ள கோவிட்-19 சோதனைக் கருவி, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலால் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
“குறைந்த செலவில் நவீன சோதனைக் கருவியை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்தோம். இந்த கருவி, அதி நுட்ப பிசிஆர் நுட்பம் கொண்டிருப்பதால், ஆரம்ப நிலை தொற்றைக் கூட கண்டறியும். இது ஐசிஎம்.ஆர் சோதனையின் போது தெரிய வந்துள்ளது,” என்று மைலேப் செயல் இயக்குனர் ஷைலேந்திர கவாடே கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனையில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. தென்கொரியா மற்றும் சிங்கப்பூரில் அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா தற்போது, சோதனைக் கருவிகளை ஜெர்மனியில் இருந்து தருவித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சோதனைக் கருவி மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
வாரம் ஒரு லட்சம் சோதனைக் கருவிகளைத் தயாரிக்க முடியும் என்றும், ஒரு கருவியில் 100 நோயாளிகளை சோதிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த நேரத்தில் கிருமிகளைக் கண்டறிய முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்