அரசின் பயிற்சி வகுப்புகளில் படித்தே ஜேஇஇ தேர்வில் வெற்றி - திருச்சி NIT-யில் இடம்பெற்ற பழங்குடியின மாணவிகள்!
பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் 2024ம் வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ரிலாக்ஸ் பாயின்ட் என்றால் மலைப்பகுதிகள் நியாபகத்திற்கு வரும். வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் போக்குவரத்து கிடையாது, ஒருவரின் மூச்சுக்காற்றை இன்னொருவர் சுவாசிக்கும் ஜன நெருக்கடியும் கிடையாது, தொழில்நுட்பத்தின் வாசனை கூட அவ்வளவாக இருக்காது. ரிமோட் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நகரத்துவாசிகளுக்கு ஒருவாரம் மட்டுமே இந்தச் சூழல் இனிக்கும்.
நாமெல்லாம் எப்போதாவது அனுபவிக்கும் இடம் தான் பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்க்கை. மருத்துவ அவசரத்திற்கு பொது போக்குவரத்து கிடையாது, அடிப்படை கழிப்பறை வசதிகள் கிடையாது, படிப்பதற்குத் தான் தேவை என்றாலும் இணையதள வசதி இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி கல்வி என்னும் ஆயுதத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா.
இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புக்களை பொறுத்தவரை ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் கோச்சிங் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகள் தாமாகமுன் வந்து இந்த வகையான பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன.
பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் 2024ம் வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
படிப்பில் ஆர்வம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை கிராமத்தை ஒட்டியுள்ளது சின்ன இலுப்பூர். மலையை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பழங்குடியினர் அதிகம் உள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான மதியழகன், வசந்தி தம்பதியின் மூன்றாவது மகள் ரோகிணி.
சிறு வயது முதலே படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தவர், தங்கள் கிராமத்திலேயே இருந்த அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார். கட்டுமான வேலைக்காக பெற்றோர் கேரளாவிற்குச் சென்றுவிட்ட நிலையில், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ரோகிணி, விவசாயக் கூலி வேலை மற்றும் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தானே சமைத்து வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று படித்து வந்துள்ளார்.
பொதுத்தேர்வுகளுக்கு ரோகிணி தயாராகும் முறையைப் பார்த்து அவரை போட்டித் தேர்வுக்கு தயாராகுமாறு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி
நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எப்படித் தயாராவது என்று ஆசிரியர்கள் வழிகாட்டியதன் பேரில், அதற்கு ஏற்ப படித்து ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 73.8% மதிப்பெண்கள் பெற்று 29 பழங்குடியின பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் ரோகிணி.
கல்விக்கு வறுமை தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கும் ரோகிணிக்கு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்ப கழகம் என்னும் NITயில் வேதிப் பொறியியல் படிக்க இடம் கிடைத்துள்ளது.
“எங்கள் பகுதியில் தடையில்லா மின்சார வசதி இல்லை, அடிக்கடி மின்வெட்டு இருக்கும், செல்போனிலும் டவர் இருக்காது. டார்ச் லைட் வெளிச்சம், தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் நான் படித்தேன்," என்றார்.
போட்டித்தேர்வுக்கு ஏற்ற application முறையிலான கேள்விகளை படிக்க எனக்கு பிடிக்கும். அதைப் பார்த்து ஆசிரியர்கள் என்னை நுழைவுத் தேர்வுகள் எழுத ஊக்கம் தந்தனர். வார இறுதி நாட்களில் அரசு கொடுக்கும் பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் படித்தேன்.
“எங்கள் ஊருக்கு ஒரு நாளைக்கு 5 முறை மட்டுமே பஸ் வரும். தேர்வு எழுதப் போகும் போது பஸ் கூட கிடைக்காத நிலையில் தான் தேர்வெழுதச் சென்றேன். ஜேஇஇ தேர்வில் 73.8% மதிபெண் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வெற்றிக்காக நல்வழிகாட்டிய ஆசிரியர்கள், பழங்குடியின நல்வாழ்வு திட்ட இயக்குனர் உள்ளிட்டோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.“
இயற்பியல், கணிதப் பாடங்கள் எனக்குப் பிடிக்கும், அதனால் அவற்றை முதலில் படித்து முடித்துவிட்டு அதன் பின்னர் எனக்குக் கடினமாக வேதியியல் பாடத்தைப் படிப்பேன். பாடப்புத்தகங்களை மட்டுமே நன்றாக படித்து தேர்வுக்குத் தயாரானேன். திருச்சி என்ஐடியில் வேதியியல் ஆய்வுக் கூடத்தை பார்த்தபின்னர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் வேதியியல் பொறியாளராக படிக்க விரும்பி அந்தப் பாடத்தை தேர்வு செய்திருக்கிறேன்.
“எனக்கான 4 ஆண்டு முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. என்னைப் போன்று நன்றாக படிக்கும் பல பழங்குடியின மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, நூலகம், போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களாலும் சாதிக்க முடியும்,” என்று கூறியுள்ளார் ரோகிணி.
ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தன் மூலம் எங்களை தலை நிமிர வைத்துள்ளார் ரோகிணி என்று அவருடைய உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மண்தரையிலும் மரத்தடியிலும் உட்கார்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரோகிணி படித்தார். எங்களுடன் வந்து வயல்வெளி வேலை, வீட்டு வேலை என அனைத்தையும் செய்து கொடுப்பார் எனினும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.
“இவரைப் போன்ற திறமையான மாணவர்கள் பலர் உள்ளனர் அதிநவீன வசதிகளுடன் பயிற்சி மையங்களை எங்கள் பகுதிகளில் திறந்து அவர்களுக்கும் பயிற்சி அளித்தால் அந்த மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தோடு எங்கள் மலைக்கிராமமும் முன்னேற்றம் அடையும்," என்கிறார் ரோகிணியின் உறவினர்.
நடந்தே சென்று படிப்பு
சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலையை ஒட்டியுள்ள வேலம்பட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் Production Engineering படிக்க இடம் பெற்றுள்ளார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுகன்யா, தன்னுடைய பெரியம்மா அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
வேலம்பட்டில் இருந்து கரியக்கோவிலுக்கு தினமும் 3 கிலோமீட்டர் நடந்தே சென்று அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்துள்ளார் சுகன்யா. கூரை வீட்டில் இருந்து படித்து சாதித்து உயர்கல்வியை சிறப்புமிக்க என்ஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இவர்.
“என்னுடைய அண்ணன் 12ம் வகுப்பு படித்துவிட்டு ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் உயர்கல்வியை தொடர முடியவில்லை, எனக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சினேன். பழங்குடியின நலத்துறை அதிகாரிகளை சந்தித்து என்னுடைய அச்சத்தை தெரிவித்தன் பேரில் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து எனக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழை அளித்தனர். அதனால் என்னால் என்னுடைய படிப்பை தொடர முடிந்தது.
தினமும் இரவு 12 மணி வரையிலும் காலை 4 மணிக்கே எழுந்தும் படிப்பேன். ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும், அரசின் பயிற்சி வகுப்புகளாலும் என்னால் வெற்றி பெற முடிந்தது. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறி உள்ள சுகன்யா, எங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழை தாமதமின்றி வழங்கினால் அவர்களாலும் வெற்றி பெற முடியும்,” என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் சுகன்யா.
60 ஆண்டு என்ஐடி வரலாற்றில் அங்கு சேர்ந்து உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை விடாமுயற்சியின் மூலம் அடைந்து காட்டியுள்ளனர் இந்த பழங்குடியின மாணவிகள். பழங்குடியின அரசு உண்டு, உறைவிடப் பள்ளியில் படித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சியை மட்டும் வைத்தே வெற்றி பெற்றுள்ள மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யா அவர்கள் இனத்தின் பெருமைமிகு அடையாளமாகி அனைவரையும் தலைநிமிரச் செய்துள்ளனர்.
இந்த மாணவிகளுக்கும், அரசின் ஊக்கத்திற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யாவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப் - நீட் தேர்வு மூலம் டாக்டர் கனவை நனவாக்கிய தர்மபுரி கான்ஸ்டபிள்!