கொரோனா வைரஸ் சோதனை கருவியை உருவாக்கியுள்ள சென்னை நிறுவனம்!
சென்னையைச்சேர்ந்த ட்ரிவிட்ரான் நிறுவனம், கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக்கான பிசிஆர் உபகரணத்தை உருவாக்கி, அதன் அனுமதிக்காக காத்திருக்கிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்தில் அரசு அமைப்புகளுக்கு உதவுவதற்கான சேவைகளை உருவாக்கித்தரும் முயற்சியில் பல நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் ஈடுபட்டுள்ளன.
இத்தகைய நிறுவனங்களில் ஒன்றான, சென்னையைச்சேர்ந்த ‘ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்’ (Trivitron Healthcare) கோவிட் -19 வைரஸ் பரிசோதனைக்கான பிசிஆர் உபகரணத்தை உருவாக்கி இருக்கிறது.
பிசிஆர் என குறிப்பிடப்படும் பாலிமெரேசே சைன் ரியாக்ஷன் என்பது, பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை அல்லது மூக்கில் இருந்து மருத்துவப் பரிசோதகர் மாதிரியை சேகரிப்பதை குறிக்கிறது.
நாள் ஒன்றுக்கு 100 மாதிரிகளை சோதிக்கக் கூடிய இந்த உபகரணத்தை, அனுமதிக்காக, புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் அப் வைராலஜி (என்.ஐ.வி) அமைப்பிடம் ட்ரிவிட்ரான் நிறுவனம் சமர்ப்பிக்க திட்டமிட்டிருப்பதால் இந்த கருவி சந்தைக்கு வர இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம்.
இந்நிறுவனம், கடந்த ஒரு மாதமாக இந்த உபகரணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும். இந்த ஆய்வு மற்றும் உருவாக்கத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு, பரிசோதனை உபகரணங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ட்ரிவிட்ரான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.ஜிஎஸ்கே.வேலு, தனது நிறுவனம் உருவாக்கியுள்ள உபகரணம், இறக்குமதி சாதனங்களை விட 50 சதவீதம் விலை குறைவானது என கூறுகிறார்.
மற்ற சாதனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த உபகரணம், மாதிரிகளை சோதிக்க 50 முதல் 70 சதவீதம் செலவு குறைந்தது என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.
மேலும் இந்த உபகரணங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்வதும் சாதகமானது என கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 400 முதல் 1,000 உபகரணங்களை தயாரிக்க முடியும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
என்.ஐ.வி அமைப்பின் அனுமதி கிடைத்தவுடன் அரசு தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ட்ரிவிட்ரான், பாயிண்ட் ஆப் கேர் பரிசோதனை சாதனத்தையும் உருவாக்கி வருகிறது. இரத்தத்தில் உள்ள நுண் அளவு ஆண்டிபாடிகளை இது கண்டறியும் திறன் கொண்டது.
ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தை, இந்திய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவத் தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் 1997ல் வேலு துவக்கினார். இப்போது நிறுவனம் 700 கோடி விற்றுமுதல் கொண்டதாக வளர்ந்துள்ளது.
ஆங்கிலத்தில்: அபூர்வா.பி | தமிழில்: சைபர்சிம்மன்