‘இன்சூரன்ஸ் இல்லாமல் விண்வெளி பயணம்' - ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் குறித்து வெளியான தகவல்!
பதிலளித்த மறுத்த நிறுவனங்கள்!
அமேசான் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகி இருக்கும் உலகின் பெரும் பணக்காரர் ஜெஃப் பெசோஸ் விரைவில் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று முதல் விண்வெளி பயணத்தை ஜெஃப் பெசோஸ் மேற்கொள்ள இருக்கிறார். அவரின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த நிறுவனத்தின் மனிதர்களை அனுப்பும் முதல் பயணத்தில்தான் பெசோஸ் பயணிக்க இருக்கிறார்.
முன்னதாக இது போன்ற ஒரு பயணத்தை பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பினார். விர்ஜின் கேலக்டிக் என்ற அவரின் சொந்த நிறுவனம் மூலம் ஒன்றரை மணி நேர சாதனை பயணத்தை முடித்தார் பிரான்சன். பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து இந்தப் பயணம் துவங்கியது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் விமானம் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்தது.
இதற்கிடையே, இந்தப் பயணத்தின் போது காயம் அல்லது இறப்புக்கு போடப்படும் எந்த காப்பீடையும் பிரான்சன் போடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஜெஃப் பெசோஸ் அடுத்து மேற்கொள்ள இருக்கும் பயணத்திற்கும் எந்தவொரு காப்பீடும் வாங்காமல் பயணிக்க இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காப்பீடு நிறுவனங்களின் அதிகாரிகள், தி நியூயார்க் டைம்ஸின் டீல்புக் செய்திக்கு தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காப்பீடு பெற்றதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை. மேலும், பெசோஸ் காப்பீட்டை வாங்கியதற்கான அறிகுறியும் இல்லை. யூனிட்டி விண்கலம் காப்பீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் பேட்டியளித்துள்ளனர். இந்தத் தகவல் தொடர்பான கேள்விக்கு பிரான்சன், விர்ஜின் கேலடிக் மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்கள் மறுத்துவிட்டன.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் வி.வி.எஸ் யூனிட்டி விண்கலம் விண்வெளியின் விளிம்பிற்கு - கடல் மட்டத்திலிருந்து 55 மைல் உயரத்தில் பயணித்து திரும்பியுள்ளது. இதேபோல், ப்ளூ ஆரிஜினின் ராக்கெட் கடல் மட்டத்திலிருந்து 62 மைல் உயரத்தில் பறந்து, கோர்மன் கோட்டைக் கடந்து, பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தான் எந்த காப்பீடும் அவர்கள் போடவில்லை. முன்னதாக, விர்ஜின் கேலடிக் முன்பு அனைத்து பயணிகளும் தங்கள் சொந்த பாதுகாப்புக்கு முழு பொறுப்பு என்பதை ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறியதாக இந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: Business insider | தமிழில்: மலையரசு