Youtube வெளியிட்ட 2019 டாப் 10: 6 இடங்களைப் பிடித்த தமிழ் யூடியூப் சேனல்கள்!
2019ம் ஆண்டுக்கு எண்ட் கார்ட் போடுள்ள நிலையில் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட பல வகையான டாப் 10 பட்டியலின், முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்தது தமிழ் யூடியூப் சேனல்கள். உங்களுக்கு பிடித்த யூடியூப் சேனல் எது?
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் யூடியூபில் வைரலான மற்றும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள், அதிக சப்ஸ்கிரைபர்களை குவித்த யூடியூப் சேனல்கள் குறித்த தொகுப்பை யூடியூப் அதனது சேனலில் வெளியிடும். அப்படி இந்தாண்டுக்கான வீடியோ 'YouTube Rewind 2019 & For the Record'என்ற பெயரில் வெளியாகியது.
2018ம் ஆண்டுக்கான டிரெண்டிங் பாடல்கள், பிரபலங்கள், சேனல்களை தொகுத்து யூடியூப் வெளியிட்டிருந்த வீடியோ, வெளியாகிய உடன் கண்டு களித்த யூடியூப் பார்வையாளர்கள் போகிற போக்கில் டிஸ்லைக் பட்டனை பஜக், பஜக் என்று அமுக்க அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாக மாறிப்போனது. அதனால், 2019ம் ஆண்டின் யூடியூப் ரீவைண்ட் வீடியோவை பார்த்து பார்த்து எடிட் செய்துள்ள யூடியூப் குழுவினர், வீடியோவின் தொடக்கதிலே
“2018ல் நீங்கள் விரும்பாத ஒன்றை நாங்கள் செய்துள்ளோம். ரீவைண்ட் 2019ல் நீங்கள் என்ன விரும்பியுள்ளீர்கள் என்று பார்க்கலாம்,” என்ற வார்த்தைகளுடனே தொடங்கியது. ஆனால், நம்மவர்கள் வீடியோ அப்லோடாகிய ஒரே நாளில் 2.5மில்லியன் டிஸ்லைக்குகளை செய்துள்ளனர்.
உலகின் சிறந்த பாடல் வீடியோக்கள், உலகின் சிறந்த யூடியூப் சேனல்கள், உலகின் டாப் டிரெண்டிங் வீடியோக்கள் என வேர்ல்ட் லெவல் லிஸ்ட்டை தொடர்ந்து, இந்தியாவில் ‘டாப் 10 டிரெண்டிங் வீடியோஸ்’, ‘யூடியூப் டாப் 10 டிரெண்டிங் மியூசிக் வீடியோஸ் இன் இந்தியா’, ‘சிறந்த 10 பிராந்திய மொழி யூடியூப் சேனல்கள்’, என பார்ட் பார்ட்டாக பிரித்து பட்டியலை வெளியிட்டிருந்தது யூடியூப் நிறுவனம். அதில்
டாப் 10 டிரெண்டிங் மியூசிக் வீடியோஸ் இன் இந்தியா பட்டியிலின் முதல் இடத்தை தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’ பாடல்வீடியோ இடம்பெற்றுள்ளது. அதே வீடியோ உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களின் பட்டியலில் 717மில்லியன் வியூஸ்களை கடந்து 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் டாப் டிரெண்டிங்கான வீடியோக்களின் பட்டியலில் 8வது இடத்தை ‘மேன்Vs வைல்ட்’-ல் பியர் கிரில்சுடன் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்ற எபிசோடின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோ பெற்றுள்ளது.
“120 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட ‘டீ-சீரிஸ்’ உலகளவில் அதிக சந்தாதாரர்களை கொண்ட சேனலாக உள்ளது. தவிர, முதன் முதலில் தனிநபர் இந்திய படைப்பாளியான ‘புவன் பாம்’ 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். 1மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட 1200 இந்திய யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் 120பேர் பெண் படைப்பாளிகள்.
தென்னந்திய மொழிகளாலான வீடியோக்கள் 2015ம் ஆண்டிலிருந்தே அதிகம் வலம்வரத் தொடங்கிவிட்டன. தமிழ் யூடியூப் சேனல்களை மட்டும் எடுத்துக் கொண்டால் 2019ம் ஆண்டில் மட்டும் 1மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட 95 சேனல்கள் உள்ளன. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 30-ஆக மட்டுமே இருந்தது,” என்றார் யூடியூப் பார்டனர்ஷிப்பின் இயக்குனர் சத்யா ராகவன்.
‘யூடியூப் செலிபிரிட்டிகள்’ என்ற அடையாளத்துடன் ‘இந்தியாவின் சிறந்த 10 பிராந்திய மொழி யூடியூப் சேனல்கள் பட்டியல்’-ல் இடம்பெற்ற யூடியூப் சேனல்களை பற்றிய குட்டி அறிமுகம் நிறைந்த தொகுப்பு இனி...
’கிராண்ட்பா கிச்சன்’ (6.53 மில்லியன்)
நாவிற்கு விருந்தளிக்கும் உணவினது செயல்முறைகளால் கண்களுக்கும் விருந்தளிக்க முடியும் என்று நம்பிக்கையுடன், பரந்து விரிந்திருக்கும் யூடியூப் உலகில் களமிறங்கி சாதித்துவருகிறது எண்ணற்ற யூடியூப் சேனல்கள். உணவு உணர்வுடன் தொடர்புடையதால், அதற்கு மொழியும் தடையாக அமையவில்லை. அப்படி, நாடு கடந்து வேற்று மொழியாளர்களும் கண்டு களித்ததில்,
‘கிராண்ட்பா கிச்சன்’ 6.53 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று, “சிறந்த பத்து பிராந்திய மொழி யூடியூப் படைப்பாளர்கள்’ பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த ‘கிராண்ட்பா கிச்சனின்’ கிங் நாராயண ரெட்டி. நெட்டிசன்களுக்கோ செல்லமான ‘யூடியூப் தாத்தா’.
வெட்ட வெளியில் வாலிப பசங்களுடன் இணைந்து தாத்தா, பெரிய அண்டா, குண்டாக்களில் முழு ஆடு வறுவல், முழு கோழி வறுவல் என அனைத்து ரெசிப்பிகளும், பந்தி வைக்கும் அளவுக்கு செய்வார். சமைத்த பின் அனாதை இல்லங்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறிவிடுவார்.
நாராயண ரெட்டி இந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி அவரது 73வது வயதில் காலமானார். இது உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் மற்றும் யூடியூப் சமூகத்தினருக்கு வேதனையை ஏற்படுத்தியது. இருப்பினும், அவரது குடும்பத்தினர் நாராயணரெட்டியின் நினைவாக பரந்த உணவுகளின் வீடியோக்களைப் பதிவேற்றி சேனலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். சமைத்த உணவினை குழந்தைகளுக்கு விநியோகிப்பதை சேவையாக செய்வதுடன் யூடியூப்பிலிருந்து கிடைக்கும் நிதியிலிருந்து குறிப்பிட்டத் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள்.
மைக் செட் (3.86 மில்லியன்)
பட்டியலின் இரண்டாவது இடத்தை காமெடியில் கலக்கும் தமிழ் யூடியூப் சேனலான ‘மைக் செட்’ இடம்பெற்றுள்ளது. யூடியூப் உலகில் கேலி, கலாய்களுக்கு பஞ்சமில்லை. அதில் எண்டர்டெயின்மென்ட்டை அவர்களது கோல் ஆக கொண்டு யூத்களின் ரசனைக்கேற்ற வகையில், ‘எக்சாம் சோதனைகள்’, ‘டிரிப் சோதனைகள்’, ‘லவ்வர் சோதனைகள்’ என ஒவ்வொரு நிகழ்வில் நடக்கும் சம்பவங்களை கிச்சு கிச்சு மூட்ட கலாய்கின்றனர். 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல், பாண்டிச்சேரி பாய்ஸால் இயக்கப்படுகிறது.
கரிக்கு (3.6 மில்லியன்)
கடவுளின் தேசத்தை சேர்ந்த சேட்டன்களின் ‘கரிக்கு’ யூடியூப் சேனல், லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மலையாளத்தில் கரிக்கு என்றால் இளநீர் என்று பொருள். 2016ல் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் சேனல் லைம்லைட்டுக்கு வந்தது ‘தேரா பேரா’ என்ற வெப் சீரிசின் வரவுக்கு பின்னரே.
ஆல் ஓவர் வேர்ல்டில் வசிக்கும் மில்லியன் கணக்கான மலையாளிகளது டாப் பேவரைட் வெப் சீரிஸ் இது. கடந்தாண்டு ஏப்ரலில் ஒளிப்பரப்பபட்ட ‘தேராபேரா’வின் ரசிகர்களே, கரிக்கு யூடியூப் சேனல் மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களை பெற்றதற்கான காரணகர்த்தாக்கள்.
சேனலின் பின்னுள்ள படைப்பு சக்தி நிகில் பிரசாத். பி.டெக் முடித்து விஜபி-களாக சுற்றி திரியும் 4 ரூம்மேட்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் அட்ராசிட்டிகளே தேராபேரா. 20 எபிசோடுகளை கடந்துள்ள வெப் சீரிசின் அடுத்த எபிசோடுக்காக தியேட்டர்களில் திரைப்படங்கள் ரீலிசாகுவதற்கு காத்துக்கிடப்பது போல், கரிக்கு யூடியூப் சேனலை அடிக்கடி எட்டிப் பார்த்து காத்துகிடக்கின்றனர் தேராபேராவின் ரசிகர்கள் பட்டாளம்.
வில்லேஜ் ஃபுட் பேக்டரி (3.37மில்லியன்)
உணவு சார்ந்த இந்த சேனலுக்கு இன்ட்ரோ தேவையில்லை. சமையல் செய்பவருக்கும் அறிமுகமும் தேவையில்லை. யெஸ், ஆல் ஓவர் இந்தியாவில் உள்ள ஃபுட்டிகளின் மனம் கவர்ந்த ‘டாடி ஆறுமுகம்’-ன் வில்லேஜ் ஃபுட் பேக்டரி தான் சிறந்த பிராந்திய மொழி யூடியூப் சேனல் பட்டியலில் 4வது இடத்தை பெற்றுள்ளது.
முழு ஆட்டினை குப்புற படுக்க வைத்து தோல் சுருங்கிய கைகளால் டாடி ஆறுமுகம் மாசலா தடுவுவதை காணுதல் ஒரு இன்பமென்றால், செய்முறையாக ‘ஒரு கை உப்பு போட்டுக்கணும்பா... கொஞ்சமா தண்ணி ஊத்திக்கணும்பா...’ என்று அவர் சொல்லிக் கொடுப்பது, நம் தாத்தா நம்மருகில் நின்று சினேகமாய் கற்றுக்கொடுக்கும் உணர்வினை கொடுக்கும்.
டாடி ஆறுமுகம் சமைத்த பின், வாஞ்சையோடு துண்டு எலும்பை பார்த்து அவர் கடிக்கும் ஸ்டைல், ராஜ்கிரணுக்கே டஃப் கொடுக்கும். அம்மிக்கல்லில் மசாலா அரைத்து சமைக்கப்படும் உணவின் வீடியோவை ஆப்பிரிக்காவில் வாழும் மனிதன் கண்டு களிப்படைவதால், டாடியின் சமையலுக்கு தேசம் தாண்டிய ரசிகர் பட்டாளம் உண்டு. விளைவாய் இப்போது அவரது சேனலுக்கு 3.37 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள்.
மதன் கௌரி (2.71 மில்லியன்)
26 வயதான மதுரை பய்யன் தனி ஒருவனாயிருந்து அவரது பெயரினாலே கையாளப்படும் யூடியூப் சேனல் ‘மதன் கௌரி’. அரசர் காலத்து வரலாறு தொடங்கி, சர்ச்சை நாயகர்களின் சரித்திரங்கள், அரசியல், அன்றாட பொது விஷயங்கள், ஆரோக்கியம், பேய், பிசாசு, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட விஷயங்கள் எந்தத் தலைப்பாக இருந்தாலும் அனைத்துத் தகவல்களையும் தெளிவான தமிழில் எளிமையாக விளக்கமளிக்கிறார்.
சூடான தலைப்புகளுக்கு ஏற்ப புகைப்படங்கள், வீடியோக்களுடன் விவரிக்க பெருவாரியான பார்வையாளர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். பொழுதொரு பிரச்னையுடன் நாளைத்தொடங்கும் மதனின் வாழ்க்கையை மாற்றியது பிரச்னைகளே!
பிளாக் ஷீப் (2.66 மில்லியன்)
பிளாக் ஷீப் பலவிதமான உள்ளடக்கங்களை வழங்கும் ஒரு ‘இன்ஃபோடெயின்மென்ட்’ சேனலாகும். ஸ்மைல் சேட்டை யூடியூப் குழுவில் இருந்த ஆங்கரிங், ஆக்டிங் என பிசியாக வலம் வரும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் போன்ற பிரபலமான முகங்களுடன் பயணித்துக் கொண்டுள்ளது பிளாக் ஷீப். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நெர்மையண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தை இந்த குழு உருவாக்கியது!
நகைச்சுவையும் நகைச்சுவை சார்ந்த கன்டென்ட்களால் கலக்கும் யூடியூப் சேனலின் பிரபல முகங்கள் பலரும் இப்போது வெள்ளித்திரையில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர். பிளாக் ஷீப்பின் வீடியோக்களில் சமூக உணர்வுள்ள செய்திகளும், வர்ணனையும் நகைச்சுவையான நையாண்டிகளுக்கும் பஞ்சமிருக்காது.
மதுரா’ஸ் ரெசிப்பி மராத்தி (2.51 மில்லியன்)
பட்டியில் முதல் ஆறு இடங்களை தென்னிந்திய கிரியேட்டர்களை ஆக்கிரமித்த நிலையில், 7வது இடத்தை பெற்றுள்ளது மராத்தி மொழியில் வீடியோக்களை வெளியிடும் ‘மதுரா’ஸ் ரெசிப்பி மராத்தி’ விதவிதமாய், ரகரகமாய், ருசிருசியாய் 650 ரெசிப்பிகளின் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இந்த பிறப்பு தான் நல்லா ருசித்த சாப்பிடக் கிடைத்ததால், யூடியூப் உலகில் சமையல் சேனல்களில் ராஜ்ஜியமே நிகழ்கிறது. குடும்பங்களை பிரிந்து ஹாஸ்டலிலும், வீடெடுத்து தங்கியும் வருபவர்களுக்கான வரபிரசாதம் மதுராஸ் ரெசிப்பி மராத்தி. எளிமையான பதார்த்தங்கள் மூலம் பேச்சுலர்களின் விருப்பப்பட்ட சேனலாக மாறிய மதுரா’ஸ் ரெசிப்பி மராத்தியின் வீடியோக்களை பார்த்த பிறகே, பலரது வீட்டரசிகள் அன்றாட மெனுவை வடிவமைத்து கொண்டிருக்கின்றனர்.
எம்4டெக் (2.4 மில்லியன்)
ஜியோ மற்றும் பிரவீன் ஜோசப் என்ற இரு வாலிபர்களால் பரந்து விரிந்த டெக் உலகில் வாரம் ஒருமுறை அறிமுகமாகும் புதிய சாதனம் பற்றியும், டெக் நியூஸ் மற்றும் டெக் டிப்ஸ்களும் வழங்கும் சேனலாகும். மார்கெட்டில் புதிதாய் வெளிவரும் சாதனங்களை வாங்கி, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கும் ‘அன்பாக்ஸிங்’ வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். இந்த சேனல் தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் 2.47மில்லியன் சந்தாதாரர்களை பெற்றது. எமர்ஜென்சி லைட், பார்டி லைட்டுகள், தற்காலிக படகுகள் மற்றும் மீன்பிடி சார்ந்த சாதனங்கள் ‘டிஐஒய்’ வழிமுறை வீடியோக்களை அப்லோடி வருகின்றது.
நக்லைட்ஸ் (2.2 மில்லியன்)
கோவை குசும்பர்களின் முயற்சியில் ‘அரசியல் பகடி’யை மையமாகக் கொண்டு கலக்கி வருகிறது ’நக்லைட்ஸ்’. அவர்களது வீடியோக்களில் நெட்டிசன்களின் டாப் பேவரைட் ‘அம்மா அலப்பறைகள்’. அதற்கான அச்சாணியை செயல்பட்டு கொங்கு தமிழ் பேச்சால் அதகளம் செய்வார் ‘நக்கலைட்ஸ் அம்மா’ தனம். அவர் நடிக்கும் அலப்பறை வீடியோக்கள் டிரெண்டாகமால் இருந்ததில்லை.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட சேனல், சரசரவென சிலபல மிரட்டல்களுடன் வேகமாக வளர்ந்து, இன்று ஷார்ட் பிலிம்ஸ், வெப் சீரிஸ், அலப்பறை சீரிஸ் என பல பரிணாமங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எருமசாணி (2.2 மில்லியன்)
விஸ்காம் படித்துக் கொண்டிருந்த காலேஜ் பசங்க, போகிற போக்கில் எதார்த்தமாய் தொடங்கப்பட்ட வீடியோ சேனலே ‘எரும சாணி’. லவ்வர்ஸ்கிடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை சம்பவங்களாக மாற்றி, யூத்களின் பல்சுக்கு ஏற்ற வீடியோக்களை அப்லோகி வருகின்றனர்.
பொறியியல் மாணவர்கள் Vs கலை மாணவர்கள், வில்லேஜ் லவ் Vs சிட்டி லவ், பாய்ஸ் Vs கேர்ள்ஸ், சிங்கிள்ஸ் Vs கமிடட் என கம்பரிசன் கான்செப்ட்களில் இறங்கி அடிக்கும் அவர்களது வீடியோக்கள், எப்போதும் டிரெண்ட்டில் இருக்கும். ‘எரும சாணி’ யூடியூப் சேனலில் அனைவரையும் ஈர்த்த ஜோடி, ஹரிஜா - விஜய். சமூக வலைதளங்களில் ஹரிஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இருவரது காம்பினேஷனில் வெளியாகும் வீடியோக்களில் சிரிப்புக்கு கியாரண்டி.
யூடியூப் தளத்தினை வெள்ளித்திரைக்கான முதல் படியாய் எடுத்துக்கொண்டு, பத்து நிமிட வீடியோவிற்கே இரவு பகலாய் உழைத்து இன்றைய ‘யூடியூப் செலிபிரிட்டி’ என்ற அடையாளத்தைப் பெற்ற இவர்களில் 80சதவீதத்தினர் வெள்ளித்திரையில் அவர்களுக்கான இடத்தை தேடிக்கொண்டனர்.
பிரபலம், புகழைத் தேடி தரும் யூடியூப் எண்ணிலடாங்கானோரது வாழ்வதாரத்துக்கு வழிவகை செய்து வேலை வாய்ப்பை வழங்கும் பெரும்நிறுவனமாக யூடியூப் மாறியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.