ஒரு வருட சேமிப்புப் பணத்தில் முதல் விமானப் பயணம் சென்ற 24 பெண் கூலித் தொழிலாளர்கள்!
கேரளாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய 24 பெண்கள் தங்களது தினக்கூலி மூலம் சேர்த்த பணத்தைக் கொண்டு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
கேரளாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய 24 பெண்கள் தங்களது தினக்கூலி மூலம் சேர்த்த பணத்தைக் கொண்டு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினத்தன்று கொச்சியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானம் ஒன்றிற்கு அன்றைய தினம் மற்றொரு சிறப்பம்சமும் கிடைத்துள்ளது. ஆம், அன்று அதிகாலை புறப்பட்ட அந்த விமானத்தில் தினக்கூலி தொழிலாளர்களான 24 பெண்கள் தங்களது குறைந்த ஊதியத்தில் இருந்து சேமித்த பணத்தில் வாங்கிய விமான டிக்கெட் மூலம் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு பறந்துள்ளனர்.
கோட்டயத்தின் பனச்சிக்காட்டில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக சாலைகளைச் சுத்தப்படுத்துவது, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டுமானப் பணிகள் அல்லது வேறு ஏதேனும் வழக்கமான வேலைகளில் ஈடுபடும்போது போன்ற வேலைகளை குறைந்த ஊதியத்திற்கு செய்து வந்துள்ளனர்.
கைக்கு கிடைக்கும் கூலி சிறியதாக இருந்தாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய 24 பெண்களுக்கு மிகப்பெரிய கனவு ஒன்று இருந்தது. குழந்தைகளைப் போல் ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை அன்னார்ந்து பார்த்தே பழக்கப்பட்ட அப்பெண்களுக்கு ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. அதற்காக தங்களது சொற்ப வருவாயில் ஒரு பகுதியை சேமித்து வைக்க ஆரம்பித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த பெண்களில் ஒருவரான 55 வயதான கீதா உன்னிகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
“நாங்கள் ஒரு நாளைக்கு 311 ரூபாய் சம்பாதிக்கிறோம். ரயிலில் ஏசி கோச்சிலும், விமானத்திலும் பயணிக்க வேண்டும் என்ற எங்களுடைய கனவிற்காக அதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தோம். ஒரு வருட சேமிப்பிற்கு பிறகு, எங்களுடைய வார்டு உறுப்பினரான அபிசன் ஆபிரகாமைத் தொடர்பு கொண்டு, எங்களுடைய ஆசையை வெளிப்படுத்தினோம். அவர் எங்களுக்கு உதவினார். டிக்கெட்களை முன்பதிவு செய்ய எங்களுக்கு உதவி செய்தார். மேலும், எங்களுடன் இணைந்து பயணமும் செய்தார்,” எனத் தெரிவித்துள்ளார்.
24 பெண்களைக் கொண்ட குழு, கடந்த வியாழக்கிழமை காலை பெங்களூரு வந்தடைந்தது. அங்கு அவர்களுக்கு எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸாக கர்நாடகாவின் சட்டமன்றமான விதான் சவுதாவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொச்சினில் இருந்து பெங்களூரு பறந்து சென்ற அந்த குழுவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வான இவான் நிக்லி தான் விதான் சவுதாவை கண்டு ரசிக்கும் ஸ்பெஷல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதனை பார்த்த கையோடு பெண்கள் குழு, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்துள்ளனர்.
பனச்சிக்காடு பஞ்சாயத்து 12வது வார்டைச் சேர்ந்த 24 பெண்களில் 45 வயது முதல் 77 வயது வரை பலதரப்பட்ட பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 77 வயதான செல்லம்மா கூறுகையில்,
“விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் யாருமே இதுவரை விமானத்தில் பயணம் செய்தது கிடையாது,” என சின்ன குழந்தை போல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல், முதன் முறையாக விமானத்தில் பயணித்த பெண்கள், பெங்களூரு டூ கொச்சிக்கு திரும்பும் பயணத்தை ஏசி ரயிலில் செல்ல உள்ளனர். அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு டெல்லிக்கு செல்வதற்கான திட்டத்தையும் தீட்டியுள்ளனர். குறிப்பாக அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லிக்குச் சென்று செங்கோட்டையில் பாரத பிரதமர் கொடியேற்றுவதை கண்டு ரசிக்க திட்டமிட்டுள்ளனர்.
தகவல் உதவி - தி நியூஸ் மினிட் | தமிழில் - கனிமொழி