வரலாற்றில் முதன்முறை- குடியரசு தின விழா சாகச நிகழ்ச்சியில் பெண் விமானி!
குடியரசு தின விழாவில் முதன் முறையாக பெண் விமானி ஒருவர் சாகசம்!
குடியரசு தின விழாவில், போர் விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தின விழாவில் முதன் முறையாக பெண் விமானி ஒருவர் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில், ஆண்டு தோறும் போர் விமானங்கள் பங்கேற்கும், கண்கவரும் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம். இந்த ஆண்டு, விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை, பெண் விமானி பாவனா காந்த் இயக்க உள்ளார்.
இவரும், அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோரும், 2016ல், இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானிகளாகப் பொறுப்பேற்றனர். இவர்களில் பாவனா காந்த், குடியரசு தின விழா சாகசங்களில் போர் விமானத்தை இயக்க உள்ளார் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீஹாரின் தர்பங்காவைச் சேர்ந்த பாவனா, மருத்துவ மின்னணுவியல் இன்ஜினியரிங் பட்டதாரி. போர் விமானக் குழுவில் பாவனா காந்த் 2017-ம் ஆண்டு இணைந்தார். அவர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் Mig-21 விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்தார்.
விடாமுயற்சியுடன் தீவிர பயிற்சி மேற்கொண்ட பாவனா காந்த் போர் விமானத்தில் பகலில் பறந்த முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், முதல் முறையாக ரபேல் போர் விமானங்களும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“எனது குழந்தைப் பருவத்திலிருந்தே, நான் தொலைக்காட்சியில் குடியரசு தின அணிவகுப்பைப் பார்த்து வருகிறேன், இப்போது நான் அதில் பங்கேற்கிறேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. ரஃபேல் மற்றும் சுகோய் உள்ளிட்ட பிற போர் விமானங்களில் பறக்க விரும்புகிறேன்," என்று அவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை கையகப்படுத்திய சமீபத்திய மல்டி ரோல் போர் விமானமான ரஃபேல் போர் விமானம் இந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ளது. அணிவகுப்பின் விமான சாகசத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும். சில புதிய அமைப்புகளையும் முதல் முறையாக குடியரசு தின விழா அன்று பார்க்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விமானப்படை செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் இந்திரனில் நந்தி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ யிடம்,
“15 போர் விமானங்கள், ஐந்து போக்குவரத்து மற்றும் ஒரு விண்டேஜ் விமானங்கள் உட்பட மொத்தம் 42 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடும்,” என்று கூறினார்.
தகவல் உதவி: indiatimes | தமிழில்: மலையரசு