ரஃபேல் விமானம் இயக்க உள்ள முதல் பெண் விமானி ‘ஷிவாங்கி சிங்’
இந்திய விமானப் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானத்தை இயக்க வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷிவாங்கி சிங் இந்திய விமானப் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானத்தை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் ஆவார்.
ஷிவாங்கி வாரணாசியைச் சேர்ந்தவர். இவரது பதின்ம வயதில் அவரது தாத்தா டெல்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தொடங்கியது இந்தத் துறையின் மீதான ஆர்வம். வீடு திரும்பியதும் அம்மாவிடம் வியப்பும் ஆர்வமும் குறையாமல் விமானங்கள் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.
ரஃபேல் போர் விமானத்தை இயக்கத் தேர்வாகியுள்ள முதல் பெண்ணான ஷிவாங்கி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் பிரிவில் சேர்ந்துள்ளார். பணி நியமிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே எம்ஐஜி 21 ரக விமானங்களை இயக்கத் தொடங்கினார். சமீப காலம் வரை ராஜஸ்தானில் பணியாற்றி வந்தார்.
வழக்கமாக விமானி ஒருவர் விமான ரகங்களை மாற்றி இயக்கும்போது பயிற்சி வழங்கப்படும். ஷிவாங்கி இந்தப் பயிற்சி முடிந்த பின்னர் அம்பாலாவில் உள்ள கோல்டன் ஏரோஸ் என்று அழைக்கப்படும் 17-வது படைப்பிரிவில் இணைய உள்ளார்.
“இந்திய விமானப் படை ஷிவாங்கிக்கு நியாயமான முறையாக வாய்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் கனவு காணலாம். அந்த கனவு நிறைவேறும் என்பதற்கு இதுவே சாட்சி. மிகவும் பெருமையாக இருக்கிறது,” என்று ஓய்வு பெற்ற விங் கமாண்டர் அனுபமா ஜோஷி குறிப்பிட்டார்.
ஷிவாங்கியின் அப்பா குமரேஷ்வர் சிங் பயணம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறும்போது,
“ஷிவாங்கி வரலாறு படைத்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இலக்கு நோக்கிய பயணத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதே அவரது வெற்றிக்கு உதவியுள்ளது,” என்றார்.
ஷிவாங்கியின் அம்மா சீமா சிங் இல்லத்தரசி. அவர் கூறும்போது,
“எட்டாம் வகுப்பில் படிப்பில் அதிக நாட்டம் காட்டத் தொடங்கினார். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். வருங்காலத் திட்டம் குறித்து மற்றவர்கள் ஷிவாங்கியை கேள்வியெழுப்பும்போது, ‘விண்ணைத் தொடவேண்டும் என்பதே என் கனவு’ என்பதே அவரது பதிலாக இருந்தது,” என்றார்.
தங்கள் பகுதியில் வளர்ந்த பெண் போர் விமானத்தை இயக்கி நாட்டிற்கே பெருமை சேர்ப்பதை அறிந்து வாரணாசி பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தகவல் மற்றும் பட உதவி: இந்துஸ்தான் டைம்ஸ்