இந்திய வரலாற்றில் முதன் முறை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தந்தை - மகன்!
இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி வகித்த சாதனை நிகழவுள்ளது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி வகித்த சாதனை நிகழவுள்ளது.
இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்பது வரலாற்றுச் சாதனையாக மாற உள்ளது. ஏனெனில், இவர் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார். தற்போது இவர் தலைமை நீதிபதி பதவிக்கு வந்தால், இந்தியாவிலேயே தலைமை நீதிபதியாக பதவி வகித்த தந்தை - மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காராகிறார்.
நீதியரசர் ஒய்.வி.சந்திரசூட்:
1978ம் ஆண்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஒய்.வி.சந்திரசூட், 1985ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இன்று வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர் என்ற பெருமை ஒய்.வி.சந்திரசூட்டை மட்டுமே சாரும்.
ஒய்.வி.சந்திரசூட் தனது பதவிக் காலத்தில், "கிஸ்ஸா குர்சி கா" படம் சம்பந்தமான வழக்கில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளார். இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தியின் அரசியலை நையாண்டி செய்திருந்தால் இந்த படம் எமர்ஜென்சி காலத்தில் தடை செய்யப்பட்டது.
தந்தையின் தீர்ப்பையே தவிடுபொடியாக்கிய தனையன்:
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட்டின் இரண்டு தீர்ப்புகளை ரத்து செய்துள்ளார்.
ஏப்ரல் 28, 1976ம் ஆண்டு ADM ஜபல்பூர் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவசர காலத்தின்போது எவரேனும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டால் அது தவறானதாகவும், சட்ட விரோதமாகவும் இருந்தாலும்கூட அதை எதிர்த்து எந்த உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பை அளித்த வழக்கில் 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் டி.ஒய்.சந்திரசூட்டும் ஒருவராவார்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில், தனிமனித உரிமை ஒரு அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் ஒரு பகுதியாக, 1976 இன் அவசரநிலையை ஆதரித்த சர்ச்சைக்குரிய உத்தரவை ரத்து செய்தார்.
1985 ஆம் ஆண்டு, நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், விபச்சாரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் எனக் கூறினார்.
அதேபோல், திருமணத்தை மீறிய உறவைக் குற்றமாகக் கருதும் மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா பல ஆண்டுகளாக இருந்துவந்தது. சட்டப் பிரிவு 497 படி, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த வெளி ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, திருமணமான பெண் ஒருவருடன், அவரது கணவரின் அனுமதியின்றி வேறு ஒரு ஆண் உறவுகொண்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத்தப்பட்டது.
காலனித்துவக் கால இச்சட்டத்தை நிலைநிறுத்தி பல தீர்ப்புகள் பலமுறை வந்துள்ளது. சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட் நீதிபதியாக இருந்தபோது இச்சட்டத்தை நிலைநிறுத்தி தீர்ப்பு அளித்திருக்கிறார்.
ஆனால், 2018 ஆம் ஆண்டில், இதுகுறித்து வந்த வழக்கில்,
”இச்சட்டம் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் இருக்கிறது. திருமணமான பெண்கள் அவர்களது கணவரின் சொத்து எனும் பொருளை இந்தச் சட்டம் கொடுப்பதால் இச்சட்டத்தை ஒருமனதாக ரத்து செய்த நீதிபதிகளில் மகன் டி.ஒய்.சந்திரசூட்டும் ஒருவர் ஆவார்.”
யார் இந்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்?
தனஞ்சய சந்திரசூட் என்ற டி.ஒய்.சந்திரசூட், நவம்பர் 11ம் தேதி, 1959ம் ஆண்டு தந்தை யேஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் (ஒய்.வி.சந்திரசூட்), பிரபா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மும்பை கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளி மற்றும் டெல்லி செயின்ட் கொலம்பா பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்த சந்திரசூட், 1979ம் ஆண்டு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் கவுரவ பட்டம் பெற்றார்.
1982 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த சந்திர சூட், 1983 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவர் 1986 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நீதி தொடர்பான சட்டப்படப்பில் (எஸ்.ஜே.டி) பட்டம் பெற்றார்.
உச்ச நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1998ல் மும்பை உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 39 வயதிலேயே மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதால், இளம் வயதிலேயே மூத்த வழக்கறிஞரானவர் என்ற பெருமை பெற்றார். 1998ல், அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில், அவர் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்தையும் கற்பித்தார் மற்றும் 1988 முதல் 1997 வரை பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியலமைப்பு சட்டம் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியுள்ளார்.
நீதிபதி டி ஒய் சந்திரசூட் 2000 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் 13 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.
தனியுரிமை, கருணைக்கொலை, ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், சபரிமலையில் பெண்களின் நுழைவு, ஹாதியா வழக்கு, மருத்துவக் கல்லூரி வழக்குகள் மற்றும் திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைப்பது, பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை போன்ற பல முக்கியமான வழக்குகளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை இவர் வழக்கியுள்ளார்.
நீதித்துறைக்கு முன்னூதாரணமாக வழக்கு தொடர்பான கோப்புகளை நள்ளிரவு வரை படித்து புரிந்து கொண்டு தான் தீர்ப்பு வழங்கும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.
நீதிபதி சந்திரசூட் உடன் பணிபுரிந்தவர்களில் ஒருவர் கூறுகையில்,
"அவர் தனது நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு பியூனாக இருந்தாலும் அவரின் பணிக்காக திறந்த மனதுடன் பாராட்டுவார். மேலும் எங்கள் ஒவ்வொருவரையும் எங்கள் பணிக்காகப் பாராட்டி, உற்சாகப்படுத்துவார்,” எனத் தெரிவித்துள்ளார்.
தீவிரமான வழக்கு விசாரணையின் போது டி ஒய் சந்திரசூட் அமர்வு தொடர்ந்து 4 மணி நேரம் வரைக்கூட விசாரணை நடத்தியுள்ளது. கடந்த மாதம் அன்றைய தினம் பட்டியலிடப்பட்ட அனைத்து வழக்குகளையும் முடிப்பதற்காக இரவு 9.15 மணி வரை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணையைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் கையாண்ட சர்ச்சை வழக்குகளும், முக்கிய தீர்ப்புகளும் என்ன?