‘கரண்டி முதல் கல்லா வரை’ - மதுரையில் திருநங்கைகள் நடத்தும் ‘ட்ரான்ஸ் கிட்சன்’
15 திருநங்கைகளுக்குத் தாயாக இருந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஒருகுடும்பமாக வாழ்ந்துவரும் திருநங்கை ஜெயசித்ராவின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது மதுரையின் முதல் 'ட்ரான்ஸ் கிச்சன்'.
சமூகப் புறக்கணிப்பு, வாழ்வதாரத்திற்கு சிக்கல் என வாழ்க்கையினை போராட்டமாகவே நகர்த்திவரும், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், தமிழகக் காவல்துறை, வனத்துறை என அரசுப் பணிகளிலும், தொழில் முனைவோர்களாகும் நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நிகழ்ந்து நம்பிக்கையினை ஏற்படுத்தி வருகின்றன. அப்படியாக, மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
15 திருநங்கைகளுக்குத் தாயாக இருந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஒருகுடும்பமாக வாழ்ந்துவரும் திருநங்கை ஜெயசித்ராவின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது மதுரையின் முதல் 'ட்ரான்ஸ் கிச்சன்'.
ஒதுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் ‘ஸ்வஸ்தி’ என்ற தொண்டு அமைப்பு, அர்கியம், விருத்தி போன்ற அமைப்புகளுடன் இணைந்து, அவர்களின் முயற்சிக்கு நிதியுதவி செய்துள்ளது.
ஆனால், சமூகத்தின் புறக்கணிப்பிற்கு தொடர்ச்சியாக ஆளாகிவரும் திருநங்கைகளுக்கு, உணவகத்தினை துவங்கிய பயணத்திலும் வழிநெடுக தடைகளே நிறைந்திருந்தது. தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிக் கண்டுள்ள அவர்களின் பயணத்தைப் பகிர்ந்தார் ஜெயசித்ரா.
"என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற திருக்காட்டுப் பள்ளி. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பொழப்புக்காக ஏதாச்சும் செய்து கொண்டேயிருப்பேன். தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பால் இறக்கி பால் பாக்கெட் விற்பனை செய்தேன். மினரல் வாட்டர் பிசினஸ் செய்தேன். அதோடு, ஆடு, பசு மாடு, ஜல்லிக்கட்டு மாடு, கோழி, வாத்து வளர்த்து வருமானத்தைத் தேட ஆரம்பிச்சேன். ஒரு நாளுக்கு 8லிருந்து 10 லிட்டர் பால் கறப்பேன். இப்பவும் 20 ஆடுகளுக்கும் மேல வளர்த்திட்டு வர்றேன். அப்போதிலிருந்த என் பிள்ளைகள் 15 பேரும் ஒரே வீட்டிலே குடும்பமாக தான் வாழ்ந்திட்டு வர்றோம்.
எங்க தேவைகளைப் பூர்த்தி செய்தது போக, என்னால் முடிந்தளவுக்கு உதவிகளைச் செய்து வந்தேன். அப்படி தான், நிதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த முதியோர் இல்லம் ஒன்றினைப் பற்றி தெரிய வந்தது. அந்த முதியோர் இல்லத்துக்கு என்னால் முடிந்த அரிசி, பருப்பு, பால் வாங்கிக் கொடுத்து உதவி செய்தேன். அவங்க, சாப்பாட்டுக்கே இல்லாமல் கஷ்டப்படுறது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால, முதியோர் இல்லத்துக்காக ஸ்பான்சர்சைத் தேடினேன். அவங்களையும், முதியோர் இல்லத்தையும் தொடர்பு ஏற்படுத்தி விட்டுவிடுவேன். அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்வர்.
பிறந்தநாள், திருமணநாள் என ஸ்பெஷல் தினங்களில் முதியோர் இல்லத்துக்கு சாப்பாடு அளிக்க முன்வருபவர்களிடம் எங்களுக்கு அந்த உணவு ஆர்டரைக் கொடுக்குமாறு கூறினேன். அப்படி தான் 'நம்புநாயகி கேட்டரிங் சென்டர்' ஆரம்பமாகியது.
முதியோர் இல்லத்துக்கு மட்டுமே சமைத்து கொண்டிருந்த நிலையில், வெளி ஆர்டர்களும் கிடைத்தது. வளைகாப்பு, கல்யாணம், கட்சி விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் என சின்னச் சின்ன ஆர்டர்களாக செய்திட்டு வந்தோம். ஆனா, எப்படி எவ்வளவு காசு வாங்கணும்னு தெரியாமல் தொடக்கத்தில் எங்களது உழைப்பிற்கான கூலியே இல்லாமல் காசு வாங்கிட்டு இருந்தேன்.
அனுபவம் மூலமாக தான் ஒவ்வொன்றாய் கற்றுக் கொண்டேன். காலையில் 5:30 மணிக்கு எழுந்து ஆடு, மாடுகளுக்கு தீவனம் அளித்து, சுத்தப்படுத்திவிட்டு, ஆர்டர் குறித்து விசாரிப்பவர்களுக்கு பதிலளித்துவிட்டு அன்றைக்கான ஆர்டரை அட்டவணைப்படுத்தி விடுவேன்.
வளைகாப்பு ஆர்டர்களில் தான் 11 வகை சாப்பாடு, அதற்கு 11 வகையாக சைடு டிஷ் என அதிகவேலைகள் இருக்கும். 15 பிள்ளைகள் இருப்பதால், ஆளுக்கு ஒரு வேலையாக ஒவ்வொரு ஆர்டரையும் சிறப்பாக செய்து விடுவோம். காலை ஆர்டர் என்றால் நைட் 12 மணிக்கு அடுப்பை பத்தவைத்து, விடிய விடிய சமைத்து முடிப்போம். 10 வருஷத்துல எந்த புகாரும் வந்ததில்லை.
இந்த கொரோனா நேரத்தில் தான், ஆர்டர் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். கிட்டத்தட்ட 10 ஆடுகளை வித்து தான் அந்த நேரத்தை சமாளிச்சேன். நாங்க கஷ்டப்படுவது தெரிந்து செல்கோ அறக்கட்டளையும், ஸ்வஸ்தி அமைப்பும் இணைந்து முன்களப்பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள், மருத்துவர்களுக்கு உணவு வழங்குவதற்காக எங்களிடம் ஆர்டர் கொடுத்தனர்.
ஒரு நாளுக்கு ரூ 7,500 என்ற கணக்கில் 10 நாளுக்கு உணவுகளை தயாரித்து பொட்டலங்களைக் கட்டிக் கொடுத்தோம். எங்களுடைய வேலை நேர்த்தியை பார்த்துவிட்டு, நீங்க ஏன் ஓட்டல் தொடங்கக்கூடாது என்று கேட்டனர். அதற்கான நிதி எங்களிடம் கிடையாதுனு சொன்னேன். நிதி நாங்க ரெடி பண்ண தர்றோம் நீங்க, முயற்சி செய்யுங்கள்னு சொன்னார்.
ஓட்டல் தொடங்க முதலில் பயமா தான் இருந்தது. இருந்தாலும், முயற்சி செய்யலாம்னு நிறைய கடைகளை வாடகைக்கு கேட்டு அலைந்தோம். திருநங்கை என்று காரணம்காட்டி 'இவங்க ஒழுங்கா இருக்க மாட்டங்களே'னு சொன்னாங்க. கிட்டத்தட்ட 3 மாதம் மதுரையில் முழுக்க கடைத் தேடி அலையாத இடமே இல்லை. ஆட்டோவிலே ஒரு 1000 கி.மீ சுத்தி வந்திருப்போம். ஆட்டோவுக்கு மட்டுமே ரூ.25,000 செலவு பண்ணியிருப்பேன். எல்லாம் ஓகேனு சொல்வாங்க, நாங்களும் அட்வான்ஸ் கட்டிட்டு வந்திடுவோம். அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடுகிற அன்று வேண்டாமானு பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவாங்க.
அவங்களும் வேலை கொடுப்பதில்லை, நாம ஒரு முயற்சி எடுத்தால் அதுவும் இப்படி பண்றாங்களேனு ரொம்ப மனஉளைச்சலாகி, தினம் அழுவேன். ஸ்வஸ்த்தின் அறக்கட்டளையின் பிராந்திய திட்ட மேலாளரான திருநங்கை பிரியாபாபு அம்மா தான் ரொம்ப உதவி செய்து, ஊக்கப்படுத்தினாங்க.
ஒரு கட்டத்தில் எங்களுக்கு வாடகைக்கு கடை தரமறுக்கிறார்கள்னு கலெக்டரிடம் புகார் அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்போது தான், ஒரு கடை ஓனரை சந்தித்தோம். அவர் ஒரு சிவ பக்தர், 'தாராளமாக பண்ணுங்கமா. பக்கத்துல அரசு மருத்துவமனை இருப்பதால், கொஞ்சம் சேவை மனப்பான்மையோடு பண்ணுங்க'னு சொன்னார். அதற்கு ஏற்றாற்போன்று, சுடுத்தண்ணீர், ரசம், கஞ்சி கேட்டால் இலவசமாகவே கொடுத்துவருகிறோம்.
மதுரை கலெக்டர், ஜட்ஸ், சர்ச் பாதிரியார்கள் எல்லாம் வந்து கடைய திறந்து வச்சாங்க. சைவம், அசைவம் இரண்டுமே கொடுக்கிறோம். நடுத்தர மக்கள் ஏத்தமாதிரி கம்மியான விலையில் தான், சாப்பாடு கொடுத்திட்டு வர்றோம்.
10 வருஷமாகவே கேட்டரிங் தொழில் பார்த்துவருகிறோம். ஒரே நேரத்தில் 1000பேருக்கு சமைச்சுக் கொடுத்திருக்கோம். அதனால், ஓட்டல் வேலை பெரிதாகத் தெரியவில்லை. எங்களுக்குள் இரு பேட்ச்சாக பிரிந்து, ஷிப்ட் பிரித்து கேட்டரிங் ஆர்டரையும், ஓட்டல் வேலையும் பகிர்ந்து கொள்கிறோம். சமையலுக்கு தேவையான மசாலாப் பொடிகள் அனைத்தையும் வீட்டிலே ரெடி பண்ணிவிடுவோம்.
ஓட்டல் ஆரம்பித்த முதல் நாள் ரொம்ப பதட்டமாக இருந்தது. 100 பேருக்கான இலவச உணவினை தயாரித்து வைத்திருந்தோம். ஆனா, எல்லாரும் காசு கொடுத்து வாழ்த்திவிட்டு போனாங்க. ஓட்டல் துவங்கி 10 நாள் தான் ஆகுது.
“மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். பல ஊர்களிலிருந்தும் ஓட்டலுக்கு தேடி வருகின்றனர். தஞ்சாவூரிலிருந்து ஓட்டலில் சாப்பிடுவதற்காக வந்ததாக சொன்னாங்க. இதையெல்லாம் கேட்ட பிறகு, ஓட்டல் துவங்குவதற்காக பட்டக் கஷ்டம்லாம் பறந்து போயிடுச்சு,” மனமகிழ்வுடன் கூறினார் அவர்.