ஏழ்மை; கட்டுப்பாடு; தொடர் சோகம்: முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் பெண் வேட்பாளர் திரௌபதி முர்மு கதை!
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஆசிரியையாக பணி புரிந்து, பின் அரசியலில் நுழைந்து, இன்று நாட்டின் முதன் குடிமகனாகும் அளவிற்கு உயர்ந்தவர் திரௌபதி.
நாட்டின் உயரிய பதவிகளில், பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பாக நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் பதவியில் இதுவரை இருந்த 14 பேரில் ஒருவர் மட்டுமே பெண்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் பிரதீபா பாட்டில். அவருக்குப் பின் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின், குடியரசுத் தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் 64 வயதான திரௌபதி முர்மு.
கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் குடியரசுத் தலைவராக பதவியில் அமரும் பட்சத்தில், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெருமையும் அவருக்கு வந்து சேரும்.
பாஜக அவரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து, இணையத்தில் அதிகம் தேடப்படும் நபராக உள்ளார் திரௌபதி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடினமான சூழ்நிலையில் வளர்ந்து, படித்து ஆசிரியையாக வேலை பார்த்து, பின் அரசியலில் நுழைந்து, அதில் ஒவ்வொரு படியாக முன்னேறி, இன்று நாட்டின் முதல் குடிமகன் ஆகும் அளவிற்கு உயர்ந்துள்ளார் திரௌபதி.
யார் இந்த திரௌபதி முர்மு?
ஒடிஷா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடிபோசி கிராமத்தில் 20 ஜூன் 1958 அன்று பிறந்தவர் திரௌபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தவர்.
திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“திரௌபதி முர்மு தனது வாழ்க்கையை சமுதாய சேவைக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அர்ப்பணித்தவர். சிறந்த நிர்வாக அனுபவத்தை கொண்ட அவர், சிறந்த ஆளுநராக பதவி வகித்து உள்ளார். அவர் நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
எளிமைக்குப் பேர் போனவரான திரௌபதி முர்மு, ‘தான் அரசியலுக்கு வருவேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை...’ என 2020ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில்,
“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, கை நிறைய சம்பாதித்து குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே என் கனவாக இருந்தது. நான் அரசியலுக்கு வருவேன் என ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளும், என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும் என்னை வேலையை விட்டு விட்டு அரசியலில் சேர வைத்து விட்டது,” எனக் கூறியுள்ளார் திரௌபதி முர்மு.
திருமணத்திற்குப் பிறகு இரண்டு மகன்கள், ஒரு மகள் என அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த திரௌபதி முர்மு, பிள்ளைகள் வளர்ந்து, வீட்டில் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாமல், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தார்.
சம்பளமில்லாமல் தன்னால் முடிந்த சேவையாக அப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த அவர், பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து ஒடிசா கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற வேலைகளைச் செய்தார்.
ஸ்ரீ அரவிந்தர் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிய இவர், அதன் பிறகு ஒடிசா நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக (ஜூனியர் அசிஸ்டண்ட்) பணிபுரிந்தார்.
“நான் வளர்ந்த சமூகம், பெண்கள் மீது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை உடையது. வீட்டு வாசலைக்கூட பெண்கள் தாண்டக்கூடாது என அவர்கள் நினைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது மோசமான ஒரு தொழில்,” என தான் கடந்து வந்த பாதை குறித்து கூறுகிறார் திரௌபதி.
ஓய்வு நேரத்தில் சமூகசேவைகள் செய்து வந்த திரௌபதி முர்மு, ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார். 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு ராய்நகர்பூர் நகர் பஞ்சாயத்தில் இருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவியில் இருந்தார். 2000ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
2007-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதினையும் இவர் பெற்றார். அரசியலில் இத்தனை பதவிகளை வகித்து வந்த முர்மு, பாஜகவின் பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
அதன் பின்னர், 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்ததன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார்.
குடும்பம்
அரசியலில் ஒருபுறம் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த சூழலில், 2009ம் ஆண்டு தனது முதல் மகனையும், அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு தனது மற்றொரு மகனையும் இழந்தார் திரௌபதி. இரண்டாவது மகன் உயிரிழந்த அதே மாதத்தில் திரௌபதி முர்வின் தாயாரும், சகோதரரும் மரணமடைந்தனர். அதற்கு அடுத்த ஆண்டே தனது கணவரையும் இழந்தார் அவர்.
குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த துயரச் சம்பவங்களால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தியானம், யோகா மற்றும் ஆன்மீகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தனது ஒரே மகளையும் ஆன்மீக வழியில் கொண்டு செல்லத் தொடங்கினார்.
குடும்பத்தில் ஏற்பட்ட துயரங்களுக்கு மத்தியிலும் அரசியலிலும், சமூக சேவையிலும் தீவிரமாக பணியாற்றினார் திரௌபதி முர்மு. அதன் பலனாகத்தான் இன்று நாட்டின் குடியரசுத்தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இன்று குடியரசுத்தலைவர் வேட்பாளராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையை மட்டுமின்றி, நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு பிறந்து குடியரசுத் தலைவரானவர் என்ற சிறப்பையும் பெறுவார் குறிப்பிடத்தக்கது.