ஆன்லைன் பயண நிறுவனம் Cleartrip-ஐ ஃபிளிப்கார்ட் வாங்கியது!
கிளியர்டிரிப் நிறுவனத்தை பிளிப்கார்ட் கையகப்படுத்தியிருப்பது, அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வர்த்தக வாய்ப்பை மேலும் விரிவாக்க உதவும்.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஆன்லைன் பயண நிறுவனமான ’Cleartrip' நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுக்கான மதிப்பு தெரிவிக்கப்படவில்லை எனினும், இந்த ரொக்கம் மற்றும் பங்கு இணைந்த ஒப்பந்தம் 40 மில்லியன் டாலர் அளவிலாக இருக்கலாம் என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் படி, கிளியர்டிரிப் தனி பிராண்டாக தொடர்ந்து செயல்படும். அதன் ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள் மற்றும் பயண பிரிவில் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்க ஃபிளிப்கார்ட் உடன் நெருக்கமாக பணியாற்றுவார்கள்.
“டிஜிட்டல் வர்த்தகம் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த ஃபிளிப்கார்ட் குழுமம் உறுதி கொண்டுள்ளது. கிளியர்டிரிப் என்றால் பயணத்துடன் தொடர்புடையது என வாடிக்கையாளர்கள் மனதில் பதிந்துள்ளது. நாங்கள் வளர்ச்சிக்கான புதிய பிரிவுகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, இந்த முதலீடு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளிக்கும் சேவைகளின் வகைகளை மேம்படுத்த உதவும்,” என ஃபிளிப்கார்ட் குழும சி.இ.ஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இந்த முதலீடு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் வர்த்தகத்தை வலுவாக்கும் என ஃபிளிப்கார்ட் நம்புகிறது. பயணம் மற்றும் விருந்தோம்பல் பிரிவுகளில் சேவைகளை பல அடுக்குகளில் வழங்கவும் இது உதவும்.
2018ல், மேக்மைடிர்ப் நிறுவனத்துடன் இணைந்து பயண பதிவுகளை வழங்கத்துவங்கிய நிறுவனம் பின்னர், இக்சிகோ நிறுவனத்திற்கு மாறியது.
“எங்கள் வாடிக்கையாளர்களுக்கான பயண அனுபவத்தை எளிமையாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கிளியர்டிரிப் முன்னோடியாக இருக்கிறது. இந்த தயாரிப்பு சேவை முதன்மையான அணுகுமுறை வாடிக்கையாளர்களின் விரும்பிய பயண பங்குதாராக எங்களை உருவாக்கியுள்ளது,” என்று கிளியர்டிரிப் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்டுவர்ட் கிரைக்டன் தெரிவித்துள்ளார்.
“ஃபிளிப்கார்ட் குடும்பத்தில் இணைவது குறித்து பெருமிதம் கொள்கிறோம். இந்த கூட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பயண துறைக்கு நல்ல தாக்கத்தை அளிக்கும் என நம்புகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
2006ல் நிறுவப்பட்ட கிளியர்டிரிப் கொரோனா சூழலில் தாக்கத்தை சந்தித்து வருகிறது. 2016ல் நிறுவனம் கடைசியாக நிதி திரட்டியிருந்தது.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜாரி