ரூ.1-க்கு உணவு: டெல்லி மக்களின் பசி தீர்க்கும் கவுதம் கம்பீரின் அசத்தும் முயற்சி!
ஜன் ரசோய்' எனப்படும் எளிய மக்களுக்கான உணவகம் தொடக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். தற்போது அரசியல்வாதியும் கூட. 2019 பொதுத்தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானவர். இதற்கிடையே, கவுதம் காம்பீர் ரூ.1க்கு உணவு வழங்கும் 'ஜன் ரசோய்' எனப்படும் எளிய மக்களுக்கான உணவகத்தைத் திறந்துள்ளார்.
ஏற்கனவே, தனது தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் மார்க்கெட் பகுதியில் முதல் முதலாக ‘ஜன் ரசாய்' உணவகத்தை கடந்த 2019 டிசம்பரில் தொடங்கினார். இப்போதும் அதே தொகுதிக்குட்பட்ட நியூ அசோக் நகர் பகுதியில் உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் இட வசதி செய்யப்பட்டுள்ளது.
உணவகத்தை திறந்து வைத்தபின் மக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவருந்தினார் கம்பீர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர்,
“ஒரு நல்ல மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் இதை திறந்துள்ளேன். என்னிடம் உள்ளதை கொண்டு சமுதாயத்தின் அடித்தட்டு மக்களக்கு உதவும் வகையில் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். இது என்னுடன் முடிந்துவிடாமல், ஓர் இயக்கமாக மாற வேண்டும்," எனக் கூறினார்.
முதல்முறை இந்த உணவகம் திறந்தபோதே அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. காந்தி நகர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர்கள் இந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். இதனை அடுத்தே தற்போது இரண்டாவதாக உணவகம் திறந்துள்ளார் காம்பீர்.
கம்பீரின் முயற்சி குறித்து பாராட்டி பேசியுள்ள அம்மாநில பாஜக பொறுப்பாளர் பாண்டா,
”மாநில அரசுகள் மானிய வகையில் உணவகங்களை திறந்திருந்தாலும், கம்பீர் உணவகம் திறந்திருப்பது மிகவும் வித்தியாசமான முயற்சி. அதற்காக அவரை பாராட்டுகிறேன்," எனக் கூறியுள்ளார்.
தொகுப்பு: மலையரசு