'இந்தியாவில் 2024ல் மின்வாகனங்கள் விற்பனை 14.08 லட்சத்தை கடந்தது' - அமைச்சர் தகவல்!
மின்வாகனங்கள் ஏற்பு அதிகரித்து வருவது, மக்களின் நம்பிக்கையை உணர்த்துவதோடு அரசு இத்துறைக்கு அளித்து வரும் ஊக்கம் மற்றும் துறையின் புதுமையாக்கத்தின் தாக்கத்தையும் உணர்த்துவதாக அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
இந்தியாவில் மின் வாகனங்கள் விற்பனை 2024ம் ஆண்டில் 14.08 லட்சத்தை கடந்திருப்பதாக மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார். சந்தையில் மின்வாகனங்கள் பங்கு முந்தைய ஆண்டு 4.44 சதவீதமாக இருந்தது, 2024ல் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்வாகனங்கள் ஏற்பு அதிகரித்து வருவது, மக்களின் நம்பிக்கையை உணர்த்துவதோடு அரசு இத்துறைக்கு அளித்து வரும் ஊக்கம் மற்றும் துறையின் புதுமையாக்கத்தின் தாக்கத்தையும் உணர்த்துவதாக, அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
"2024 ம் ஆண்டில் மொத்த மின்வாகனங்கள் விற்பனை 14,08,245 ஆக அதிகரித்து, சந்தை பங்காக 5.59% உயர்வு பெற்றுள்ளது. முந்தைய ஆண்டு , 10,22,994 வாகனங்களோடு இது 4.44%, ஆக இருந்தது," என தில்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பில் பேசிய மத்திய கனரக தொழில் மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான நிச்சயமற்றத் தன்மையை மீறி, இந்திய ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதாக அமைச்சர் கூறினார்.
"2024ம் ஆண்டில் இத்துறை 26.1 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்து, 9 சதவீத வளர்ச்சி கண்டது,” என அமைச்சர் தெரிவித்தார்.
உற்பத்தி சார்ந்த ஊக்கம் (PLI) திட்டம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், ரூ.25,936 பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட ஆட்டோமொபைல் மற்றும் துணைப்பொருட்கள் துறையில், 115 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 82 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.42,500 கோடி பட்ஜெட்டில், ரூ.2,31,5000 கோடி அதிகரிக்கும் விற்பனை மற்றும் 1.4 லட்சம் வேலைவாய்ப்பு ஐந்தாண்டுகளில் எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சர் கூறினார்.
"2024 செப்டம்பரில், இதுவரை ரூ.20,715 கோடி முதலீடு மற்றும் ரூ.10,472 கோடி விற்பனை உயர்வு ஏற்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி-பிடிஐ
Edited by Induja Raghunathan