1 ரூபாய் இட்லி: ஏழைகளின் பசிப் பிணி போக்கும் கோவை பாட்டிக்கு குவிந்த உதவிகள்...
கோவை பேரூர் தாலூகாவில் உள்ள 80 வயதான கமலா பாட்டி விவசாய வேலை, தினக்கூலி தொழிலாளர்கள் வயிறாரச் சாப்பிட விலையை ஏற்றாமல் இன்றளவும் 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்.
இந்த காலத்தில் 1 ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? 1 சாக்லேட் வாங்கி வாயில் போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான் செய்யமுடியும். இன்று தர்மம் கேட்பவர்களுக்குக்கூட 1 ரூபாய் போட முடியாது. குறைந்தபட்சம் 5 ரூபாயாவது போட்டால்தான் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அந்தளவுக்கு விலைவாசி விண்ணைத் தொட்டு விடும் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருள்களின் விலையும் கன்னாபின்னாவென உயர்ந்து வருகிறது. இதில் உணவுப் பொருள்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.
காசுச் செலவானாலும் பரவாயில்லை, வயிறு நிறைந்தால் போதும், அதுவும் ஆரோக்கியமாகவும், வீட்டுச் சமையல் போலவும் இருக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும் கூட.
முன்பெல்லாம் ஹோட்டலுக்குச் சென்றால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, பில் பணம் கொடுத்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் இப்போது நாம் சாப்பிட்ட பில்லுக்கும் சேர்த்து வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் பெரும்பாலானவர்கள் வரித் தொல்லை இல்லாத கையேந்தி பவன்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நடுத்தர வர்க்கத்துக்கேற்ற அதிக விலையில்லாத இந்த கையேந்தி பவன்களில் ஓர் இட்லி ரூ. 5-க்கும், ஓர் தேசை ரூ. 10-க்கும் என சராசரி மனிதர்களின் வாங்கும் திறனுக்கேற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கும் குறைவான விலையில் எங்கேனும் உணவு கிடைக்குமா எனத் தேடினால், கிடைக்கும் என்ற பதில், முகவரியோடு வருகிறது.
கோவை மாவட்டம், பேரூர் தாலூகாவில் உள்ள வடிவேலம்பாளையத்தில் கமலாத்தாள் பாட்டி என்பவர் வைத்திருக்கும் இட்லிக் கடையில் இன்றும் இட்லி 1 ரூபாய்க்கு விற்கப்படுவது ஆச்சரியமான உண்மை.
வீட்டை ஓட்டிய கடை, வருபவர்கள் திண்ணையில் அமர்ந்து மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை விண்டு சுவைத்துக் கொண்டிருக்கின்றனர். 80 வயதான கமலா பாட்டி தனது பணியில் பிஸியாக இருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
30 ஆண்டுகளாக இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். தினசரி என் கடைக்கு சாப்பிட வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள், விவசாயிகள், மாணவர்கள். அதனால்தான் எனக்கு விலையை ஏற்ற மனமில்லை. அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு செல்லட்டுமே என்கிறார்.
சுடச்சுட இட்லி, தொட்டுக்க காரமான சட்னி, சாம்பார், துணையாக ரூ. 2.50-க்கு பாட்டி சுடும் கடலை மாவு போண்டோ என காலை உணவு பிரமாதமாக மிகக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறார். காலை 6 மணிக்கு தொடங்கும் இவரது கடை பிற்பகல் 12.30 மணி வரை பிஸியாக இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் இட்லிகளை சாதாரணமாக விற்றுவிடுகிறார்.
இந்த விலையில் எப்படி கட்டுப்படியாகிறது எனக் கேட்டால்,
விவசாய வேலை மற்றும் தினக்கூலியாக பணியாற்றுபவர்கள் தினசரி காலை உணவுக்கென 50, 100 செலவு செய்வது கஷ்டம். அதனால்தான் இந்த விலையில் விற்கிறேன். இதில் எனக்கு போதுமான அளவுக்கு லாபம் கிடைக்கிறது. அது போதும் எனக்கு என்கிறார்.
அப்பகுதியில் ஹோட்டல் வைத்திருக்கும் பலரும் பாட்டியை அணுகி, விலையை சற்று உயர்த்துமாறு கோரியபோதும், அன்பாக அதனை மறுத்த பாட்டி, தன் காலம் உள்ளவரை இந்த விலையிலேயே விற்க உள்ளதாக தெரிவிக்கிறார். ஏழைகளின் பசிப் பிணி போக்கும் இந்த வேலையை வியாபாரமாக கருதாமல், ஓர் அறப்பணியாக செய்து வருகிறார் கமலா பாட்டி.
பாரம்பரியமான மண் பூசிய விறகு அடுப்பில் அவித்து எடுக்கப்படும் இட்லிகள், இலைத்தட்டில் சட்னி, சாம்பாரோடு சேர்ந்து பாட்டி கையால் பரிமாறப்படும்போது சுவையை சுவை என வாடிக்கையாளர்கள் புகழ்கின்றனர்.
மேலும், கடையில் டேபிள், சேர் எதுவும் இல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுவது, சொந்த வீட்டில் பாட்டி கையால் சாப்பிடுவது போலவே உள்ளது என மனம் நெகிழ்கின்றனர்.
சாப்பிட்டு முடிக்கும் எவரிடமும் பாட்டி கணக்குக் கேட்பதில்லை. அவர்களாகவே சாப்பிட்ட உணவுக்குண்டான தொகையை அவரிடம் அளித்துச் செல்கின்றனர் என்பது மற்றுமொரு சிறப்பு. குறைந்த விலையில் அளித்தாலும், தரமானதாக அளிக்கவேண்டும் என்பதற்காக பாட்டியே தனது கைகளால் தினசரி சமையலுக்குத் தேவையானவற்றை அரைத்து எடுக்கிறார். இதுவே இவரது சட்னி, சாம்பாரின் சுவைக்கான ரகசியம்.
கமலா பாட்டியின் இட்லி கதை சில ஊடகங்களில் வெளிவந்ததும் அவரை புகழ்ந்து தள்ளியோர் ஒரு பக்கம் இருக்க, அவருக்கு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்தனர் பலர். பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டியின் கதையை ஷேர் செய்து,
“இந்த வயதிலும் கரி அடுப்பில் சமைக்கும் கமலாத்தாள் பாட்டியின் பிசினசில் நான் முதலீடு செய்ய விரும்புகிறேன். அவருக்கு எல்பிஜி அடுப்பு தர விரும்புகிறேன் என்று பதிவிட்டார்.
மஹிந்திராவின் ட்வீட்டை அடுத்து ‘பாரத் கேஸ்’ கோவை கமலாத்தாள் பாட்டிக்கு உடனடியாக கேஸ் மற்றும் அடுப்பை வழங்கினர். பாட்டியின் உழைப்பிற்கான பலன் அதோடு நிற்கவில்லை.
குடிசை வீட்டில் வசிக்கும் கமலாத்தாள் பாட்டியை நேரில் சந்தித்த கோவை ஆட்சியர், பாரத பிரதமர் ‘வீடு கட்டித்தரும்’ திட்டத்தின் கீழ் பாட்டிக்கு வீடு கட்டித் தரப்படும் என்று தெரிவித்தார். அதே போல் மும்மையைச் சேர்ந்த தைரோகேர் நிறுவனம் பாட்டிக்கு மாவு அறைக்கும் க்ரைண்டரை இலவசமாக வழங்கியது.
இப்படி பாட்டியை தேடி தினமும் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருள் உதவி என செய்து வருவது மகிழ்ச்சிகரமான தகவல்.
தள்ளாத வயதிலும் தளராமல் உழைக்கும் கமலா பாட்டி இன்னும் 100 ஆண்டுகள் நீடுடி வாழ வேண்டும் என வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வாய் நிறைய வாழ்த்திப் போகின்றனர் அப்பகுதி மக்கள். வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் இதுபோன்ற மனமார்ந்த வாழ்த்துக்களைத் தவிர.