கடை நடத்தி நஷ்டம்; ஆன்லைனில் 60 லட்சம்: Flipkart விற்பனையாளராக கலக்கும் கவுரவ்!
முன்னாள் வங்கியாளரான கவுரவ் நாக்பால், பிளிப்கார்ட் விற்பனை மூலம் ரூ.60 லட்சம் ஈட்டுவதோடு, வெற்றிக்கான வழிகளையும் கண்டறிந்துள்ளார்.
“கடின உழைப்பு மற்றும் பிளிப்கார்ட் போன்ற மேடையின் உதவியோடு ஒருவர் எந்த அளவு சாதிக்க முடியும் என்பதற்கான வெற்றிகரமான உதாரணமாக என் கதை அமைகிறது,” என்கிறார் ஃபிளிப்கார்ட் விற்பனையாளராக விளங்கும் கவுரவ் நாக்பால்.
இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பரவலாக்கம் இந்தியாவில் பலவகை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றிக்கான மிகப்பெரிய தாக்கம் இ-காமர்ஸ் துறையில் நிகழ்ந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்களின் எழுச்சி இந்திய பொருட்களை வாங்கும் விதத்தை மாற்றியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இ-காமர்ஸ் துறை குறும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தி வருவதாக இந்தியா பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் தெரிவிக்கிறது.
மேலும், குறு தொழில்முனைவோர் வளர்ச்சி பெறவும் இ-காமர்ஸ் எழுச்சி உதவியுள்ளது. பலருக்கு இ-காமர்ஸ் என்பது வெற்றிகரமான தொழில்முனைவுக்கான வாயிலாக மாறியிருக்கிறது. வங்கித்துறையில் நிலையான பணியை விட்டு விலகி தொழில்முனைவு பாதையை தேர்வு செய்த கவுரவ் நாக்பால் இத்தகைய வெற்றிக்கதைகளில் ஒருவராக விளங்குகிறார்.
விடாமுயற்சி
நான் எப்போதுமே தொழில்முனைவோராகத் தான் விரும்பினேன் என்கிறார் தில்லி பல்கலை பட்டதாரியான கவுரவ். எனினும் படிப்பை முடித்ததும் எம்பிஏ படித்து வங்கித்துறையில் பணிக்கு சேர்ந்தார்.
“என் உள்ளுணர்வை பின்பற்றி நடக்கும் துணிவை பெற நான்கு ஆண்டுகள் ஆனது. 2015ல் தில்லியில் சிறிய கடை ஒன்றை திறந்தேன். முதல் ஆண்டு வர்த்தகம் சிக்கல் இல்லாமல் அமைந்தது. ஆனால் அதன் பிறகு வர்த்தகம் மோசமாகி 2016ல் கடையை மூட வேண்டியிருந்தது. ஆனால் நான் கனவை கைவிடத் தயாராக இல்லை,” என்கிறார் கவுரவ்.
ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, 2017 ல் அவர், தனது ஜி.என்.எண்டர்பிரைசஸ் மூலம் பிளிப்கார்ட்டில் விற்பனையாளராக தீர்மானித்தார்.
விற்பனை பாடங்கள்
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருந்தவர் என்ற முறையில் கவுரவ், தனது ஆன்லைன் வர்த்தகப் பயணத்தை எளிதாகத் துவக்கினார். மென் பொம்மைகளை தயாரித்த நண்பரின் உதவியோடு அவர் பெரிய அளவிலான கரடி பொம்மைகளை ஆன்லைனில் விற்பனை செய்தார். வர்த்தகம் சிக்கல் இல்லாமல் வளர்ந்தது.
“இருப்பினும், சிறந்த முறையில் தயாராக வேண்டும் என உணர்ந்தேன். எனவே நானும், என் மனைவியும் ஃபிளிப்கார்ட் நடத்தும் பயிற்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்றோம். ஆன்லைன் பயிற்சி ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. விளம்பரம் மற்றும் சலுகைகளை வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்தலாம் என கற்றுக்கொண்டேன்,” என்கிறார் கவுரவ்.
“உதாரணமாக, வாடிக்கையாளர் எப்போதுமே புதிய பொருட்களை எதிர்பார்ப்பதால், எங்கள் பொருட்களை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என உணர்ந்தேன்,” என்கிறார்.
இதன் காரணமாக, மென் பொம்மைகளில் இருந்து மின்னணு பொருட்களுக்கு விரிவாக்கம் செய்தார். இந்த மூன்று ஆண்டுகளில், கிச்சன் பொருட்கள், மின்னணு பொருட்கள், பொம்மைகள் என பல பொருட்களை விற்பனை செய்கிறார்.
பொம்மைகளை இன்னமும் நண்பர் ஆலையில் இருந்து தருவித்தாலும் மற்ற பொருட்களை இந்தியா மற்றும் சீனாவில் இருந்து தருவிக்கிறார்.
“இந்தத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பொருட்களை விரிவாக்கம் செய்ய நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆனால் நல்ல பலன் உள்ளது. ஒரே நாளில் வர்த்தகத்தை உருவாக்க முடியாது என உணர வேண்டும்,” என்கிறார் கவுரவ்.
பொருட்களை தருவிப்பதால் அவற்றின் தரத்தை சோதித்து உறுதி செய்து கொள்வதாக கூறுகிறார். இந்த பாடத்தை கடினமாக முறையில் கற்றதாகவும் கூறுகிறார்.
“துவக்கத்தில் நிறைய பொருட்கள் திரும்பி வந்ததை கவனித்தேன். இந்தப் பிரச்சனையை எப்படி கையாள்வது எனத்தெரியவில்லை. எனவே திரும்பி வந்த பொருட்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்குவதை நிறுத்தினேன். இன்று பொருட்களை தரத்திற்காக சோதிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில்லை,” என்கிறார்.
கடையை மூடியதில் இருந்து சொந்தமாக வர்த்தகம் துவங்கி ஆண்டுக்கு ரூ.70 லட்சம் விற்றுமுதல் அளவுக்கு கவுரவ் வளர்ந்திருக்கிறார்.
“என் கதையில் ஃபிளிப்கார்ட் முக்கிய அங்கம் வகிக்கிறது. என் நஷ்டத்தை ஈடு செய்ய முடிந்ததோடு, வர்த்தகத்தில் வெற்றி பெறும் கனவும் நிறைவேறியுள்ளது. ஃபிளிப்கார்ட் இல்லை என்றால், இந்த அளவு வெற்றி பெற்றிருக்க முடியாது,” என்கிறார் கவுரவ்.
ஆங்கிலத்தில்: சிந்து எம்வி | தமிழில்: சைபர் சிம்மன்