‘ரத்தன் டாடா’ - ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கும் டாடா-வின் மேற்கோள்கள்!
இந்தியாவின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா பிறந்த நாளில் அவரது மேற்கோள்கள் மூலம், அந்த மகத்தான மனிதரை மேலும் அறிந்து கொள்வதோடு, ஊக்கமும், நம்பிக்கையும் பெறலாம்.
ரத்தன் டாடா முன்னோடித் தொழிலதிபர் மட்டும் அல்ல, மகத்தான மனிதரும் கூட. இந்தியாவின் முன்னணி தொழில் குழுமத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர், இப்போது டாடா சன்ஸ் புறவலராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மனதில் இளமைத்துடிப்புடன் வலம் வருபவர், இளைஞர்களுடனும், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடனும் நெருங்கிப் பழகி வழி காட்டி வருகிறார். இந்தியாவின் தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட் அப் சூழலில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர், தனிப்பட்ட முறையில் பல ஸ்டார்ட் அப்களை ஆதரித்தும் வருகிறார்.
ஊக்கம் மிக்க முன்னோடி மனிதரான ரத்தன் டாடா-வின், இவரது மேற்கோள்கள் மூலம் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பெறலாம்.
சவால்கள் காட்டும் புதிய பாதை
"சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், சுவாரஸ்யமான, புதுமையான தீர்வுகளை கண்டறியலாம். சவால்கள் இல்லை எனில், ஒரே பாதையிலேயே சென்று கொண்டிருக்கும் மனப்போக்கு அமைந்துவிடும்.”
அரசியல் இல்லை
“நான் நிச்சயம் அரசியலில் சேர மாட்டேன். மேல் தோற்றத்தின் கீழ், எந்தவித திருப்பங்கள், மாற்றங்களையும் மேற்கொண்டிராத, ஆனால் ஒரளவு வெற்றி பெற்ற, தூய்மையான தொழில்முனைவோராக நான் அறியப்பட விரும்புகிறேன்.”
பெரிய பாதங்கள்
“பெரிய பாதங்கள் கொண்ட ஒருவரை பின்பற்றி வந்திருக்கிறேன். ஜே.ஆர்.டி.டாடா பெரிய பாதங்கள் கொண்டிருந்தார். இந்திய வர்த்தக சமூகத்தில் அவர் ஒரு ஜாம்பவான். டாடா நிறுவனத்தை அவர் 50 ஆண்டுகள் வழிநடத்தியிருக்கிறார். அவர் எப்போதுமே இருப்பார் என நீங்கள் நினைக்கத் துவங்குவீர்கள்.”
இந்திய ஆற்றல்
“இந்தியாவின் ஆற்றல் குறித்து எப்போதுமே உற்சாகம் கொள்கிறேன். இன்னமும் இதை நம்புகிறேன். இந்தியா அளப்பறிய ஆற்றல் கொண்டிருக்கிறது மற்றும் வெற்றி பெறுவதற்குத் தேவையான மனித வளத்தை பெற்றுள்ளது.”
கேளுங்கள்
“மனிதர்களை ஊக்குவிக்குமாறும், கேள்வி கேட்கப்படாதவற்றை கேள்வி கேட்கும் படியும், செயல்களை செய்து முடிக்க, புதிய செயல்முறை மற்றும் புதிய எண்ணங்களைக் கொண்டு வர தயங்க வேண்டாம் என்றும், எப்போதும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.”
ஸ்டார்ட் அப்கள்
“புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் படைப்பாக்கம் மற்றும் இளைஞர்களின் புதுமையாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. என்னைப்பொருத்தவரை ஸ்டார்ட் அப்களுடன் தொடர்பு கொள்வதை மதிப்பு வாய்ந்த அனுபவமாக கருதுகிறேன்.”
'பணம் ஈட்டுவது தவறல்ல, ஆனால் அதை அறத்துடன் செய்ய வேண்டும்’– ரத்தன் டாடா!
எல்லைகள் வேண்டாம்
“சுயமாக உருவாக்கிக் கொண்ட சில எல்லைகளை விலக்கிக் கொள்ள முடிந்தால், உலகின் பொருளாதார வல்லரசாக தனது இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்கர்கள் போல, நம்மை இந்தியர்களாக கருதாமல் பார்சிகளாக, பஞ்சாபிகளாக கருதிக்கொள்வதாக இது நிகழவில்லை. இத்தகைய எல்லைகளை உருவாக்க வேண்டாம்.”
இணைந்து நடந்து செல்லுங்கள்
”வேகமாக நடந்து செல்ல வேண்டும் எனில் தனியே செல்லுங்கள், நெடுந்தூரம் செல்ல வேண்டும் எனில், இணைந்து நடந்து செல்லுங்கள்.”
கற்கள் மாளிகையாகும்
”மற்றவர்கள் உங்கள் மீது எரியும் கற்களை சேகரித்து கொள்ளுங்கள். அவற்றைக் கொண்டு நினைவுச்சின்னம் உருவாக்குங்கள்.”
முடிவு எடுங்கள்
“சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவு எடுத்து அதை சரியானதாக மாற்றுகிறேன்.”
இரும்பின் உறுதி
“இரும்பை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் அதுவாகவே துரு பிடிக்கும். அதே போல தான், ஒருவரை யாராலும் அழிக்க முடியாது. அவரது மனப்போக்கே இதற்குக் காரணமாகும்.”
நேர்மை முகம்
“எனது பாதையில் நான் யாரையேனும் காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், எந்த சூழலிலும் சமரசம் இல்லாமல் சரியானவற்றை செய்ய முயன்ற நபராக நான் பார்க்கப்பட விரும்புகிறேன்.”
ஊக்கம் கொள்ளுங்கள்
“தீவிரமாக இருக்க வேண்டாம். வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள்.”
'இந்த கடினமான காலங்களில்தான் புரட்சிகரமான தீர்வுகள் உருவாகும்’ – ரத்தன் டாடா!
நகல் வேண்டாம்
“மற்றவர்கள் செய்வதை நகலெடுப்பவர்கள் தற்காலிகமாக வெற்றி பெறலாம் ஆனால், வாழ்க்கையில் அவரால் மேலும் முன்னேற முடியாது.”
ஈடுபாடு
“ஒரு நிறுவனருக்கு ஈடுபாடும், புதுமையாக்கமும் இருந்தால் அவரை ஆதரிக்க வேண்டும். எண்களை நம்புவதை விட, நான் உள்ளுணர்வு சார்ந்தவன். எல்லா முதலீடுகளும் வெற்றி பெறாத என எனக்குத்தெரியும். சில தோல்வி அடையலாம். சில வேறு காரணங்களுக்காக பிரச்சனையை சந்திக்கலாம். இது தான் வாழ்க்கை.”
சமூக நலன்
“வர்த்தகங்கள் தங்கள் நிறுவன நலனைத் தாண்டி, தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும்.”
'4 காதல் தோல்வி; இந்தியாவின் பிஸினஸ் ஹீரோ'- ரத்தன் டாட்டா எனும் மாமனிதர்!