5 முக்கிய ஆணையில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: அவை என்னென்ன?
தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், முதல் கையெழுத்தாக 5 அரசாணையில் கையெழுத்திட்டார்.
தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது. அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் தலைமைச்செயலகம் சென்றார்.
முதல்வராக பதவியேற்பு அறிவிப்பு வெளியான போதே, ஸ்டாலின் முதல் கையெழுத்தில் எந்த திட்டத்தில் இடப்போகிறார் என்று பேச்சுக்கள், எதிர்ப்பார்ப்புகள் எழுந்தது.
காரணம், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், புதிதாக பதவியேற்கும் முதல்வர்கள் முதலில் எந்த திட்டத்திற்குக் கையெழுத்திடப் போகிறார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்படும். அதற்கேற்பவே முதல்வர்கள் முதல் கையெழுத்தை பல்வேறு திட்டங்களுக்கு இட்டுள்ளனர்.
2011-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் இலவசம், 500 டாஸ்மாக் கடைகள் மூடல் போன்ற கோப்புகளில், முதல் கையெழுத்தாக இட்டார்.
இதற்கடுத்த தேர்தலிலும், இதேபோல் சில திட்டங்களில் கையெழுத்திட்டார். எடப்பாடி பழனிசாமியும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்றவற்றில் முதல் கையெழுத்திட்டார். இந்த நிலையில் தான் ஸ்டாலின் மீதும் எதிர்பார்ப்பு நிலவியது.
பிரச்சாரத்தின் போது பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின். மக்கள் பிரச்சனைகளை 100 நாட்களுக்குத் தீர்ப்பது, கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி, ரேஷன் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்புக் கொடுப்பது போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்.
இதேபோல், தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். இதில் எந்த திட்டத்தில் முதல் கையெழுத்து போடப்போகிறார் என்பதற்கு விடை இன்று கிடைத்திருக்கிறது. தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், முதல் கையெழுத்தாக அனைவரும் எதிர்பார்த்தபடி,
* 2.07 கோடி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, ரூபாய் 2000 வீதம் முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
* ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மே 16 முதல் அமலுக்கு வருகிறது. இந்த அரசு ஆணையிலும் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
* அரசு நகரப் பேருந்துகளில் நாளை முதல் அனைத்து மகளிருக்கும் இலவச பயணம் அறிவிக்கும் அரசு ஆணையில் கையெழுத்திட்டார்.
* கொரோனா நோய்க்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே இனி, அரசுக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்.
* ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குள் மக்களின் புகார் மனுக்களின் மீது தீர்வு காணப்படும் எனும் ஆணையில் இன்று கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.